புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 பிப்., 2013





         ற்பு விவகாரம் தொடங்கி எந்த விவகாரமாக இருந்தாலும் வெகு துணிச்சலாக பதிலளிக்கக் கூடியவர் நடிகை குஷ்பு. அவரது பதில்கள் கின்னஸில் இடம் பிடிக்கும் அளவிற்கு சர்ச்சைகளையும் எழுப்பிவந்திருக்கிறது. இப்போது சொந்தக் கட்சியிலேயே இவரால் எழுந்திருக்கும் சர்ச்சை, இவரைத் தாக்கும் அளவிற்கு நிலைமையை சீரியஸாக்கியிருக்கிறதுநக்கீரன் .

இப்போது தி.மு.க.விற்குள் குஷ்புவால் எழுந்திருக்கும் சர்ச்சையின் பின்னணியைப் பார்ப்போம். 

வேலூர் மேற்கு மாவட்ட பா.ம.க.வினர் 2 ஆயிரம் பேர் கடந்த ஜனவரி 3-ந் தேதி கலைஞர் தலைமையில் தி.மு.க.வில் இணைந்தபோது, கலைஞர் "சமுதாய மேன்மைக்காக என் ஆயுள் உள்ளவரை பாடுபடுவேன். அப்படியானால் அதற்குப் பிறகு என்ற கேள்விக்கு பதில்தான், இங்கே அமர்ந்திருக்கிற ஸ்டாலின்' என்று உற்சாகமாய்ப் பேசினார். இந்தப் பேச்சு  பூகம்பங்களை உருவாக்கும் என்று அப்போது யாரும் நினைக்கவில்லை.

கலைஞரின் இந்தப் பேச்சால் அதிர்ச்சியடைந்த மு.க.அழகிரி, 4-ந் தேதி சென்னை விமான நிலையத்தில், தன்னை சந்தித்த பத்திரிகையாளர்களிடம் "தி.மு.க. ஒன்றும் சங்கரமடம் அல்ல' என்று காட்டத்தைக் காட்டினார்.

அழகிரி, தனது பேச்சை விமர்சித்ததைக் கண்டு டென்ஷனானார் கலைஞர். சென்னை வந்த அழகிரி, சந்திக்க முயன்றபோதும் கலைஞர் அவரை சந்திக்காமல் தவிர்த்தார். இந்த நிலையில் ஜனவரி 6-ந் தேதி தி.மு.க. மா.செ.க்களின் கூட்டம் அறிவாலயத்தில் நடந்தது. அது முடிந்ததும் பத்திரிகை யாளர்களைக் கலைஞர் சந்தித்தார். அப்போது அழகிரியின் சங்கரமட கமெண்ட் பற்றி கேள்விகள் எழுப்பப்பட "பத்திரிகை களின்  விஷமத்தனத்தால் ஏற்பட்ட பிரச்சினை இது. சமுதாய மேம்பாட்டிற்காகப் பாடுபடும் எனக்குப் பின்னால், அதே பணியை ஆற்ற ஸ்டாலின் இருக்கிறார் என்று சொன்னேன். அதில் தவறில்லை' என்றார் கலைஞர். தி.மு.க. அரசியல் இயக்கம் தானே? அப்படியெனில் உங்களுக்குப் பின் தி.மு.க.வில் ஸ்டாலின் என்று எடுத்துக்கொள்ளலாமா? என்று அடுத்த ஒரு கேள்வி எழுப்பப்பட, கோபத்தில் இருந்த கலைஞர் "எனக்கு வாய்ப்பு கிடைத்தால் அடுத்த தி.மு.க. தலைவராக ஸ்டாலின் பெயரை முன்மொழிவேன். ஏற்கனவே பேராசிரியர் முன்மொழிந்திருப்பதால் அதை நான் வழிமொழிவதில் தவறில்லை' என்றார் அழுத்தமாகவே.


இது அழகிரி தரப்பை மேலும் அதிர்ச்சியடைய வைத்துவிட்டது. அதே போல் கலைஞரின் அறிவிப்பை உ.பி.க்கள் வேதவாக்காக எடுத்துக்கொண்டு அடுத்த தலைவர் ஸ்டாலின்தான் என்று பார்க்க ஆரம்பித்தனர். இதனால் அழகிரியிடம் நெருக்கம் பாராட்டி வந்த கட்சிப்புள்ளிகள் பலரும் அவரைவிட்டு விலகி நிற்க ஆரம் பித்தனர். இதை அழகிரியின் பிறந்தநாள் விழாவிலேயே பார்க்க முடிந்தது.

