என்ன வழக்கு? என்ன தீர்ப்பு? என்ன ஸ்டே?
முதல்வர் ஜெ.வின் "உணவு' குறித்ததொரு செய்தி நக்கீரனில் 2012 ஜனவரி 7 அன்று வெளியாக... அந்த காலை வேளையிலேயே கரைவேட்டி அ.தி.மு.க.வினர் கோபத்தின் உச்சத்திலேறி நக்கீரன் அலுவலகத்தை சூறையாடினர். நக்கீரன் இதழ்கள் எரிக்கப்பட்டதோடு, செய்தி சேகரிப்புக்கு வந்த பிற ஊடகத்தினரும் தாக்கப்பட்டனர்.
கற்கள், கட்டைகள், பாட்டில்கள் என தாக்குதலுக்கு பல பொருட்கள் பயன்படுத்தப்பட்டன. நக்கீரனுக்கான மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. ஆசிரியர், இணையாசிரியர் மீது தமிழகத்தின் அனைத்து காவல்நிலையங்களிலும் 250-க் கும் மேலான முதல் தகவல் அறிக்கை (எ.ஒ.த.) பதியப்பட்டன. ஜெ. சார்பில் அவதூறு வழக்கும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் நக்கீரன் மீது பாய்ந்தது. அதன் தொடர்ச்சியாக சட்டசபை உரிமை மீறப்பட்டதாகக் கூறி சபாநாயகர் சார்பில் ஆசிரியர், இணையாசிரியரிடம் விளக்கம் கேட்டு "உரிமை மீறல்' நோட்டீஸை அனுப்பியது.
அரசு சார்பில் உச்சநீதிமன்ற வழக் கறிஞர் குரு கிருஷ்ணகுமார் வாதங்களை முன்வைத்தார். இருதரப்பு வாத முடிவில் நீதிமான் சந்துரு, "சட்டசபை உரிமைக் குழுவின் முன் பாதிக்கப்பட்டவர்களுக்காக வழக்கறிஞர்கள் ஆஜராகலாம்' என்று அளித்த தீர்ப்புக்கு எதிராகத்தான் ஜெ. அரசு மீண்டும் கோர்ட்டுக்கு வந்திருக்கிறது.
தமிழக அரசின் சட்டசபை செயலாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மேல்முறையீடு மனு மீதான விசாரணை 5.2.2013 அன்று விசா ரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. தற்காலிக தலைமை நீதிபதி எலிப்பி தர்மா ராவ், நீதிபதி வேணுகோபால் அடங்கிய முதல் பெஞ்ச் வழக்கை விசாரித்தது.
நக்கீரன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் வி.பிரகாஷ், பி.டி.பெருமாள், இவரின் ஜூனியர் எல்.சிவகுமார் ஆஜராகினர். இதே பிரச்சினை தொடர்பாக வழக்கறிஞர் எட்விக் தொடர்ந்த மற்றொரு வழக்கில் வழக்கறிஞர் ரூபர்ட் பர்னபாஸ் ஆஜரா னார். அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ் ணன் "சட்டசபை உரிமைக்குழு முன்பு வக்கீல்கள் ஆஜராக அனுமதிப்பது அரசியல் சாசனத்தின்படி அந்த உரிமைக் குழுவுக்கு வழங்கப்பட்ட உரிமையைப் பறிப்பதைப் போன்றது' என்று வாதிட்டார்.
நக்கீரனுக்காக ஆஜராகிய வழக்கறிஞர் பெருமாள், "தனி நீதிபதியின் தீர்ப்புக்கு தடைவிதித் தால், நக்கீரன் ஆசிரியர், இணையாசிரியர் மீதான உரிமைக்குழு நடவடிக்கைகளுக்கும் தடைவிதிக்க வேண்டும். இல்லாவிட்டால் ஆசிரியர், இணை யாசிரியரை சபைக்கு வரவழைத்து தண்டனை வழங்கிவிட்டு, இந்த அப்பீல் வழக்கையே தேவை யற்ற வழக்காக இந்த அரசு மாற்றிட முயற்சிக்கும்' என்று அரசின் போக்கை குறிப்பிட்டார்.
தொடர்ந்து நக்கீரனுக்காக வாதிட்ட மூத்த வழக்கறிஞர் பிரகாஷ், ""அரசியல் சாசனம் சட்டசபைக்கு வழங்கியுள்ள அதிகாரங்கள் நக்கீரன் வழக்கில் துஷ்பிரயோகம் செய்யப்படுவதை கவனத்தில் கொண்டு இந்த நீதிமன்றம், விரிவான விசாரணைக்குப் பின்னரே உத்தரவுகளை வழங்க வேண்டும்'' என்று வலுவான முறையில் வாதங்களை பதிவு செய்தார். இந்நிலையில், வழக்கில் ஒரு புது திருப்பம் ஏற்பட்டது.
