
பிரான்ஸ் அரசு அறிவித்த கடுமையான சிக்கன நடவடிக்கைக
ளுக்கு எதிராக அந்நாட்டு தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய பிரம்மாண்ட வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளன. இது அதிபர் மேக்ரான் தலைமையிலான அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.அரசின் பட்ஜெட் பற்றாக்குறையை குறைக்கும் நோக்கில், பொதுமக்கள் மீதான வரிகளை அதிகரிப்பது, நலத்திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகளை குறைப்பது போன்ற பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை அதிபர் மேக்ரான் அரசு முன்வைத்துள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நாட்டின் முன்னணி தொழிற்சங்கங்கள், இந்த நடவடிக்கைகள் ஏழை மற்றும் நடுத்தர மக்களை பெரிதும் பாதிக்கும் என்று குற்றம் சாட்டுகின்றன.
இன்றைய வேலைநிறுத்தத்தால், போக்குவரத்து, கல்வி, சுகாதாரம், மற்றும் அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பாரிஸ், மார்சேய், லியோன் போன்ற முக்கிய நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஏற்கனவே ஓய்வூதிய சீர்திருத்தங்களுக்கு எதிராக எழுந்த போராட்டங்களால் ஆட்டம் கண்ட மேக்ரான் அரசுக்கு, இந்த புதிய வேலைநிறுத்தம் மேலும் ஒரு சவாலாக அமைந்துள்ளது. மக்களின் கோபத்தை தணிக்கும் விதமாக அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதை உலகமே உற்றுநோக்கி வருகிறது.