வழக்கிற்கு பயந்து இறைச்சிக்கடை உரிமையாளர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை புங்குடுதீவு 11ம் வட்டாரத்தில் நடந்துள்ளது. மார்க்கண்டு புஸ்பநாதன் (58) என்பவரே தற்கொலை செய்து கொண்டுள்ளார். கடந்த 21ம் திகதி இவர் மாடொன்றை கொள்வனவு செய்து, அதனை இறைச்சியாக்கும் அனுமதி பெற பிரதேசசபை வளாகத்தில் கட்டியுள்ளார்.
ஆனால் ஊர்காவற்றுறைக்கு பொறுப்பான பொதுச்சுகாதார பரிசோதகர் அனுமதி வழங்கவில்லை. அதனை பொருட்படுத்தாமல் அவர் மாட்டை இறைச்சியாக்கிவிட்டார். இந்த விடயம் ஊர்காவற்றுறை பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, அவரை கைது செய்த பொலிசார் இன்று திங்கட்கிழமை நீதிமன்றத்தில் முற்படுத்தவிருந்தனர். கடந்த சில தினங்களாகவே அவர் மனச்சஞ்சலத்துடன் காணப்பட்டதாகவும், நீதிமன்றத்திற்கு செல்வதற்கு பயத்துடன் காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.