புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 டிச., 2012




           திரைப்படங்கள் மிக வலிமையான ஊடகங்கள். பல்வேறு கலைகளின் கலவையாகத் திரைப்படம் திகழ்வதால் அத்தனை கலைகளின் ஈர்ப்பாற்றலும் திரைப்படத்திற்குக் கிடைத்து விடுகிறது. தணிக்கை செய்யாமல் சில திரைப்படங்களை எடுத்து வெளியிட அனுமதித்தால், திராவிட நாடு என்ற இலட்சியத்தை அடைந்துவிடுவோம் என்ற அறிஞர் அண்ணாவின் கூற்று பட உலகின் பலத்தைப் பறைசாற்றப் போதுமானது.

இலட்சியங்களை வெல்லவும், இலக்கு நோக்கிச் செல்லவும் உதவுகிற திரைப்படங்கள் வெறும் பொழுதுபோக்குக் கலையாக இல்லாமல் சமூகத்தின் பழுது நீக்கும் கருவியாகவும் பல தேசங்களில் பரிணமித்துள்ளன.

தமிழகத்தில் திரையுலகம் ஏற்படுத்திய தாக்கங்களை எழுதத் தொடங்கினால் அது வேதனைப் படலங்களாக விரிந்துகொண்டே போகும். அதைச் சுருக்கமாக அறிந்து கொள்ள விரும்புவோர் கோவி.லெனின் எழுதிய நக்கீரனின் வெளியீடான "உய் உய்' என்ற நூலைப் புரட்டலாம்.

இளைஞர்களை முடுக்கிவிடுகிற இயக்கமாக இருக்கவேண்டிய திரையுலகம், இளைஞர்களை முடக்கி விடுகிற மயக்கமாக மாறியிருக்கிறது. 

நூறுநாள் ஓடினால்தான் வெற்றிப்படம் என்ற நிலைமாறி எட்டுநாள் ஓடினாலே வெற்றிதான் என்னும் அளவுக்கு வணிக வளர்ச்சியை திரையுலகம் எட்டியுள்ளது. வணிகம் வளர்ந்த அளவுக்கு திரையுலகில் மனிதம் வளர்ந்திருக்கிறதா? இல்லை. கலை ஏறத்தாழ களையாகி விட்டது. எனவே களைகளை வளர்ப்பதே கலைவளர்ச்சி என்றாகிவிட்டது. ஆபாசமும், வன்முறையும் திரையுலகின் பிரிக்கமுடியாத அம்சங்களாகி விட்டன. ஒரு சில விதிவிலக்குகள் உள்ளது ஆறுதல் ஆயினும், பெரும்பான்மையான திரைப்படங்கள் இளைஞர்களைக் கெடுக்கின்றன. அவை முன்னேறும் தாகம் கொண்ட இளைஞர்களை மூளைச் சலவை செய்கின்றன... என்றுகூட சொல்ல முடியாது மூளையை அழுக்காக்குகின்றன என்று சொல்வதே பொருத்தமாகும். ரசனை கெட்டுப் போனதால்தான் சகலமும் கெட்டுப் போனது என்பார் பெருந்தலைவர் காமராஜர். 

ஆபாசம், வன்முறை ஆகியவற்றை மக்கள் ரசனையாக மாற்றுகிற மாபாவத்தையே தொழிலாகச் செய்துவரும் பெரும்பான்மைத் திரையுல கினர் அரங்கேற்றிய மிகப்பெரிய தீமைகள் நாட்டின் ஒடுக்கப்பட்ட சமூகங்களை மென்மேலும் ஒடுக்குதல், சாதித்திமிர்களுக்கு சார்பாக நெருக்குதல், மாற்றுத்திறனாளிகள், திருநங்கையர் போன்ற இயற்கையால் வஞ்சிக்கப்பட்ட வர்க்கத்தை கிண்டல் செய்து இன்பம் காணுதல் என திரையுலகினரின் பாவச் செயல்களைப் பட்டியலிடலாம்.  திரையுலகின், இத்தகைய வக்கிர அக்கிரமங்கள் ஒருபுறம் இருக்க, அதன் முக்கிய அக்கிரமமாக இருப்பது, சிறுபான்மை சமூகமான முஸ்லிம்களைக் கொச்சைப்படுத்துவது ஆகும்.