அழகிரியின் பிறந்தநாள் விழா என்றால், வழக்கமாக தென்மாவட்ட தி.மு.க. மா.செ.க் களும் முக்கிய புள்ளிகளும் தவறாமல் அதில் கலந்துகொள்வார்கள். ஆனால் இந்தமுறை மதுரை புறநகர் மா.செ.மூர்த்தி, தேனி மூக்கையா, தர்மபுரி முல்லைவேந்தன் ஆகிய மூன்று மா.செ.க்கள் மட்டுமே கலந்து கொண்டனர். திண்டுக்கல் ஐ.பெரியசாமி, சிவகங்கை பெரியகருப்பன் போன்றவர்கள் அந்தப் பக்கம் தலையைக் கூட காட்ட வில்லை. கலைஞரின் கடுமையான கோபத்தை யும் தனக்கு எதிரான அதிருப்தியையும் கண்ட அழகிரி, ‘சரி, கலைஞருக்குப் பின் யார் தலைவர் என்பதை அவருக்குப் பிறகே தீர்மானித்துக்கொள்ளலாம்’ என வாயை மூடிக்கொண்டுவிட்டார்.

இந்த நிலையில்தான் ஆனந்தவிகடனுக்கு தான் கொடுத்த பேட்டியில் குஷ்பு...

* ஸ்டாலின்தான் அடுத்த தலைவர்ன்னு நாமளே அப்படி ஒரு முடிவுக்கு வந்துடக் கூடாது. 

* தலைவரே என்ன சொல்லியிருக்கார்ன்னா, எனக்கு அப்புறம் சமூகப்பணிகளைத் தளபதி ஸ்டாலின் செயல்படுத்துவார்ன்னுதான். 

* அடுத்த தலைவர் தளபதியாத்தான் இருக்கணும்ன்னு அவசியம் இல்லை. அது கட்சியில் யாராகவும் இருக்கலாம். 

* கட்சியின் அடிமட்டத் தொண்டனாக இருப்பவர்களுக் கும் கூட தலைவரைத் தேர்ந்தெடுக்கும் உரிமை இருக்கு

-என்றெல்லாம் ஸ்டாலினுக்கு எதிரான அந்த பேட்டியில் வெடிகுண்டுகள் வெடித்திருந்தன.

இந்த இதழ், 7-ந் தேதி கடைகளுக்கு வந்து, தமிழகம் முழுக்க இருக்கும் ஸ்டாலின் ஆதரவு உ.பி.க்கள் மத்தியில் அனலைக் கிளப்பிய போது குஷ்பு, திருச்சியில் இருந்தார்.

திருச்சி சிவா இல்ல மணவிழாவிற்காக திண்டுக்கல் சாலையில் இருக்கும் தேசிய கல்லூரிக்கு குஷ்பு வந்தபோது, அவர் மீது அனல் அடிக்கத்தொடங்கியது.

திருமண விழாவிற்கு குஷ்பு கொஞ்சம் தாமதமாக, திராவிடர் கழக வீரமணி பேசிக்கொண்டிருந்த போதுதான் வந்தார்.

அடுத்து வாசனும் நிறைவாக கலைஞரும் உரையாற்ற இருந்தனர். குஷ்புவோ, நேராக கலைஞரிடம் போய் வணக்கம் சொல்லிவிட்டு கொஞ்சம் தள்ளியிருந்த சீட்டில் உட்கார்ந்துவிட்டார். கலைஞரோ, இவ்வளவு தூரத்தில் இருந்து வந்திருக்கிறாரே என்ற பச்சாதாபத்தில், திருச்சி சிவாவைக் கூப்பிட்டு, "குஷ்புவை ரெண்டு வார்த்தை பேசச்சொல்' என்றார். இதைத்தொடர்ந்து குஷ்பு மேடை ஏறினார். அதேநேரம் சென்னை சாந்தோமில் இருக்கும் அவரது வீடு தாக்குதலை சந்திக்க ஆரம்பித்தது. இதை அறியாத குஷ்பு "கல்யாண வாழ்க்கைன்னா நல்லதும் இருக்கும் கெட்டதும் இருக்கும். எல்லாவற்றையும் சமாளித்துக்கொண்டு குடும்பத்தை நடத்தியாகணும். குடும்பம் இல்லன்னா மானம் மரியாதை இருக்காது' என்றபடி மணமக்களை வாழ்த்திவிட்டு இறங்கினார். 


