புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 டிச., 2012


புனர்வாழ்வுபெற்ற 28 முன்னாள் போராளிகள் வடமராட்சியில் கடந்த வாரம் மீண்டும் கைது! – பதற்றத்தில் உறவினர்கள்
யாழ். வடமராட்சி பிரதேசத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் முன்னாள் போராளிகள் 28 பேர் பயங்கரவாதத் தடுப்புப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


கடந்த 16 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் கடந்த சனிக்கிழமை 22 ஆம் திகதி சனிக்கிழமை வரையான 7 நாட்களில் மேற்படி போராளிகள் கைதாகி வவுனியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைதாகியவர்கள் அனைவரும் இறுதி யுத்தத்தில் இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டு அரசின் புனர்வாழ்வுக்குட்படுத்தப்பட்டு விடுவிக்கப்பட்டனர் என அவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் மீண்டும் இவர்கள் கைதுசெய்யப்பட்டு வவுனியாவுக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு அங்கு தடுத்துவைக்கப்பட்டுள்ளமை தமக்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என உறவினர்கள் கூறினர்.

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளில் வடமாரட்சி கிழக்கில் இருந்து 11 பேரும், வடமராட்சி பருத்தித்துறையில் இருந்து 8 பேரும், நெல்லியடியிலிருந்து 3 பேரும், வல்வெட்டித்துறையிலிருந்து 6 பேரும் கடந்த ஒரு வாரத்தில் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

வீடுகளுக்கு வாகனங்களில் வந்தே பயங்கரவாதத் தடுப்புப் புலனாய்வுப் பிரிவினர் 28 பேரையும் கைதுசெய்துள்ளனர் என உறவினர்கள் தெரிவித்தனர்.

விசாரணையின் பின்னர் இவர்கள் மிகவிரைவில் விடுவிக்கப்படுவர் எனவும், இவர்களைக் கைதுசெய்ததாக ஊடகங்களுக்கு செய்திகள் எதனையும் கொடுக்கவேண்டாம் எனவும் புலனாய்வுப் பிரிவினர் தம்மிடம் தெரிவித்துவிட்டுச் சென்றனர் எனவும் உறவினர்கள் கவலையுடனும் அச்சத்துடனும் தெரிவித்தனர்.

பயங்கரவாதத் தடுப்புப் புலனாய்வுப் பிரிவினரின் இவ்வாறான நடவடிக்கைகளினால் புனர்வாழ்வுபெற்று விடுதலையான ஏனைய முன்னாள் போராளிகளும், அவர்களின் உறவினர்களும் அச்சத்துடன் உள்ளனர்.

இதேவேளை, கடந்த வாரம் வல்வெட்டித்துறைப் பகுதியில் புனர்வாழ்வுபெற்று விடுதலையான முன்னாள் போராளிகள் இருவர் (இருவரும் உறவினர்கள்) கறுத்த நிற வானில் கைத்துப்பாக்கிகளுடன் வந்த இராணுவப் புலனாய்வாளர்களினால் கடத்திச் செல்லப்பட்டு இன்றுவரை விடுவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ad

ad