புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஆக., 2012

ஹொங்கொங் நாட்டின் நிலை இப்பொழுது ஈழத்திற்கு நெருங்கி வந்திருக்கிறது! விடுதலை இதழ்
ஹொங்கொங் என்றால் வைரம் வியாபாரம்தான் எல்லோருக்கும் தெரியும். பிரிட்டனின் ஆதிக்கத்தில் இருந்த இந்த நகரம் குத்தகைக் காலம் முடிந்து 1997ல் சீனா வசம் ஒப்படைக்கப்பட்டது.
ஆனாலும் ஹொங்கொங் தன்னாட்சி அதிகாரம் கொண்டதாகும்.
இப்பொழுது அங்கும் ஒரு பிரச்சினை! திபெத்தைப் போல ஹொங்கொங்கையும் தன் கைக்குள் கொண்டுவர வல்லரசாகிய சீனா திட்டமிட்டு விட்டது போலும்! ஹொங்கொங்கின் உள் விவகாரத்தில் சீனா தன் தலையை நீட்டும் வேலையில் இறங்கியது.
ஹொங்கொங் கல்விக் கூடங்களில் வரும் செம்டம்பர் முதல் சீனாபற்றிய தேசப் பக்தி வகுப்புகள் தொடங்கப்படத் திட்டமிடப்பட்டுள்ளதாம்.
இது ஹொங்கொங் மாணவர்கள் மூளையிலே சீனக் கலாச்சாரத்தைத் திணித்து மூளைச் சலவை செய்யும் செயல் என்று ஹொங்கொங் மாணவர்கள் வீதிக்கு வந்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
எந்த ஒரு சிறு இனமாக இருந்தாலும், அதன்மீது மாற்று இனம் தன் மொழி, கலாச்சாரப் பண்பாடுகளைத் திணிக்க முனைந்தால் (அது பெரும்பான்மை உடையதாக எண்ணிக்கையில் இருந்தாலும்) அதனை ஏற்றுக் கொள்ளாது என்பதற்கு எடுத்துக்காட்டுதான் ஹாங்காங் மக்கள் வீதிக்கு வந்து போராடும் செயலாகும்.
சீனா உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட மிகப் பெரிய வல்லரசு நாடாக இருக்கலாம்., அதற்காக அதன் ஆட்டத்தை சின்னஞ்சிறு நகரமான ஹொங்கொங் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை.
இது உலகில் உள்ள எல்லா நாடுகளுக்கும் பொருந்தக் கூடியதாகும். குறிப்பாக இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு நூற்றுக்கு நூறு பொருந்தக் கூடிய தாகும்.
1956இல் அங்கு ஒரு சட்டம் இயற்றப்பட்டது. சிங்களம் மட்டும்தான் ஆட்சி மொழி என்ற சட்டம் அது. பின்னர் நீதித்துறைகளிலும் சிங்களம் மட்டுமே என்ற நிலை பிறந்தது.
சிங்கள மொழியின் ஆதிக்கம், தமிழ் மொழிக்குரிய உரிமைப் பறிப்பு - இவற்றை எதிர்த்துத்தான் தொடக்கத்தில் ஈழத் தந்தை செல்வநாயகம் போராட்டத்தைத் தொடங்கினார் (1956 ஜூன் 5) அதுவும் காந்தியார் காட்டிய அந்த உண்ணாவிரதப் போராட்டத்தைத்தான் தொடங்கினார்.
அதைக்கூட சிங்கள வெறியர்கள் பொறுத்துக் கொள்ளவில்லை. அடித்துத் துவைத்தனர். சிலரைப் பக்கத்தில் ஓடிக் கொண்டிருந்த ஆற்றில் தூக்கியும் எறிந்தனர்.
