புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 டிச., 2012


வைகோவின் தலைமையில் எழுச்சிமிகு போராட்டம்


தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் தொடர் போராட்டங்களை அறிவித்திருந்தார். அதன்படி கடந்த 12.12.2012 அன்று தமிழகத்தின் கடலோர கிராமங்களில் ஒன்றான உவரியில் இருந்து மதுரையை
நோக்கி, தனது 1200 படையினருடன் நடைப்பயணத்தை மேற்கொண்டிருந்தார். நேற்று திட்டமிட்டபடி, மதுரையை வைகோவின் படை வந்து சேர்ந்தது. மாலை மதுரையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. 1200 பேருடன் தொடங்கிய பயணம் நேற்று மதுரையே குலுங்கம் அளவில் மக்கள் வெள்ளத்தில் நிறைவுபெற்றது, வைகோவின் அடுத்தக்கட்ட வெற்றியை குறிப்பதாக தமிழக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழகத்தின் தென்பகுதி கிராமங்கள் பலவற்றையும் நடைப்பயணங்களின் போது கடந்த வைகோ அவர்கள், “ பூரண மதுவிலக்கை தமிழகத்தில் அமல்படுத்தும் வரை தான் ஓயப்போவதில்லை என சூளுரைத்தார். வழிநெடுகிலும் மக்களிடன், “நான் உங்களிடம் ஓட்டுக்காக வரவில்லை. இப்போராட்டத்தின் காரணமாக யாரும் எனக்கு ஓட்டுக்கூட போடத்தேவையில்லை. என்றாவது ஒருநாள் தமிழகம் மதுவின் கொடுமையில் இருந்து வெளிபடும்போது, இத்தகைய மனிதர் ஒருவர் மதுவை எதிர்த்து, மக்களின் நல்வாழ்விற்காக தொடர்ந்து போராடினார் என வரலாற்றில் ஒரு வரி பதியப்பட்டாலே போதும்” என பேசினார்.

உவரியில் இருந்து கிளம்பி, மொத்தம் 14 நாட்கள் 450 கிலோமீட்டர் தூரம் நடைபயணம் மேற்கொண்ட வைகோ வழியில் 510 கிராமங்களில், மதுவினால் ஏற்படும் தீமையையும், மதுவிலக்கை அமல்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துக் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று (25.12.2012) மதுரையில் நடந்த நடைபயணம் நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் பேசிய வைகோ அவர்கள், “மதுவின் பிடியில் இளைய சமுதாயம் சிக்கி விழுந்து விடக்கூடாது, ஒழுக்க சிதைவுகளுக்கு இளைஞர்கள் ஆளாகக்கூடாது, தமிழர் சமுதாயத்தை காக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த நடைபயணம் நடந்தது. 1971ம் ஆண்டு ராஜாஜி, கோபாலபுரத்திற்கு நேரில் சென்று அன்றைய முதல் அமைச்சர் கருணாநிதியை நேரில் சந்தித்து மதுவை திணிக்காதீர்கள், அந்த திட்டத்தை உடனே கைவிடுங்கள் என்றார். ஆனால் கருணாநிதி மறுத்து விட்டார். அப்போது வந்த மது தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. தமிழகத்தில் 26 ஆயிரம் கோடிக்கு மேல் வருமானம் மதுவினால் வருகிறது என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு டாஸ்மாக் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மதுவினால் ஆண்டிற்கு ரூ.25 ஆயிரம் கோடி மேல் வருமானம் வருகிறது. வாரத்திற்கு 500 புதியவர்கள் மது குடிக்க வருகிறார்கள் என்று பெருமையுடன் சொல்லியிருக்கிறார். அரசு திட்டங்கள் செயல்படுத்த அதிக பணம் செலவாகிறது என்கிறார்கள். மக்களை வாட்டி வதைக்கும் அரசு திட்டங்கள் எதற்கு? குஜராத் மாநிலத்தில் மதுக்கு அனுமதி இல்லை. அங்கு தொழில் பெருகவில்லையா, பொருளாதாரம் பெருகவில்லையா. காமராஜர் காலத்தில் மது இல்லை. ராஜாஜி காலத்தில் மது இல்லை. மது இருந்தால் இனி பெண்கள் தெருவில் போக முடியாது. உலகில் அதிக விபத்து எங்கு நடைபெறுகிறது தெரியுமா? தமிழ்நாட்டில் தான். இதற்கு காரணம் மிதமிஞ்சிய மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவதால்தான். கர்ணன் வேண்டுமானால் கவசத்தை கழற்றி கொடுக்க முடியும். ஆனால் என்னால் நேர்மை என்ற கவசத்தை கொடுக்க முடியாது.

இளைய தமிழர்கள் பாழாகி விடக்கூடாது. சின்ன பிஞ்சுகள் வாடிவிடக் கூடாது என்றுதான் இந்த நடைபயணம். இந்த பயணம் இதோடு முடியவில்லை. மீண்டும் பிப்ரவரி 18ந் தேதி தொடங்கி காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபயணம் தொடங்கி, 28ந் தேதி மறைமலைநகரில் முடிவடையும். அதே போன்று ஏப்ரல் 9ந் தேதி பொள்ளாச்சியில் தொடங்கி 20ந் தேதி ஈரோட்டில் நிறைவடையும். அதனை அடுத்து ஜூன் மாதம் 20-ந் தேதி விழுப்புரத்தில் தொடங்கி 30ந் தேதி கடலூரில் நிறைவடையும்” என்று எடுத்துரைத்தார்.

ad

ad