புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 பிப்., 2013





          முன்பெல்லாம் பத்திரிகைகளில் க்ரைம் தொடர்கதைகளுக்கு ஒரு பெரிய வரவேற்பு இருக்கும். அதற்கென்றே பிரத்யேகமான எழுத்தாளர்கள் இருந்தார்கள். காலப்போக்கில் அந்த தொடர்கதைகள் மறைந்துவிட்டன. மாறாக அரசியல் படுகொலைகள் அந்த இடத்தை எடுத்துக்கொண்டன. ஒவ்வொரு அரசியல்படுகொலையும் சில வாரங்களுக்கோ சில மாதங்களுக்கோ ஏன் சில வருடங்களுக்கோ பத்திரிகைகளில் நீடித்து பிறகு மறக்கப்பட்டுவிடும். ஆனால் அந்தக்கால க்ரைம் தொடர் கதைகளுக்கும் இந்தத் தொடர்கதைக்கும் முக்கியமான ஒரு வித்தியாசம் என்னவென்றால் பழைய கதைகளின் முடிவில் டிடெக்டிவ் குற்ற வாளியை கண்டுபிடித்துவிடுவார். அரசியல் படுகொலை என்ற க்ரைம் கதையில் குற்ற வாளிகள் யார் என்று மக்களுக்குத் தெரிந்தாலும் போலீசால் அதைக் கண்டுபிடிக்கவே முடியாது. கண்டுபிடித்தாலும் அவர்கள் சட்டத்தின் பிடியிலியிருந்து சுலபமாக வெளியே வந்துவிடுவார்கள்.நக்கீரன் 

தி.மு.க. முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயத்தின் பச்சை ரத்தப் படுகொலையை மறப்பதற்குள் மு.க. அழகிரிக்கு நெருக்கமான பொட்டு சுரேஷ் மதுரையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருக்கிறார். ராமஜெயம் கொலையின் சிறு முடிச்சைக் கூட அவிழ்க்க முடியாத தமிழக போலீசார் பொட்டு சுரேஷ் கொலையில் தி.மு.க.வுக்குள் யாராவது தலைவர்கள் சிக்குவார்களா என படு உற்சாகமாக வேலை செய்து வருகின்றனர்.

தமிழகத்தில் அரசியல் படுகொலைகள் அரசியல் நடவடிக்கை களின் ஒரு பகுதியாகவே மாறிவருகிறது என்ற அச்சம் மேலிடுகிறது. 2011-ம் ஆண்டு அக்டோபர் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற பஞ்சாயத்து அமைப்பு தலைவர்களில் 37 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இதில் சென்னையை  அடுத்த காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மட்டும் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 13 பஞ்சாயத்து தலைவர்கள் படுகொலை செய்யப் பட்டிருக்கின்றனர். கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் நடந்த அரசியல் படுகொலைகளை நாம் அவ்வளவு எளிதில் மறக்க முடியுமா?

1997-ம் ஆண்டு மதுரையில் மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பெண் கவுன்சிலர் லீலாவதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர் பான வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் சிலருக்கு  தண்டனை வழங்கப்பட்டு, அதில் ஒரு சிலர் விடுதலையும் ஆகியுள்ளனர். தி.மு.க., முன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணன்,  கடந்த 2003-ம் ஆண்டு படு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உள்ளிட்ட 15 பேர் குற்றம்சாட்டப்பட்ட நிலையில் குற்றம் நிரூபிக்கப்பட வில்லை எனக் கூறி அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் குற்றவாளிகள் யார்? என்பது இதுவரை தெரியவில்லை.

இதே போன்று, தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா, கடந்த 2004-ம் ஆண்டு நடைபயிற்சி சென்றபோது வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்ட நிலையில், மேல்முறையீடு குறித்த விசாரணை நிலுவையில் உள்ளது. திருவாரூர் தி.மு.க. மாவட்டச் செயலாளராக இருந்த பூண்டி கலைச்செல்வம் 2007-ம் ஆண்டு வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டப்பட்டும் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கின் விசாரணை தற்போது நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.


அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆலங்குடி வெங்கடாசலம் 2010-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி புதுக்கோட்டையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை தீர்ப்பு அளிக்கப்படவில்லை. தேவேந்திர வேளாளர் கூட்டமைப்புத் தலைவர் பசுபதி பாண்டியன் திண்டுக்கல் மாவட்டம் நந்தவனப்பட்டியில் உள்ள அவரது வீட்டில் கடந்தாண்டு வெட்டிக்கொல்லப்பட்டார். இந்த வழக்கின் விசாரணையும் தற்போது நடைபெற்று வருகிறது.

பாரதிய ஜனதா மாநில மருத்துவ பிரிவு மாநில செயலாளராக இருந்த மருத்துவர் அர்விந்த் ரெட்டி, கடந்தாண்டு வேலூரில் அக்டோபர் 25-ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கும் தற்போது விசாரணையில் உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி தொகுதி யின், இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ., ராமச்சந்திரன், பெரியார் திராவிடர் கழக தலைவர் பழனி படுகொலை சம்பவம் தொடர் பான குற்றச்சாட்டில் சிறையில் உள்ளார். 