அப்போதுதான் தன்வீடு கல்வீசி தாக்கப்பட்ட தகவல் அவருக்கு வந்தது. பதறிப்போன அவர், இது குறித்து கலைஞரிடம் முறையிட சந்தர்ப்பம் பார்த்தார். முடியவில்லை. இந்த நிலையில் குஷ்புவின் பேட்டி குறித்த விவரம் கல்யாண அரங்கிலும் ஹாட்டாய்ப் பரவியது. கனிமொழி, தன் அருகில் இருந்த உ.பி.க்களிடம்,’"குஷ்பு வரம்பு மீறிப் பேட்டி கொடுத்திருக்காங்க. இது தேவையில்லை' என காரசாரமாகச் சொல்லிக்கொண்டிருந்தார். அங்கேயே குஷ்புவுக்கு எதிரான அலைவீசியது.  

திருமணம் முடிந்து கலைஞர் சங்கம் ஓட்டலுக் குக் கிளம்ப, குஷ்புவும் கிளம்ப ரெடியானார்.  அப் போது புதுக்கோட்டை மாவட்ட இளைஞரணியினர், குஷ்புவைப் பார்த்ததும் ‘குஷ்பு ஒழிக... தளபதி குறித்து அவதூறு பேட்டி கொடுத்த குஷ்பு ஒழிக’ என கோஷம் எழுப்பினர். மிரண்டு போன குஷ்பு, பதட்டமாகப் போய் காரில் ஏறிக்கொண்டார். அவரது கார் கலைஞர் தங்கியிருந்த சங்கம் ஓட்டலுக்குப் போனது. அங்கு கலைஞரை சந்தித்த குஷ்பு "நான் எந்த தப்பான அர்த்தத்திலும் பேட்டி கொடுக்கலை. தளபதிக்கு எதிராவும் எதையும் சொல்லலை. ஆனா என் வீட்டையெல்லாம் கட்சிக்காரங்க தாக்க ஆரம் பிச்சிட்டாங்க. என் ரெண்டு பிள்ளைகளும் அங்கே வீட்டில் இருக்காங்க. அவங்களுக்கு ஏதாவது ஆடியிடு மோன்னு பயமா இருக்கு' என்று கண்ணீர்விட்டுக் கதறினார். கலைஞரோ "சரி பார்த்துக்கலாம். நீ சென்னைக்குக் கிளம்பு' என்றார் ஆறுதலாக. 

அடுத்து ஸ்டாலினையும் சந்திக்க முயன்றார் குஷ்பு. அவரோடு இருந்தவர்கள் "தளபதியோடு வந்திருக்கும் அவர் துணைவியார், உங்க பேட்டியைப் பார்த்து ரொம்ப கோபமா இருக்காங்க. இந்த நேரத்தில் அவரை நீங்க சந்திக்கிறது சரியா இருக்காது' என்று சொல்ல, முடிவை மாற்றிக்கொண்டு அங்கிருந்து தான் தங்கியிருந்த பெமினா ஓட்டலுக்கு வந்தவர், முகப்பில் உ.பி.க்கள் கொதிப்போடு திரண்டு நிற்பதைப் பார்த்து வேறு வழியில் தன் அறைக்குப் போனார். அங்கிருந்து ரூமை வெக்கேட் செய்துவிட்டு வெளியே குஷ்பு வர, அங்கே திரண்டிருந்த ஸ்டாலின் ஆதரவு உ.பி.க்கள், "தளபதி பற்றி அவதூறு பேட்டி கொடுத்த குஷ்புவே ஓடிப் போ'’என்றபடி செருப்புகளையும் மினரல் வாட்டர் பாட்டில்களையும் அவர் மீது வீசினர். அவரது உதவியாளர் அதைத் தடுத்தார். 