எம்.ஜி.ஆர் காலத்திலேயே, ""நிம்பல் நம்பல்க்கி பொண்ணு தர்ரான். நம்பல் நிம்பல்க்கி காசுதர்ரான்'' என்றும் பேசியும், "மேரா நாம் அப்துல் ரகுமான்' என்று பாடியும், முஸ்லிம்கள் தமிழோடு உறவும், தமிழின உணர்வும் இல்லாதவர்கள் என்பதுபோல சில படங்கள் சித்திரித்தன.

"முதன்மையான கவிஞர்களைப் பட்டியலிட்டால் அவர்களில் முஸ்லிம் கள் அதிகமாக உள்ளனர். ஒருவேளை கவிதை எழுதுவதற்கும், பிரியாணிக்கும் சம்பந்தம் இருக்குமோ' என்று மறைந்த எழுத்துலக அறிவியல் மேதை சுஜாதா குறிப்பிடும் அளவுக்கு முஸ்லிம்கள் இலக்கிய உறவோடு வாழ்வது ஒருபுறம்.

அழகிய தமிழ்ச்சொற்களான, அத்தா, சோறு, ஆனம், பசியாறுதல் போன்றவை அடித்தட்டு பாமர முஸ்லிம்களின் பேச்சு வழக்கில் உள்ளன. 

இந்தியா சுதந்திரம் அடைந்த நள்ளிரவில், விடுதலை இந்தியாவின் முதல் கச்சேரியை நடத்திய ஷெனாய் மேதை பாரத ரத்னா உஸ்தாத் பிஸ்மில்லாகான் தொடங்கி, இரட்டை ஆஸ்கர் பெற்ற தமிழன் ஏ.ஆர்.ரகுமான் வரை ஏராள மான இசை மேதைகள் முஸ்லிம்களாக இருந்தும், "கறிவெட்டி பாய்க்கு சங்கீதம் வருமா'ன்னு, கவுண்ட மணியை வைத்துக் கேலிசெய்கிறார்களே என கவிஞர் ஜெயபாஸ்கரன் பலமுறை பதிவு செய்துள்ளார். 

இத்தகைய கேலிகளின் எல்லைகளைக் கடந்து, இப்போது கோலிவுட்டே மதவெறி அரசியலின் கருவியாக மாறிவிட்டதோ என்று கருதும் அளவுக்கு தமிழ்ப்படங்களில் சங்பரிவார பாசிச கருத்துகள் சலங்கை கட்டி ஆடுகின்றன.

மணிரத்னத்தின் ரோஜா, பம்பாய், கே.பாலசந்தரின் ஜாதிமல்லி ஆகிய படங்கள் முஸ்லிம் சமுதாயத்தைக் கொச்சைபடுத்திய வன்முறையாளர்களாய்க் காட்டிய முதன்மைப் படங்கள்.

அதைத் தொடர்ந்து, ஒற்றன், நரசிம்மன், ராஜமுத்திரை, பயணம், தென்னவன், உன்னைப் போல் ஒருவன் என ஏராளமான படங்கள் உள்ளன. கோலிவுட் பிரம்மாக்களின் துவேசப்பார்வை எப்போது மாறும் என ஏங்கித் தவித்திருக்கும் நிலையில்...

அண்மையில் தீபாவளியன்று திரைக்கு வந்த நடிகர் விஜய் நடித்து, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய "துப்பாக்கி'யும் இதே விஷத்தையே கக்கியிருக்கிறது.

தீவிரவாதி நிச்சயம் முஸ்லிமாக மட்டுமே இருக்க வேண்டும்.