நீதிமான் சந்துரு வழங்கிய தீர்ப்புக்கு தடை விதித்தால் அது வழக்கறிஞர்கள் உரிமையை பாதிக் கும். எனவே எங்கள் தரப்பு கருத்தையும் பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும் என்று பல்வேறு வழக்கறிஞர்கள், சங்கப் பிரதிநிதிகள் நீதிமன்றத்தில் முன்வந்து ஆஜராகி வாதாடத் தொடங்கினர்.
தமிழ்நாடு பார் கவுன்சில் துணைத்தலைவர் பி.எஸ்.அமல்ராஜ், ""உரிமைக் குழு நிராகரித்த வக்காலத்தை தாக்கல் செய்த வழக்கறிஞர் எட்விக் தொடர்ந்த ரிட் மனுவிலும், நக்கீரன் ஆசிரியர் தொடர்ந்த ரிட் மனு விலும் ஒரே தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள தால், வழக்கறிஞர்களின் உரிமையைப் பறிக்கும் இந்த அப்பீல் மனுவில் பார் கவுன்சில் ஆஃப் தமிழ்நாடுவையும் வாதாட அனுமதிக்க வேண்டும்'' என்றார்.
மெட்ராஸ் ஹை கோர்ட் அட்வகேட் அசோசியேஷனின் பிரசிடென்ட் மோகனகிருஷ்ணன், செகரட்டரி முரளி ஆகியோர், ""வக்கீல்கள் சட்டப்பிரிவுப்படி வாக்குமூலம் பதிவு செய்யப்படும் தீர்ப்பாயங்கள் உள்பட அனைத்து அமைப்பிலும் வழக்கறிஞர்கள் ஆஜராகலாம். இந்த அப்பீல் மனு வழக்கறிஞர் சட்டப்பிரிவுக்கு எதிராக இருப்பதால் எங்கள் சங்கத்தையும் வழக்கில் சேர்க்க வேண்டும்'' என்றனர்.
தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பிரபாகரன், முன்னாள் எம்.ஹெச்.ஏ.ஏ.பிரசிடென்ட் பால் கனகராஜ் ஆகியோர், ""வழக்கறிஞர் சட்டப்பிரிவு 30-ன்படி சாட்சிகளை விசாரித்து தண்டனை வழங்கும் எந்த அமைப்பின் முன்பும் ஆஜராக வழக்கறிஞர்களுக்கு உரிமை உள்ளது. இந்தப்பிரிவு 2011-ல் அறிவிப்பாணையில் வெளியிடப்பட்ட பிறகு இந்தப் பிரிவு தொடர்பாகவும், வழக்கறிஞர்களின் உரிமை தொடர்பாகவும் வருகிற முதல் வழக்கு இதுவென்பதால், எங்களையும் இந்த வழக்கில் வாதிட அனுமதிக்க வேண்டும்'' என்று கோரிக்கை விடுத்தனர்.
மிக நீளமாய் போய்க் கொண்டிருந்த இந்த வாத-விவாதங்களுக்கிடையில் அரசின் அட்வகேட் ஜெனரல் குறுக்கிட்டு இந்த விவகாரத்தில் நக்கீரன் ஆசிரியர், இணையாசிரியர் தொடர்பாக சட்டசபை உரிமைக்குழுவில் மூன்று வாரங்களுக்கு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள மாட்டோம் என்று சட்ட சபை செயலாளர் சார்பில் உத்தரவாதம் அளிக்கிறேன் என்று சொல்லி நீதிமான் சந்துரு அளித்த தீர்ப்புக்கு தடைவிதிக்க வேண்டும்'' என்று வற்புறுத்தினார்.
இதையடுத்து முதல் பெஞ்ச், "எந்த இடைக்கால உத்தரவுமின்றி' வழக்கை மூன்று வார காலத்திற்கு ஒத்தி வைப்பதாக தெரி வித்தது. அரசு அட்வகேட் ஜெனரல் வாயி லாக சட்டசபைச் செயலாளர் அளித்த உத்தரவாதத்தை இந்த கோர்ட் பதிவு செய்து கொள்கிறது என்றும் நீதிமான் கள் ஒத்தி வைப்பின்போது தெரிவித்த னர். நீதிமன்றத்தில் சட்டத்தின் துணையுடன் தொடர்ந்து சென்று கொண்டிருக்கிறது நக்கீரன் பயணம்.
-ந.பா.சேதுராமன்
படங்கள்: ஸ்டாலின்