புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 அக்., 2019

சூடுபிடித்துள்ள கனேடிய நாடாளுமன்றத் தேர்தல் களம்

கனேடிய நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், எதிர்பாராத திருப்பங்களை நோக்கி தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறது.
கனேடிய நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், எதிர்பாராத திருப்பங்களை நோக்கி தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறது.

தலைவர்களுக்கிடையிலான நேரடி விவாதங்கள் அனைத்தும் முடிவடைந்துள்ள நிலையில், இறுதி வாரப்பபரப்புரை சூடுபிடிக்கும் நிலையில், களநிலைகள் எதிர்பாராத மாற்றங்களை சுட்டி நிற்கின்றன.

பெரும்பான்மை ஆட்சியமைக்கும் நிலையை, தற்போதைய களநிலை முற்றாக இல்லாதொழித்துள்ளது. பெரும்பான்மைக்குத் தேவையான 170 தொகுதிகளை வெல்லும் நிலை, எந்தவொரு கட்சிக்கும் சாத்தியமே இல்லை.

அதிக தொகுதிகளை வெல்லும் கட்சி என்ற நிலையை, எய்துவது லிபரலா? கன்சவேட்டிவா? என்பதில் இழுபறி நிலையிலேயே உள்ளது. ஈற்றில் லிபரல் இந்நிலையை ஏய்தினாலும், ஏனையவர்களுடன் சேர்ந்தாவது பெரும்பான்மையை ஆட்சியமைக்கும் நிலை வேறு அரிதாகி வருகிறது. அதேவேளை கன்சவேட்டிவ் கட்சியாலும் அது சாத்தியமில்லை.

லிபரல் கட்சி ஆதரவு அனைத்து மாநிலங்களிலும் வீழ்ச்சியைக் கண்டுள்ளது. இவ்வீழ்ச்சி தொடர்ந்தும் இருக்குமா? என்பதே தற்போதைய பெரும் கேள்வியாகியுள்ளது.

அவ்வாறு தொடருமானால், அதிக தொகுதிகளை வென்ற கட்சி நிலையை லிபரல் இழக்கலாம். அத்துடன் விவாதங்களில் சிறப்பாக செய்யத் தவறிய ஜஸ்ரின் ரூடோவின் தலைமைத்துவத்திற்கான தேர்தலுக்குப் பின்னான ஆபத்தை அது அதிகரிக்கலாம்.

கியூபெக்கில் கடந்த முறை 2015இல் வென்ற 40 தொகுதிகள் நிலையைக் கடந்து, இம்முறை மேலதிக தொகுதிகளை வெல்லக் களமமைத்த லிபரல் கட்சி, அந்நிலையை எய்தும் நிலையில் இருந்து கடந்த ஒரு வாரத்தில் மோசமாக அங்கு சறுக்கியிருக்கிறது.

தற்போது அவ் 40 தொகுதிகளை தக்கவைக்கவே போராடும் நிலைக்கு அது தள்ளப்பட்டுள்ளது. 2008இல் புளொக் கியூபெக்கிற்கும், 2011இல் என்.டி.பிக்கும், 2015இல் லிபரல்க் கட்சிக்கும் பெருவாரியாக வாக்களித்த கியூபெக் மக்கள், இம்முறையும் மாற்றமாக புளொக் கியூபெக்கிற்கு அதிகரித்த தொகுதிகளை வழங்கிவிடுவார்களா? என்ற நிலையே அங்கு தோன்றி வருகிறது.

கியூபெக்கில் துடைத்தழிக்கப்படுவார்கள் என சொல்லப்படும் என்.டி.பி ஒன்று அல்லது அதிகபட்சம் இரண்டு தொகுதிகளை அங்கு வென்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

என்.டி.பி தலைவர் ஜஸ்மீட் சிங் ஆங்கில மொழி விவாதத்தில் சிறப்பாகச் செய்தவர் என்பதை, பெரும்பாலானவர்கள் ஏற்றுக் கொணடமை, அவர் கட்சிக்கான வலுநிலையை அதிகரித்துள்ளது.

குறிப்பாக பிரிட்டிஸ் கொலம்பியா, சஸ்கச்சுவான், மனிட்டோபா, மற்றும் அட்லான்டிக் கனடா போன்ற பகுதிகளில் அவ்வாக்கு வங்கி அதிகரிப்பு தெரிகிறது. இது வெல்லக் கூடிய தொகுதகிளில் ஆன எண்ணிக்கையிலும் அதிகரிப்பை அக்கட்சிக்கு வெளிப்படுத்துகிறது.