பொது இடங்களில் குண்டுகளை வைத்து அப்பாவிப் பொது மக்களையும், குழந்தைகளையும், பெண்களையும் கொன்றுகுவிக்க வேண்டும்.

போதை மருந்து கடத்தல், ஆள்கடத்தல் போன்றவற்றை முழுமூச்சாக செய்து வரவேண்டும். இடை யிடையே தொழுகையும் நடத்தவேண்டும்.

கொடூரமான கொலைகளைச் செய்வதற்கு முன்னால் குர்ஆன் படிக்கவேண்டும். மேற்கண்டவை தீவிரவாதம் பற்றி பேசும் திரைப்படங்கள் கொண்டுள்ள தீய நியதிகளில் சில மட்டுமே.

சுதந்திர இந்தியாவின், மிகப்பெரிய முதல் பயங்கர வாதமான காந்தியடிகள் படுகொலையை அரங்கேற் றிய அரக்கர்கள் யார்?

காந்தியைக் கொன்ற காவிவெறி பிடித்தவர்களை தீவிரவாதிகளாகச் சித்திரித்து இதுவரை படங்கள் வரவில்லை. (ஹேராம் உட்பட). ஆனால், காந்தியைக் கொன்றது சரியே... என்று வாதிடும் "நான் கேட்சே பேசுகிறேன்' என்ற நாடகம், அரச பாதுகாப்போடு நடத்தப்பட்டு வருகிறது. 
மாலேகான், ஹைதராபாத், அஜ்மீர் தர்கா, சம்ஜவ்தா ரயில் உள்ளிட்ட பல்வேறு குண்டுவெடிப்புச் சம்பவங்களை நடத்தியவர்கள் சங்பரிவார பின்னணி கொண்ட "அபிநவ் பாரத்' என்ற அமைப்பினர்தான் என்பதை ஹேமந்த்கர்கரே தலைமையிலான பயங்கர வாத எதிர்ப்புப்படை ஆதாரங்களோடு அம்பலப்படுத் தியது. 

இந்திய ராணுவத் தளவாடங்களையும், வெடி மருந்துகளையும், சங்பரிவார அமைப்புகளுக்கு சப்ளை செய்ததற்காக ஸ்ரீகாந்த் புரோகித் என்ற ராணுவ அதிகாரி கைது செய்யப்பட்டு கம்பி எண்ணுகிறார்.

அபிநவ் பாரத்தைச் சேர்ந்த சுவாமி அசீமானந்தா, செய்யாத குற்றத்திற்காக, சிறையில் வதைபடும் முஸ்லிம் இளைஞர்களின் அவலத்தைப் பார்த்து மனமிரங்கி, உண்மைக் குற்றவாளிகளைப் பற்றிய ஒப்புதல் வாக்குமூலம் அளித்து தேசத்தையே அதிரவைத்தார். 

இவற்றையெல்லாம் படமாக எடுக்க துணிவும், மனசாட்சியும் இல்லாத வர்ணாசிரமத் திரையுலகம், முஸ்லிம்கள்மீது மோசமான படையெடுப்பைத் தொடர்ந்து நடத்திவருகிறது.

"துப்பாக்கி' படத்திற்கு எதிராக முஸ்லிம் சமுதாயம் ஜனநாயக வழியில் பொங்கியெழ இருப்பதை அறிந்து, நம்மிடமும், முஸ்லிம் கூட்டமைப்பின் அங்கத்தினர்களிடமும் பேசிய படத்தரப்பினர் 14.11.2012 அன்று தேவி திரையரங்கில் படத்தைத் திரையிட்டனர்.

திரையிடலுக்கு முன்னதாக நம்மிடம் பேசிய இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், கலைப்புலி தாணு மற்றும் குழுவினர், "உங்களுக்கு எதிராக இப்படம் எடுக்கப்படவில்லை. தீவிரவாதத்திற்கு எதிராகவே எடுக்கப்பட்டது. ஒரு வார்த்தை கூட உங்களுக்கு எதிராக இருக்காது' என்றனர்.