தி.மு.க., ஆட்சியின் போது அமைச்ச ராகவும், தற்போது தர்மபுரி மாவட்டச் செயலருமாக உள்ள முல்லைவேந்தன், ஊழல் குற்றச்சாட்டில் சிறையிலிருந்த போது, அவரை ரவுடி வெல்டிங் குமார் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கூலிப்படை யாக செயல்பட்டு வந்த வெல்டிங் குமார் பின் னர் சிறைக்குள்ளேயே கொலை செய்யப் பட்டார். 

இந்த பத்தாண்டுகளில் தமிழக அரசியல் வன்முறை களமாகிவிட்டதா? எதற்கு இந்த ரத்த வெறி? அரசியல் என்பது இன்று  அதிகாரத்திற்கான ஆசை மட்டு மல்ல. அது பல கோடி ரூபாய் புரளும் மாபெரும் வர்த்தகமாகிவிட்டது. வியாபாரிகள் தங்கள் வர்த்தக நலன்களுக்காக அரசியலில் இறங்குவதும் அரசியல்வாதிகள் தங்கள் செல்வாக்கை பணமாக்க வியாபாரத்தில் இறங்குவதும் தமிழக அரசியலின் முக்கிய மான அடையாளங்களாகிவிட்டன. 

குறுகிய காலம் ஒரு சிறிய பதவியில் இருப்பவர்கூட நினைத்துப் பார்க்க முடியாத செல்வத்தை திரட்டுவதற்கு இன்று எண்ணற்ற வழிகள் திறந்து கிடக்கின்றன. அரசாங்கம் வழங்கும் பிரமாண்டமான காண்ட்ராக்ட்டுகளில் பெரும்பாலும் அரசியல்வாதிகளே சம்பந்தப்பட்டிருக்கின்றனர். குறிப்பாக மணல் எடுப்பது, கல் குவாரிகள் போன்றவை அரசியல்வாதிகளின் பிடியில் இருக்கின்றன. அதேபோல புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமிப்பது, மாநகராட்சி கட்டிடங்களை வாடகைக்கு எடுப்பது என எல்லாவற்றிலும் அரசியல் மாஃபியாக்கள் கொடிகட்டிப் பறக்கின்றனர். ரியல் எஸ்டேட் வர்த்தகத்தில் ஏற்பட்ட பெரும் எழுச்சி இந்த அரசியல் மாஃபியாக்களின் செல்வாக்கை பெருமளவுக்கு வளர்த்துவிட்டது எனலாம். சட்டவிரோதமாக சொத்துக்களை அபகரித் தல், அடிமாட்டு விலைக்கு வாங்கி அதிக விலைக்கு விற்றல் போன்றவற்றின் மூலம் பெரும்பணம் படைத்த சமூகவிரோத சக்திகள் தலையெடுக்கத் தொடங்கினர். அரசியல்வாதிகள், ரவுடிகள், காவல்துறை யினர், அதிகார வர்க்கத்தினர் இணைந்த மெகா கூட்டணி தமிழகத்தில் உருவானது. இவர்கள் எல்லாச் சட்டங்களையும் வளைத் தனர். எல்லா வழிமுறைகளையும் தமக்கேற்ப மாற்றியமைத்தனர். கிரானைட் ஊழல் போன்ற பிரமாண்டமான ஊழல் கள்தாம் நம் கண்ணுக்குத் தெரிகின்றன. தமிழகத்தின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் ஒவ்வொரு துறையிலும் முறைகேடுகளும் ஊழல்களும் கரை யானைப்போல பரவி நிற்கின்றன. 

காண்ட்ராக்ட்டுகள், ரியல் எஸ்டேட் வர்த்தகம் ஆகியவற்றிற்கு இணையாக அரசியல் மாஃபியாக்களை  கொழுக்க வைக்கும் இன்னொரு துறை கட்டப் பஞ்சாயத்து. கிட்டத்தட்ட போட்டி நீதிமன் றங்கள் போல, போட்டி அரசாங்கம் போல இவை செயல்பட்டு வருகின்றன. சாதாரண குடும்பப் பிரச்சினையில் தொடங்கி, சொத்து விவகாரங்கள் வரை இவை எல்லா பிரச்சினைகளையும் கையில் எடுத்துக்கொண்டு தீர்ப்புகள் வழங்குகின்றன. கட்டப் பஞ்சாயத்துகள்தான் இன்று பல கட்சிகளின் நிதி ஆதாரமாகவே இருக்கின்றன. எங்கெல்லாம் மிரட்டிப் பணம் கறக்க முடியுமோ அங்கெல்லாம் இவை கால் வைக்கின்றன. ஒவ்வொரு கட்சியும் தனக்கான பிரத்யேக கூலிப்படைகளைத் திட்டமிட்டு வளர்க்கிறது. இதில் சிறிய கட்சிகள் , பெரிய கட்சிகள் என்ற பேதமில்லை. அவை பல சமயங்களில் அந்தக் கட்சிகளின் முதுகெலும்பாகவே அந்தப் படைகள் இருக்கின்றன. கட்சிகளின் பிரத்யேக ராணுவமாக இந்தக் கூலிப்படைகள் இருக்கின்றன. முதலில் கூலிப்படைகளாக உள்ளே வரும் ரவுடிகள் பிறகு படிப்படியாக தங்களை அரசியல் சக்தியாகவே வளர்த்துக்கொள்கின்றனர். காவல்துறையோடு அவர்கள் இணைந்து குற்றங்களில் ஈடுபடுகின்றனர். அல்லது காவல்துறையை விட வலிமையான சக்திகளாக தங்களை வளர்த்துக்கொள்கின்றனர். 

