புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 செப்., 2012


ராஜபக்ச வருகையைக் கண்டித்து சேலத்தில் தீக்குளித்த ஆட்டோ சாரதி மரணம்! தமிழ்த் தேசப் பொதுவுடைமைக்கட்சி இரங்கல்!
இலங்கை  ஜனாதிபதி ராஜபக்சவின் இந்திய வருகையைக் கண்டித்து நேற்று சேலத்தில் தீக்குளித்த ஆட்டோ  சாரதி விஜய்ராஜ் இன்று செவ்வாய்க்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சேலத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் விஜய்ராஜ் தமிழின உணர்வாளர். தமிழ் இயக்கங்கள் நடத்துகின்ற அனைத்து கூட்டங்களுக்கும் தவறாமல் சென்று கலந்து கொள்வார்.
இலங்கை அதிபர் ராஜபக்சவின் இந்திய வருகைக்கு தமிழர்கள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவிக்க வலியுறுத்தி நேற்று அதிகாலை தீக்குளித்தார். பின்னர் தீக்காயங்களுடன் அவர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று பிற்பகல் அவர் உயிரிழந்தார்.
தீக்குளித்த நிலையில் மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் பேசிய விஜய்ராஜ், மகிந்த ராஜபக்சவை தமிழர்கள் செருப்பால் அடித்து விரட்ட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.
உயிரிழந்த விஜய்ராஜின் சகோதரர் தேவராஜ், கொளத்தூர் மணி தலைமையிலான திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்தவர். ஆனால் விஜய்ராஜ் தாம் எந்த அமைப்பிலும் உறுப்பினர் இல்லை என்றும் தாம் அனைத்து தமிழின உணர்வு கொண்ட அமைப்பினருக்கும் ஆதரவாளன் என்றும் தமது மரண வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
தழல் ஈகியான விஜயராஜூக்கு  தமிழ்த் தேசப் பொதுவுடைமைக்கட்சி வீரவணக்கம்!
தமிழினத்தின் குருதி குடித்துக் கும்மாளம் போடும் கொலைகாரன் ராஜபக்சவை  சிறப்பு விருந்தினராக இந்தியா அழைப்பதை எதிர்த்துத் தீக்குளித்த சேலம் இளைஞர் விஜயராஜ் இறந்துவிட்டார் என்ற செய்தி நெஞ்சத்தீயாகச் சுடுகிறது.
இன்று காலை சேலம் அரசு மருத்துவமனைக்கு, தோழர்களுடன் சென்று அவரை நேரில் பார்த்த போது நெஞ்சம் பதைத்தது. தன்நினைவு இழந்த நிலையில், தீக்காயங்களின் வலி பொறுக்கமுடியாமல், முனகிக் கொண்டிருந்தார்.
கட்டிளங்காளை என்பார்களே அப்படிப்பட்ட உடல் கட்டு. 26 அகவையுள்ள இளைஞர் விஜயராஜ். தமிழினம் காக்கத் தன்னையே எரித்துக் கொள்ளும் அளவிற்கு இனப்பற்று கொண்டவர்.
அப்படிப்பட்ட விஜயராஜ் உயிரோடிருந்து தான் பிறந்த இனத்திற்குப் பணியாற்ற வேண்டியவர். தன் பெற்றோர்க்கும் சகோதரர்களுக்கும் சகோதரிக்கும் கடமை ஆற்ற வேண்டியவர். அவர் இழப்பு தமிழினத்திற்கும் அவர் குடும்பத்திற்கும் பேரிழப்பு.
தமிழ் இளைஞர்கள், இன உணர்வாளர்கள் விஜயராஜ் மரணத்தில் உறுதியேற்க வேண்டும்.
இனப் பகைவர்களோடு போராடுவோம். அப்போராட்டத்தில் மடிந்தால் மடிவோம். தன்னைத் தானே மாய்த்துக் கொள்ள மாட்டோம். இந்த வகையில் எதிரிகள் நம்மைப் பார்த்து கெக்கலிக் கொட்ட வாய்ப்பளிக்க மாட்டோம்” என்பதே அவ்வுறுதி மொழி.
வீரம் செறிந்த மரபில் வந்த நம் இன உணர்வாளகள், தங்களின் வீரத்தைத் தீக்கு இரையாக்கக்  கூடாது. வாழ்ந்து போராட வேண்டும்.
தமிழ் இனத்தின் உரிமை காக்க, தன்னை ஈந்து கொண்ட தழல் ஈகி விஜயராஜூக்குத் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி வீரவணக்கம் செலுத்துகிறது. அவர் குடும்பத்தார்க்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

ad

ad