இறுதி நேர வாக்களிப்பில் என்.டி.பியில் இருந்து லிபரலுக்கு செல்லும் வாக்கு வங்கியை பெரிதும் இல்லாதொழித்து, அதேவேளை லிபரலில் இருந்து சிறிய வாக்கு வங்கியை என்.டி.பி பக்கம் சேர்த்தும் உள்ளது.

ஆங்கில மொழி விவாதத்தின் பின்னர், 25 சதவீத லிபரல் ஆதரவாளர்களும், இதுவரை வாக்கைத் தீர்மானிக்காதவர்களில் அதிகரித்த எண்ணிக்கையினரும், ஜஸ்மீட் சிங்கே வெற்றியாளர் எனக் கருதியது, தற்போது வாக்கு வங்கியிலும் எதிரொலிக்க ஆரம்பித்துள்ளது.

கன்சவேட்டிவ் கட்சியின் வாக்கு வங்கியிலும் சிறிய சறுக்கல் தெரிந்தாலும், அது அவர்கள் வெல்லும் தொகுதிகளின் எண்ணிக்கையில் எவ்வித மாற்றத்தையும் பெரிதாக ஏற்படுத்தவில்லை.

அதேவேளை லிபரல் கட்சியின் சறுக்கல் இவர்களுக்கு வாய்ப்பாக இதுவரை அமையவில்லை. அது புளொக் கியூபெக்கிற்கும், என்.டி.பிக்கும் சாதகமாகவே இதுவரை அமைந்துள்ளது. குறிப்பாக அல்பேட்டாவின் 34 தொகுதிகளையும் முழுமையாக வெல்லும் நிலையிலேயே கன்சவேட்டிவ் உள்ளது.

என்.டி.பியின் பிரிட்டிஸ் கொலம்பியாவிலான வளர்ச்சி லிபரலை விட கன்சவேட்டிவையே தற்போதைய நிலையில் அங்கு பாதிக்கிறது. அதேவேளை லிபரல், என்.டி.பி இடையே எழக்கூடிய கடுமையான போட்டி கன்சவேட்டிவிற்கு மேலதிக சில தொகுதிகளை வழங்கும் சாத்தியத்தை மறுப்பதற்கும் இல்லை.

கனடா மக்கள் கட்சித் தலைவர் மக்சி பேனியரை அவரது தொகுதியிலேயே தோற்க்கடிக்க கன்சவேட்டிவ் கட்சி கடுமையாக உழைக்கிறது.ஆனால் தனது தனயனுக்காக களம் கண்டு கடுமையாக உழைக்கிறார், டொறிஸ் பேனியர். 13 ஆண்டுகள் கனடிய பாராளுமன்ற உறுப்பினராக இருந்து மக்களிடம் பெற்ற நன்மதிப்பை, மகன் மக்சி பேனியரின் வெற்றிக்கான மூலதனமாக்கியுள்ளார் தந்தையார். அதில் அவர்கள் வெற்றி பெற்றும் வருகின்றனர் என்பதே இன்றைய களநிலை.

லிபரல்க்கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டு, சுயேற்சைகளாக போட்டியிடும் யூடி வில்சன் மற்றும் பில்பொட்டில், யூடி வில்சன் பிரிட்டிஸ் கொலம்பியாவில் கடும் போட்டியில் உள்ளார்.

ஆனால் அவரை எப்படியும் தோற்க்கபடிப்பதில் லிபரல் குறிப்பாக இருப்பதுவுடன், தற்போதைய நிலையில் முன்னணியிலும் உள்ளது. பில்போட் தான் முன்னணியில் உள்ளதாகச் சொன்னாலும், உள்ளகத் தரவுகள் அவரை மூன்றாம் இடத்திலேயே காட்டுகின்றன.

பசுமைக்கட்சி பிரிட்டிஸ் கொலம்பியாவில் மட்டுமே பெரும் தாக்கம் செலுத்தும் நிலை தொடர்கிறது. அங்கு 3 முதல் 4 தொகுதிகளை வெல்லும் நிலை இருந்தாலும், என்.டி.பியுடனான போட்டியில் ஈற்றில் சறுக்குமா? என்பதே தொடர்ந்து அவதானிக்க வேண்டிய விடயம்.

