புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 செப்., 2012

ஆரம்பமாகிறது உலகக் கிண்ண இருபது20 சமர்: முதல் போட்டியில் இலங்கையை எதிர்கொள்கிறது சிம்பாப்வே
 

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபது20 உலகக்கிண்ண கிரிக்கெட் சமர் இன்று இலங்கையில் ஆரம்பமாகின்றது. ஆடவர் மற்றும் மகளிருக்கான இந்த உலகக்கிண்ணத் தொடரில்
ஆடவர் பிரிவில் 12 அணிகள் களமிறங்குவதுடன் மகளிர் பிரிவில் 8 அணிகள் களமிறங்குகின்றன.

ஆசியாவில் முதன்முறையாக இப்போட்டித்தொடர் நடைபெறுகின்றமை பெருமைக்குரிய விடயமாகும். இதற்கு முன்னர் தென்னாபிரிக்கா, இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகளில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

டெஸ்ட் போட்டிகளை விட ஒருநாள் போட்டிகளைப் பார்வையிடுவதில் அதிக ஆவல் ரசிகர்கள் மத்தியில் காணப்பட்டது. இதையும் தாண்டி தற்போது இருபது20 போட்டித் தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் கடந்த 2007 ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவில் இடம்பெற்ற முதலாவது இருபது20 உலகக் கிண்ணத் தொடரில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை வெற்றிகொண்டது.

இதனையடுத்து 2007 ஆம் ஆண்டு இறுதிப்போட்டியில் இந்தியாவிடம் தோல்வியைத் தழுவிய பாகிஸ்தான் 2009 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற போட்டித் தொடரில் இலங்கையை வீழ்த்தி சாம்பியனானது.

பின்னர் கடந்த 2010 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்ற இருபது20 உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலிய அணியை வீழ்த்திய இங்கிலாந்து அணி கிண்ணத்தைத் தனதாக்கிக் கொண்டது.

இந்நிலையில் 4 ஆவது உலகக்கிண்ணம் இலங்கையில் இன்று ஆரம்பமாகின்றது. இன்று முதல் எதிர் வரும் ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி வரை நடைபெறவிருக்கும் இத்தொடரில் களமிறங்கும் அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில் குழு 'ஏ" யில் இங்கிலாந்து, இந்தியா, ஆப்கானிஸ்தான்
குழு 'பி" யில் அவுஸ்திரேலியா, மேற்கிந்திய தீவுகள், அயர்லாந்து
குழு 'சி"யில் இலங்கை, தென்னாபிரிக்கா, சிம்பாப்வே
குழு 'டி"யில் பாகிஸ்தான், நியூசிலாந்து, பங்களாதேஷ் அணிகள் இடம்பெற்றுள்ளன.


இதில் நடப்புச் சம்பியனாகக் களமிறங்கும் இங்கிலாந்து தொடர்ந்தும் கிண்ணத்தைத் தனதாக்கிக் கொள்ளுமா அல்லது ஏனைய அணிகள் சவாலை ஏற்படுத்தி கிண்ணத்தைத் தமதாக்கிக் கொள்ளுமா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

ஹம்பாந்தோட்டை மஹிந்தராஜபக்~ மைதானத்தில் இடம்பெற உள்ள இன்றைய முதலாவது போட்டியில் இலங்கை அணி சிம்பாப்வே அணியை எதிர்கொள்ளவுள்ளது.

இலங்கை அணியைப் பொறுத்தமட்டில் துடுப்பாட்டமும் பந்து வீச்சும் சிறப்பாகவே உள்ளது. சொந்த மண்ணில் களமிறங்க உள்ளதால் அணிக்கு பலமாக இருப்பதோடு அண்மையில் நடைபெற்று முடிந்த மஹேந்திரா ஸ்ரீ லங்கன் பிரிமியர் லீக் தொடர் நல்ல பயிற்சிக் களமாக அமைந்து அணியின் பலத்தை மேலும் அதிகரித்துள்ளது.

இருபது -20 போட்டியில் லசித்மாலிங்க சிறப்பான பந்து வீச்சு பிரதி உள்ளது. மேலும் சகலதுறை வீரர்களான திசர பெரேரா, எஞ்ஜலோ மெத்தியூஸ் ஆகியோர் கடந்த போட்டிகளில் சிறப்பாக செயற்பட்டுள்ளனர். மேலும் கடந்த பிரிமியர் லீக் தொடரில் இரண்டாவது அதி கூடிய ஓட்டங்களைப் பெற்றவராக மெத்தியூஸ் உள்ளார். இருப்பினும் சொந்த மண்ணில் விளையாடுவதால் அதிக அழுத்தங்கள் இலங்கை அணிக்கு உள்ளன. மத்தியவரிசை துடுப்பாட்டத்தைப் பொறுத்தவரையில் அண்மைக்காலங்களில் பெரிதாக சோபிக்கவில்லை. மேலும் அணியானது மாலிங்கவையும் மெத்தியூஸையும் சார்ந்துள்ளது.

எனினும் இந்தக் குறைநிறைகளை வைத்துக்கொண்டு இலங்கை அணி ஏனைய அணிகளை எவ்வாறு எதிர்கொள்ளபோகின்றது என்பது அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்.

இதேவேளை சிம்பாப்வே அணிக்கு இது 3ஆவது உலகக் கிண்ண போட்டித் தொடராகும். 2007,2010 ஆம் ஆண்டுகளில் 
நடைபெற்ற இருபது20 உலகக் கிண்ண தொடரின் போது முதல் சுற்றிலேயே சிம்பாப்வே அணி வெளியேறியது.

மேலும் நடைபெற்று முடிந்த இரண்டு பயிற்சி போட்டிகளிலும் தோல்வியை தழுவியிருந்தது. எனினும் இவ்வணியை பொறுத்தமட்டில் சிறப்பான சுழற்பந்து வீச்சாளர்களை கொண்டுள்ளது. இலங்கை ஆடுகளங்கள் சுழற்பந்து வீச்சுக்கு சிறப்பான ஒன்றாகும். தமது பந்து வீச்சைக் கொண்டு எதிர் அணிக்கு சவால் ஒன்றைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


ஆகவே கடந்த உலகக் கிண்ண தொடர்களில் முதல் சுற்றுடன் சிம்பாப்வே அணி வெளியேறியது. எனவே இந்த வரலாற்றுகளை மாற்றியமைக்க வேண்டும் என்ற உத்வேகத்துடன் இவ்வணி களமிறங்கும்.

எவ்வாறு எனினும் ஒவ்வொரு அணியும் கிண்ணத்தை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கில் களமிறங்க இருப்பதால் ஒவ்வொரு போட்டிகளும் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் ஐயமில்லை.

ad

ad