அந்த இரத்தக் களரியோடு நாடாளுமன்றத்திற்குச் சென்றபோது பிரதமர் பண்டாரநாயக்கா ஏளனமாகச் சிரித்தார் எதற்காக இப்படி அடி வாங்கிச் சாகிறீர்கள்? சிஙகளவர்கள் கொஞ்சம் முரடர்கள். பேசாமல் கலைந்து செல்லுங்கள். தமிழ் என்றெல்லாம் பேசாதீர்கள், இனிமேல் சிங்களம் மட்டும்தான் ஆட்சிமொழி என்று சொன்னாரே!
அதன்பின் 1987ல் ராஜீவ் - ஜெயவர்த்தன ஒப்பந்தத்தில் சிங்கள மொழியோடு தமிழும் ஆட்சி மொழியாக ஏற்கப்பட வேண்டும் என்று சரத்தும் சேர்க்கப்பட்டதே - இதுவரை அது நடைமுறைப்படுத்தப்பட்டதா? இந்திய அரசுதான் தட்டிக் கேட்டதுண்டா?
இலங்கையின் இறையாண்மைக்குச் சேதாரம் இல்லாமல் இரு இனங்களும் ஒன்றாக வாழ வேண்டும் என்று இதோபதேசம் செய்யும் கட்சிகள் - குறிப்பாக மார்க்ஸிஸ்டு கம்யூனிஸ்டுக் கட்சியினர் இதற்கு என்ன பதிலை வைத்துள்ளனர்?
வரலாறு காட்டும் படிப்பினை பற்றியும் லெனினின் தேசிய இன உரிமைப் பற்றியும் பாடம் நடத்துபவர்கள் ஈழத் தமிழர் பிரச்சினை என்று வந்தால் மட்டும் ஒதுங்கிக் கொள்வது ஏன்?
மலேசியாவிலிருந்து சிங்கப்பூர் ஏன் பிரிந்தது? கம்யூனிஸ்டு நாடான செக்கோஸ்லோவேகியா இரு கூறுகளாகப் பிரிய வேண்டிய அவசியம் ஏன்? 15 மாநிலங்களைக் கொண்டு செயல்பட்ட சோவியத்து ஒன்றியம் தனித்தனியாகப் பிரிந்து சென்றது - ஏன்?
இந்த நிலை மற்ற எந்த இன மக்களைவிட இலங்கைத் தீவில் உள்ள ஈழத் தமிழர்களுக்கு நூற்றுக்கு நூறு பொருந்துமே! அவர்களின் தாய்மொழிக்கு ஆட்சிமொழி தகுதி கிடையாது.
சிங்களவர் ஒருவர்தான் அந்நாட்டின் குடியரசுத் தலைவராக வர முடியும் - அதுவும் அவர் புத்தமதத்தைச் சார்ந்தவராக இருக்க வேண்டும்.
இந்த ஒரு சார்பு நிலை போதாதா - சிங்களத்திடமிருந்து தமிழ் தனியாகப் பிரிந்து தனிநாடாக மலர்வதற்கு?
சேர்பியாவிலிருந்து விடுதலை பெற்றதாக கொசாவா 2008 டிசம்பரில் பிரகடனப்படுத்தியதை நெதர்லாந்தில் உள்ள சர்வதேச ஹேக் நீதிமன்றமும் அங்கீகரித்ததே! அதனைத் தொடர்ந்து நூற்றுக்கு மேற்பட்ட உலக நாடுகள் அதனை அங்கீகரித்தனவே!
அதே நிலை கிட்டத்தட்ட இப்பொழுது ஈழத்திற்கு நெருங்கி வந்திருக்கிறது. இந்த வகையில் டெசோ சார்பில் ஆகஸ்டு 12ல் சென்னையில் நடைபெறவிருக்கும் மாநாடு - அதற்கான நெருக்கத்தைக் கொடுக்கும் என்பதில் ஐயமில்லை.
தீர்மானம் என்ற ஒன்றுக்கு இடம் இல்லாமலேயே அந்தத் திசை நோக்கி நகர்த்திட சென்னை மாநாடு உந்து சக்தியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

ad

ad