மிரண்டுபோன குஷ்பு மீண்டும் ஓட்டலுக்குள் வந்து ஹாலில் உட்கார்ந்துவிட்டார். அதற்குள் போலீஸ், முகப்பில் திரண்டிருந்தவர்களை கலைத்தது, அதற்குள் மீடியாக்களும் வந்துவிட... இதையறிந்து வெளியே வந்த குஷ்பு, காத்திருந்த மீடியாக்காரர்களிடம் ‘"என் கருத்து தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. பேச நேரமில் லை' என்றபடி திருச்சி ஏர்போர்ட்டுக்குப் போனார். ஏர்போர்ட் முகப்பிலும் ஒரு டீம் காத்திருந்தது. குஷ்புவை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்தனர். காரிலிருந்து இறங்கிய குஷ்புவை மீடியாக்காரர்கள் அணுக "மீடியாக்கள் பரபரப் புக்காக நான் சொல்லாததையெல்லாம் எழுதிடுது. அதனால் தேவையில்லாமல் தாக்கப்படுகிறேன்' என்றபடி விடுவிடென ஏர்போர்ட்டுக்குள் போனார். முன்னதாகவே 60 ரூபாய் நுழைவுக் கட்டணத்தை செலுத்தி மாநில மகளிரணி புதுக்கோட்டை விஜயா தலைமையில் ஒரு டீம் உள்ளே இருக்க, அவர்களும் குஷ்புவைப் பார்த்த தும் அவருக்கு எதிராக கோஷம் எழுப்பினர். இப்படி குஷ்புவைத் துரத்தி துரத்தி தங்கள் எதிர்ப் பைக் காட்டினர் ஸ்டாலின் ஆதரவாளர்கள். 

இதுகுறித்து, ஆர்ப்பாட்டம் நடத்திக்கொண்டிருந்த மகளிரணி புதுக்கோட்டை விஜயா, ராஜேஸ்வரி, மாநில தொண்டரணி காரல்மார்க்ஸ் ஆகியோர் நம்மிடம் "தளபதியைப் பற்றி பேச குஷ்புக்கு என்ன அருகதை இருக்கு. முதலில் அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கவேண்டும். அல்லது பேட்டிக்கு மறுப்பு அறிக்கை கொடுக்கவேண்டும். இல்லை என்றால் எங்கள் போராட்டம் தொடரும்' என்றனர்.. புதுக்கோட்டை இளைஞரணிப் பிர முகர்களான கீரை.தமிழ் ராஜன், விஜி, பாலசந்தி ரன் ஆகியோரோ‘"பேட்டியைப் பார்த்ததுமே கொதிச்சிப் போய்ட்டோம். அந்த பேட்டிக்கு சிவா அண்ணன் வீட்டு மணவிழாவிலேயே குஷ்பு மறுப்பு தெரிவிப்பாங்கன்னு எதிர்பார்த்தோம். ஆனா எதுவும் செய்யலை. அதனால் எங்க கோபத்தை மைல்டா தெரிவிச்சிருக்கோம்' என்றனர் கூலாய். சென்னையில் என்ன நடந்தது?