மறுபுறத்தில் அட்லாண்டிக் கனடாவில் என்.டி.பியை விட அதிகரித்த வாக்கு வங்கியை வெளிப்படுத்தினாலும், என்.டி.பியை போல் தொகுதிகளை வெல்லும் நிலையில், அவை அமையாதமை பலவீனங்களே.

பெரும் பொருதும் தேர்தல் களமான ஒன்ராரியோவின் 121 தொகுதிகளில் பெரிய மாற்றங்கள் தற்போதும் தென்படவில்லை. ஆனால் போட்டி இன்னும் கடுமையாகி வருகிறது. அது வரும் நாட்களில் எத்தகைய மாற்றங்களை நோக்கிப் பயணிக்கும் என்பதை தொடர்ந்தும் பார்ப்போம்.

கடந்த ஒக்டோபர் 7ஆம் நாள் திங்கட்கிழமை, நடைபெற்ற தலைவர்களுக்கிடையிலான ஆங்கிலமொழி விவாதத்தை, 10 மில்லியன் மக்கள் அதாவது வாக்காளர்களில் 40 சதவீதத்தினர், முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ பார்வையிட்டோ அல்லது செவிமடுத்தோ உள்ளனர்.

லெகர் நிறுவனம், கனேடியன் பிரஸ் செய்தி நிறுவனத்திற்காக நடத்திய கருத்துக் கணிப்பில், 29 சதவீதம் பேர் ஜஸ்மீட் சிங்கே சிறப்பாக செய்ததாக தெரிவித்துள்ளனர். 22 பேர் கன்சவேட்டிக் கட்சித் தலைவர் அன்ரூ செயரையும், 20 சதவீதம் பேர் லிபரல் கட்சித்தலைவர் ஜஸ்ரின் ரூடோவையும் தெரிவு செய்துள்ளனர்.

அதேவேளை இனவேட்டிவ் ரிசேச் குரூப் நடத்திய கருத்துக் கணிப்பில். ஜஸ்மீட் சிங் 32 சதவீத ஆதரவுடன் முதலிடத்திலும், 21 சதவீதத்தில் அன்ரு செயரும், 13 சதவீதத்துடன் ஜஸ்ரின் ரூடோவும் உள்ளனர்.

ஆனால் அபகஸ் நிறுவனம் நடாத்திய கணிப்பில், 29 சதவீதத்துடன் ஜஸ்மீட் சிங் முதலிடத்திலும், தலா 23 சதவீதத்துடன் அன்ரூ செயரும், ஜஸ்ரின் ரூடோவும் இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.

ஆகவே பலரின் கணிப்பின்படி ஆங்கிலமொழி விவாதத்தில் ஜஸ்மீட் சிங், அன்ரூ செயர், ஜஸ்ரின் ரூடோ எனத் தொடர்ந்து, நான்காம் இடத்தில் புளொக் கியூபெக்க்கட்சித் தவைலவர் பிராங்கோசிஸ் பிளஞ்செட்டும் தொடர்ந்து பசுமைக்கட்சித் தலைவர் எலிசபெத் மேயும், இறுதியில் கண்டுகொள்ளயப்படாதவராக கனடா மக்கள் கட்சித்தலைவர் மக்சி பேனியரும் வந்துள்ளனர்.

ஆங்கில மொழி விவாதத்திற்கு முன்னர், கியூபெக்கை மையப்படுத்தி மட்டும் கியூபெக்கில் நடைபெற்ற பிரெஞ்மொழி விவாதத்தில், புளொக் கியூபெக்க்கட்சித் தவைலவர் பிராங்கோசிஸ் பிளஞ்செட் சிறப்பாக செய்யததாக கியூபெக் மக்கள் கருதவதால், புளொக் கியூபெக்க்கட்சி கியூபெக் மாநிலத்தில் தொடர்ந்து அதிகரித்துவரும் மக்கள் ஆதரவைக் காட்டுகிறது.

அவ்விவாத்தில் பிளஞ்செட் வென்றதாக 58 சதவீத கியூபெக் மக்களும், 20 சதவீதம் ரூடோ என்றும், 11 சதவீதம் சிங் என்றும், அன்ரூ செயர் வெறும் 3 சதவீதத்தையே பெற்றார் என்றும் கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.

ஆனால் வியாழன் நடைபெற்ற நாடு தழுவிய பிரெஞ் மொழி விவாதம் பெரும் மாற்றத்தை வெளிப்படுத்தாது என்ற நிலையில், அதன் தாக்கத்தை வரும் நாட்களில் பார்க்கலாம்.

ad

ad