புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 டிச., 2012




           ந்தியத் தலை நகர் டில்லியில், 16-12-12 இரவு 10 மணிக்கு, பேருந்தில், போதை இளைஞர்கள் 6 பேரால் சிதைத்து சின்னாபின்னமாக்கப்பட்டு, ஓடும் பேருந்தில் இருந்தே தூக்கியெறியப்பட்ட, அந்த 22 வயது மாணவி இந்த நிமிடம் வரை உயிருக்குப் போராடிக் கொண்டுதான் இருக்கிறார்.

அந்த மாணவிக்காக நீதி கேட்டும், சீரழியும் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கக் கோரியும், இளைஞர்கள் மற்றும் மாணவ- மாணவிகள், இந்த நிமிடம் வரை ஆக்ரோஷமாகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். டில்லியில் மட்டுமல்ல தமிழகத்தின் தலைநகரிலும், அந்த மாணவிக்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

டில்லியில் அந்த மாணவிக்கு நடந்த கொடுமைக்கு நிகரான, அந்தக் கொடுமையிலும் கொடூரமான வல்லுறவு சம்பவங்கள் சர்வ சாதாரணமாக தமிழ்நாட்டில் தினம் தினம் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

""தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு மிகச் சிறப்பாக உள்ளது'' என்று காவல்துறை உயரதிகாரிகள் மாநாட்டில் ஜெ. பெருமையோடு பேசி 24 மணி நேரம் கூட ஆகவில்லை. அதற்குள் நடந்திருக்கிறது கேட்பவர் இதயத்தையே நொறுங்க வைக்கும் இந்தக் கொடூரமான பாலியல் படுகொலை.

தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டத் திற்கு அருகிலுள்ள கிளாக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவள் 12 வயதுச் சிறுமி புனிதா.

புனிதா இன்னும் பெரிய மனுஷி ஆகவில்லை.

நாசரேத்தில் உள்ள தூய யோவான் பள்ளியில் 7ஆம் வகுப்பு மாணவி. மும்பையில் காரோட்டி வேலை செய்த அப்பா சௌந்தரராசன் இறந்து 5 ஆண்டுகளாகி விட்டன. விதவையான அம்மா பேச்சியம்மாள் பக்கத்து ஊரான தாதன் குளத்தில் சத்துணவில் வேலை செய்கிறார்.


புனிதாவின் தங்கை ரோகிணி, உள்ளூரில் 2ஆம் வகுப்பு மாணவி. புனிதா தினமும் 2 கி.மீ. ஒத்தையடிப் பாதையிலும், ரயில் டிராக்கிலும் நடந்து தாதன்குளம் சென்று 7.30 ரயிலில் நாசரேத் செல்வாள். மாலையில் 5.30 ரயிலில் திரும்பி, 2 கி.மீ. நடந்து வீட்டுக்கு வருவாள்.

20-12-12 வியாழன் காலை 7 மணி.

புனிதாவுடன் அதே பள்ளியில் படிக்கும் உள்ளூர் மாணவிகளான லட்சுமியும், ராமுவும் அன்றைக்கு வரவில்லை. அம்மா வேலைக்குப் போய் விட்டார். சரி நாம் தனியே, முன்னே போகலாம் எனக் கிளம்பினாள் புனிதா.

ரயில் டிராக்கில் புனிதா நடந்து கொண்டிருந்த போது, சாலையில் ஒரு டூவீலரில் லட்சுமியும் ராமுவும் உட்கார்ந்து செல்வதை புனிதா பார்த்தாள். புனிதா நடந்து வந்து கொண்டிருப்பதை அவர்களும் பார்த்தார்கள்.

அதோ கூப்பிடு தூரத்தில் தாதன்குள ரயில்வே நிலையம்.

அந்த நேரம் புனிதாவின் எதிரில் வெறித்தபடி வந்தான் ஒரு குடிகாரன். சுற்றுமுற்றும் பார்த்தான். ஆட்கள் யாருமில்லை. எதிரில் வந்து கொண்டிருந்த புனிதாவை திடுமென வாயைப் பொத்தித் தூக்கிக் கொண்டு, முட்புதர்களை நோக்கி ஓடினான் அவன். அந்த நேரத்தில் செந்தூர் எக்ஸ்பிரஸ் படு வேகமாக போய்க் கொண்டிருந்ததால், ரோட்டில் போய்க் கொண்டிருந்தவர்களால், டிராக்கில் நடந்த இந்த சம்பவத்தை பார்க்க முடியவில்லை.

மாலையில் வீடு திரும்பிய மாணவிகள் லட்சுமியும் ராமுவும் முதலில் புனிதா வீட்டிற்குத் தான் வந்தார்கள்.