படத்தைப் பார்த்தபோது, அதில் இழையோடிய மிக நுட்பமான மதவெறி அரசியல், அதிர வைத்தது.

திராவிடப் பாரம்பர்யம் கொண்ட தயாரிப்பா ளர் கலைப்புலி தாணு, பொது உடைமைப் பின்புலம் உள்ள புரட்சிப்படங்களை இயக்கிய எஸ்.ஏ.சந்திரசேகர் போன்றோரே தங்களது இப்படத்தைப் பற்றி நற்சான்றிதழ் தருவது நம்மை மேலும் உலுக்கியது. மதவெறி மாஃபியாக் களின் கைப்பாவையாக தமிழ்ப்பட உலகம் மாறிவிட்டதோ என்று நெஞ்சுக்குள் அரும்பும் அச்சத்தை அலட்சியப்படுத்த முடியவில்லை. 

தமக்கே தெரியாமல் முஸ்லிம் இளைஞர்கள் தீவிரவாதிகளாக உள்ளனர் (ஸ்லீப்பர் செல்ஸ்). அவர்களை அந்நிய சக்திகள் இயக்குகின்றன.  

அரசின் உயர்பதவிகளில் முஸ்லிம்கள் அமர்ந் தால் நாச வேலைக்குத் துணை செய்வார்கள் என்பதுதான் துப்பாக்கி படம் சொல்லும் செய்தி. ஆக நடிகர் விஜய்யின் துப்பாக்கி யாரை நோக்கிப் பிடிக்கப்பட்டிருக்கிறது? இஸ்லாமியர் களை நோக்கி. நாம் மேற்கண்டவற்றை சுட்டிக் காட்டி வாதிட்டபிறகு சில காட்சிகளை நீக்கு வதாகவும், சில வசனங்களை மௌனிக்கச் செய்வதாகவும், 15.11.2012 அன்று சவேரா உணவகத்தில் நடந்த சந்திப்பில் படக்குழுவினர் உறுதியளித்தனர். இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் மன்னிப்பு கோரினார். சிங்கப்பூரில் தனக்கு உதவிய முஸ்லிம்களை நினைவுகூர்ந்து எனது அடுத்த படம் "முஸ்தஃபா' என்றார் தாணு. அடுத்த படத் தில் விஜய் ஒரு முஸ்லிம் பாத்திரத்தில் நடிப்பார் என்றார் அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர். துப்பாக்கி பட பிரச்சினை ஓரளவு சுமுகமாக முடிந்தாலும், இத்தகைய படங்களைத் தொடர்ந்து அனுமதிக்கிற திரைப்படத் தணிக்கைத் துறை முஸ்லிம் சமுதாயத்தின் கடும் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளது. விரைவில் திரைக்கு வர இருக் கும் கமலஹாசனின் விஸ்வரூபத்திலும் இஸ்லாமியர் களுக்கு எதிரான சித்தரிப்புகள் இருக்கிறது என  காதுக்கு வரும் செய்திகள் கவலை தருகின்றன. இது உண்மையாக இருக்கக்கூடாது என்பதே எல்லோரது விருப்பமும் ஆகும். எல்லா இனத் திலுமே முட்களும் உண்டு; மலர்களும் உண்டு. ஆனால் இஸ்லாமிய சமூகத்தை மட்டுமே முட்காடாக உருவகிப்பது எந்த வகையில் நியாயம்? கலைகள் மனிதத்தை விதைக்கவேண்டும். நல்லிணக்கத்தைப் போற்ற வேண்டும். சமூகத்தின் உரிமைகளுக்குக் குரல்தரவேண்டும். காயங்களுக்கு மருந்து வேண்டும். இவையே கலைக்கான அடையாளங்களாக இருக்க முடியும்.

ad

ad