ஒவ்வொரு கட்சியும் ஆட்சிக்கு வரும்போது மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த அல்லது தனக்கு உவப்பில்லாத ரவுடிகளை போலி என்கவுன்ட்டர்களில் கொல்வது போன்ற சம்பவங்களும் நடக்கின்றன. இதெல்லாம் ஒரு தொழில் போட்டியே தவிர அதில் சட்ட-ஒழுங்கு நடவடிக்கை ஏதுமில்லை.

அரசியலுக்குள் வந்துவிட்ட இந்தத் தொழில் போட்டிகள் கடும் விரோதங்களை ஊட்டி வளர்க்கின்றன. ஒவ்வொரு கொலைக்கு பின்னாலும் அரசியல் ஆதாயங்களைவிட வியாபாரப் போட்டிகள் முன்னிலை யில் இருக்கின்றன. பொட்டு சுரேஷ், அட்டாக் பாண்டி போன்றவர்களின் சொத்து மதிப்புகளை கேள்விப்பட்டால் தலை சுற்றுகிறது. 

அரசியல் கொலைகள் ஒரே கட்சிகளுக்குள்ளும் மாற்றுக் கட்சிகளுக்குள்ளும்  தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. இதில் சிலசமயம் ஜாதிப் பகையும் சேர்ந்துகொண்டு விடுகிறது. தமிழகத்தில் வேகமாக பரவிக்கொண்டிருக்கும் இந்த அரசியல் கொலைக் கலாச்சாரம் எப்போது வேண்டு மானாலும் யாரை வேண்டு மானாலும் பலிவாங்கும் சக்தி படைத்ததாக மாறிக் கொண்டிருக் கிறது. அரசியல் கொலையாளிகள் மிகவும் திட்டமிட்டு ஒழுங்கமைக் கப்பட்ட பயங்கரவாத குழுக்கள் போல செயல்படுகின்றனர். மேலும் அவர்கள் அரசியல்வாதிகளால் பாதுகாக்கப்படுகின்றனர். சாட்சிகள் மிரட்டப்படுகின்றன. சாட்சியங்கள் அழிக்கப்படுகின்றன. 

காவல்துறைக்குள் ஊடுருவியிருக்கும் அரசியல் செல்வாக்கு. குற்றவாளிகளுக்கு கேடயமாகிறது. அரசியல் கொலைகளை விசாரிப்பதில் அரசியல் பழிவாங்குதல்களும், ஆட்சி மாறும்போது குற்றவாளிகளை காப்பாற்றுதலும் வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. இதனால் பல வழக்குகள் நீர்த்துப் போய்விடுகின்றன. இது அரசியல் கொலையாளிகளுக்கு மிகப் பெரிய துணிச்சலைக் கொடுக்கிறது. 

அரசியல் கொலைகள் ஒரு கலாச்சாரமாக மாறுவது வெறுமனே சட்ட-ஒழுங்கு பிரச்சினையல்ல. அது ஜனநாயகத்தின் மாற்றுக் குரல்களை அடியோடு குழி தோண்டிப் புதைப்பதற்கான எச்சரிக்கை. இன்று அரசியல் போட்டிகள், அதற்குள் இருக்கும் தொழில் போட்டிகளோடு இந்தக் கொலைகள் நிற்கப்போவதில்லை. நாளை மாற்றுக் கருத்துக்களை முன்வைப்பவர்கள், அரசின் ஊழல்களைத் தட்டிக் கேட்பவர்கள் என எவரும் இந்த படுகொலைக் கலாச்சாரத்திற்குப் பலியாகக்கூடும். 

அரசியலில் ரவுடியிஸத்திற்கு சாவுமணி அடிக்கா விட்டால், ரவுடிகள் ஜனநாயகத்திற்கு சாவுமணி அடிக்கும் காலம் வெகுதூரத்தில் இல்லை. ரவுடிகளை தங்கள் கருவிகளாக பயன்படுத்தும் தலைவர்களும், கட்சிகளும் தங்களது சவக்குழிகளை தாங்களே தோண்டிக் கொள்கின்றனர் என்பதே உண்மை.

ad

ad