""அத்தை, காலைல எங்களுக்கு கொஞ்சம் நேர மாயிடுச்சு. அதுனால ஒரு அங்கிளோட மோட்டார் பைக்ல போயிட்டோம். ரயில்வே டிராக்ல புனிதா போனதைப் பார்த்தோம். ஆனால் ரயில் வர்றவரை புனிதா ஸ்டேஷனுக்கு வரலை. ஸ்கூலுக்கும் வரலை. ஸ்டேஷன் பக்கத்தில பார்த் தோம். ஆனால் வரலை. ஏன் அத்தை புனிதா திரும்பி வந்துட் டாளா?'' கேட் டார்கள்.

""ஸ்கூலுக்கு வரலையா? திரும்பவும் வீட்டுக்கு வரலையே...!'' மாணவிகள் நடந்து செல்லும் பாதையில் பதட்டத்தோடு ஓடினார் பேச்சியம்மாள். தாதன்குளம் ஸ்டேஷன் வரை ஓடித் திரும்பினார். எங்கேயும் புனிதாவைக் காணவில்லை. நன்றாக இருட்டிவிட்டது. தெரிந் தவர்களைக் கூட்டிக் கொண்டு காவல்நிலையத் திற்குச் சென்று புகார் கொடுத்தார்.

மறுநாள் 21-12-12 வெள்ளிக்கிழமை காலையில், தாதன்குளம் ரயில் நிலையத்திலிருந்து கூப்பிடு தூரத்தில், புதருக்குள் புனிதா சடலம் கண்டெடுக்கப்பட்டது.

வாயிலும், மூக்கிலும் ரத்தம் வடிந்து உறைந் திருந்தது. முகத்தில் குத்தியதோடு துப்பட்டாவால் கழுத்தை நெரித்துக் கொலை செய்திருக்கிறான். கொன்றுவிட்டு வல்லுறவில் ஈடுபட்டிருக்கிறான். அலங்கோலமாக கிடந்த புனிதாவின் தலைமாட்டில் புத்தகப்பை கிடந்தது.

புனிதாவின் உடலைப் பார்த்து, நூற்றுக்கணக் கான, ஆயிரக்கணக்கான மக்கள் கதறினார்கள். போலீஸ் வந்தது. போலீஸ் நாயும் வந்தது. ரயில்வே ஸ்டேஷனுக்கும் அந்தப் பக்கம் இருக்கும் ஒரு தேநீர்க் கடை வரை ஓடிவிட்டுத் திரும்பியது நாய்.

அந்த ஏரியாவில் செல்ஃபோனில் ஆபாசப் படம் வைத்திருக்கும் ஆசாமிகள் யார் யார்?

உறவில்லாமல், சிறுமிகளுக்கு சாக்லேட் வாங்கிக் கொடுக்கும் பேர்வழிகள் யார் யார்?

காலையிலேயே குடித்துவிட்டலையும் வெறியர்கள் யார்?

வியாழன் காலையில் டீக்கடையில் இருந்து கிளாக்குளம் போகும் பாதையில், ரயில்வே டிராக் வழியே சென்றவர்கள் யார் யார்?

தீவிரமாக விசாரணை செய்தது ஏ.டி.எஸ்.பி. கண்ணன் ஆணைக்குட்பட்ட போலீஸ்.

வெள்ளிக்கிழமை முன்னிரவில் ஒரு க்ளூ கிடைத்தது.

""சார் மணியாச்சிக்கு பக்கத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் தாதன்குளத்தில் ஃபைனான்ஸ் தொழில் செய்கிறார். அவருடைய தம்பி சுப்பையாங்கிறவன்... சுத்த பொறுக்கி, 35 வயசிருக்கும். ஏற்கனவே இதே மாதிரி ஒரு சின்ன குழந்தையை கெடுக்க முயற்சி செய்தவன். அவங்க மானம் மரியாதைக்கு பயந்து புகார் கொடுக்கலை. அப்புறம்... கல்யாணம் ஆன ஒரு பொண்ணை வீடுபுகுந்து கெடுத்து விட்டான். அவங்க புகார் கொடுத்தாங்க. உங்க போலீஸ் அந்த கற்பழிப்பு கேஸை வன்கொடுமைனு எஃப்.ஐ.ஆர். போட்டு அந்த சுப்பையாவை ஜெயிலுக்கு அனுப்பினாங்க. வெளியே வந்த அந்த பொறுக்கி, புகார் கொடுத்த அந்தப் பொண்ணையும் அவங்க மாமனாரையும் வீடு புகுந்து வெட்டினான். அந்த கேஸ்லதான் உங்க போலீஸ் அவனைப் பிடிக்கத் தேடுச்சு. எங்கேயோ பதுங்கியிருந்த அந்தப் பொறுக்கி ரெண்டு, மூணு நாட்களாக, இங்கே தாதன்குளத்தில் உள்ள அவன் அண்ணன் வீட்லதான் தங்கினான். இந்த டீக்கடை பக்கம்தான் சுத்துவான். அன்னைக்கிக் காலைல, போதை தெளியாம அந்தப் பக்கம் போயிருக்கான்... இந்த கிளாக்குளம் புனிதாவை கொலை பண்ணிக் கெடுத்தது அவனாகக்கூட இருக்கலாம் சார்!'' சொன்னார் ஒரு நடுத்தர வயதுக்காரர்.

வெள்ளிக்கிழமை இரவு 12 மணிக்கு, மணியாச்சிக்கு பக்கத்தி லுள்ள பாறைக்குட்டம் என்ற கிராமத்தில், 3 குழந்தைகளுக்கு தந்தையான சுப்பையா என்ற அந்த கொடியவனை கைது செய்தது போலீஸ்.

""துணைக்கு மத்த புள்ளைகள் போகலைனா நான் கொண்டு போய் ரயில் ஏத்திவிடுவேன். அன்னக்கி சத்துணவுப் பொருள் வாங்க குடோனுக்கு போயிட்டேனே...!'' வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு திண்ணையில் சுருண்டு கிடக்கிறார் புனிதாவின் தாய் பேச்சியம்மாள்.

""புருஷனை சாகக் கொடுத்துவிட்டு புகுந்த வீட்டில் வாழ வழியில்லாமல் ரெண்டு புள்ளைகளையும் கூட்டிட்டு இந்த கிளாக்குளத்துக்கு வந்தாள் என் மகள் பேச்சி... நல்லா படிக்கிற புனிதாவை டாக்டர் படிப்பு படிக்க வைக்க நெனைச்சோமே... எங்க ஆசையில மண்ணள்ளிப் போட்டு... பால்வாசனை மாறாத அந்தப் பச்சைக் கொழந்தையை இப்படிப் பண்ணிட்டானே... அந்தப் படுபாதகன்... அவன் விளங்குவானா?'' -பரிதாபமாகக் கதறினார் புனிதாவின் பாட்டி சந்திரபுஷ்பா.

""நல்லா துருதுருன்னு இருப்பா. நான் டாக்டருக்கு படிச்சு அம்மா, பாட்டியைக் காப்பாத்தணும். தங் கச்சியை நல்லா படிக்க வைக்கணும்ப் பா. அவ புத்திக்கூர்மையை பாத்துட்டு ஸ்கூல்ல ஃபீஸ் கூட மத்த பிள்ளைங் களை விட கம்மியாதான் வாங்கினோம். அந்த பிஞ்சு பிள்ளையை இப்படி நாசம் செஞ்சிட்டானுங்களே. அந்த யேசுகூட மன்னிக்க மாட்டார்'' என விசும்புவது பள்ளி வட்டாரம்.

புனிதாவிற்காக சாலையில் திரண்ட அந்தப் பகுதி மக்களோ ""தன்னோட புள்ளைய விடச் சின்னப் புள்ளைய கொலை பண்ணிக் கெடுத்த அந்த வெறிநாயை எங்கள் கண்முன்னே நிறுத்தி என்கவுன்ட்டர் செய்ங்க! அல்லது எங்கள்ட்ட ஒப்படைங்க நாங்க தண்டனை கொடுக்கிறோம்!'' ஆக்ரோ ஷம் காட்டிய பொதுமக்களிடம்,

""தயவு செய்து அமைதியாகத் திரும்பிச் செல்லுங்கள். சட்டப்படி கடுமையான தண்டனையை அவனுக்கு வாங்கித் தருவோம்!'' உறுதியளித்து சமாளித்தார் ஏ.டி.எஸ்.பி. கண்ணன்.

கலைந்து சென்ற கூட்டத்தில் வந்த பூல்பாண்டியும் முருகேசும் நம்மி டம் ""டில்லியில் ஒரு பெண் கெடுக்கப் பட்டாள். அதுக்காக டில்லியில, உத்தர பிரதேசத்தில, நம்ம தமிழ்நாட்ல கூட போராட்டங்களும் ஆர்ப்பாட்டங் களும் இப்பவரை நடக்குது. எதுக்காக நடக்குது. முள்ளுச்செடி சின்னதா இருக்கும்போதே புடுங்கி எறியணும். 

முள்ளு மரமான பிறகும் வெட்டாமல் விட்டு வச்சு வேடிக்கை பார்க்குது போலீஸ். அதனாலதானே மறுபடி மறுபடி இந்தக் கொடிய தப்பை பண்றானுவ. அதைக் கண்டிச் சுத்தான், டில்லிப் பொண்ணுக்காக, சென்னையில கூட நடுராத்திரியில போராடுகிறார்கள்.

ஆனால், தமிழ்நாட்ல நடக்கிற இந்தக் கொடுமைகளை எதிர்த்து நம்ம தமிழ்நாட்ல அப்படியொரு எழுச்சி ஏற்படலையே... ஏற்படணும் அப்பத் தான் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க வேண்டியவர்கள் தங்கள் கடமையில் இன்னும் பொறுப்போட இருப்பார்கள்!'' -தாகத்தோடும் சோகத்தோடும் சொன்னார்கள்.           

-பரமசிவன்
படங்கள்: ராம்குமார்thx nakeran

ad

ad