காலை 11 மணிக்கு ஒரு டீம் சாந்தோமில் இருக்கும் குஷ்புவின் வீட்டிற்கு சென்றது. ’""குஷ்பு வே வெளியே வா.. "என்ன தைரியம் இருந்தா எங்க தளபதியை எதிர்த்து பேட்டி கொடுப்பே' என்று ஆவேசக் கூச்சலுடன் சரமாரியாகக் கற்களை வீசியெறிந்தது. இதில் போர்டிகோவில் இருந்த டூம் விளக்குகள் உடைந்து சிதறின. முகப்பில் பெரிய மரக் கதவு இருந்ததால் அவர் களால் உள்ளே போக முடியவில்லை. கோபத்தின் உச்சத்தில் இருந்த அந்தக் கும்பல், வீட்டு முகப்பில் இருந்த ‘குஷ்பு-சுந்தர்.சி’ என்ற நேம் போர்டை பெயர்த்து எடுத்துக்கொண்டு போனது. யார் இந்த தாக்குதலில் ஈடுபட்டது என்று லோக்கல் காக்கிகளிடம் விசாரித்தபோது ‘""முன்னாள் இளைஞரணி பகுதி அமைப்பாளர் வி.எஸ்.ராஜ் தலை மையில் வந்த டீம்தான் இப்படி கல்வீசித் தாக்கியிருக்கு''’ என்றனர். வி.எஸ்.ராஜ் குறித்து விசாரித்த போது ""தி.மு.க. பொதுக்குழுவில் ஸ்டாலினை ஆதரித்து யாராவது பேசினால் இவர்தான் உற்சாக மாகக் குரல் கொடுப்பார். ஒரு முறை வீரபாண்டியார் பேசும் போது, ஸ்டாலின் பெயரைச் சொல்லாமல் மற்றவர்கள் பெயரை மட்டும் சொல்லிக்கொண்டே போனார். அப்போது இவர்தான் எழுந்து, "முதல்ல தளபதி பேரைச் சொல் லுய்யா'ன்னு குரல் கொடுத்தார். அந்த அளவுக்கு அவர் ஸ்டாலினின் தீவிர ஆதரவாளர் என்றனர். வி.எஸ்.ராஜைத் தொடர்பு கொண்டு தாக்குதல் பற்றி கேட்டபோது ""எனக்கும் அந்தத் தாக்குதலுக்கும் சம்மந்தமே இல்லை'' என லைனைத் துண்டித்தார்.

தென்சென்னை தி.மு.க. மா.செ.வும் எம்.எல்.ஏ.வுமான அன்பழகனைத் தொடர்பு கொண்டு இது குறித்துக் கேட்டபோது ""சட்டமன்றத்தில் இருந்து இன்று என்னை வெளியேற்றிவிட்டனர், வெளியே வந்தபின்தான் தாக்குதல் பற்றி கேள்விப்பட்டேன். உடனே அந்தப் பேட்டியையும் படித்தேன். திருச்சியில் இருந்த குஷ்புவைத் தொடர்புகொண்டு, "உங்கள் பேட்டி தளபதிக்கு எதிரான தொனியில்தான் இருக்கிறது. எனக்கே கோபம் வருகிறது. எனவே உடனடியாக பத்திரிகையாளர்களை சந்தித்து மறுப்புசொல்லுங்க' என்று சொன்னேன்'' என்றார் நம்மிடம்.

இது குறித்து குஷ்புவை வியாழன் மாலையில் தொடர்பு கொண்டு நாம் கேட்ட போது ""நான் இன்னும் சென்னைக்கே வரலை. தாக்குதலை யார் நடத்தினான்னு தெரியலை. நான் புகார் கொடுக்கலை. தாக்கியவர்கள் குறித்து கட்சிதான் முடிவெடுக்கணும். என் கருத்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுவிட்டது. அதன் விளைவுதான் இது'' என்றார் படபடப்பு தணியாதவராக.
.

குஷ்புவின் இந்தப் பேட்டியை ஸ்டாலின் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அதேசமயம்  அடுத்த கட்சித்தலைவர் தேர்தலின்போதே, தன்னை கட்சித் தலைவராகக் கலைஞர் ஆக்கவேண்டும் என்று ஸ்டாலின் எதிர்பார்க்கிறார். இதைப்புரிந்து வைத்திருக்கும் அவரது ஆதரவாளர்கள், ஸ்டாலினுக்கு எதிராக யார் வாய் திறந்தாலும் தங்கள் கோபத்தைக் காட்டமாக வெளிப்படுத்துகிறார்கள். இந்த விவகாரத்தில் கூட ‘கலைஞர்தான் குஷ்புவை தளபதிக்கு எதிராக இப்படி பேட்டி கொடுக்க வைத்திருப்பார். இல்லைன்னா, சிவா வீட்டுத் திருமணத்தில் அவரை கலைஞர் பேச வைப்பாரா?’என சுடச்சுட செய்தி பரப்பிக்கொண்டிருக்கிறார்கள். 

இந்த நிலையில், திருச்சியில் கலைஞர், இந்தத் தாக்குதல் குறித்து ஸ்டாலினிடம் கேட்க. "எனக்கே இப்பதான் தெரிஞ்சிது. எல்லோரையும் சத்தம்போட்டேன்' என்று தன்னிலை விளக்கம் கொடுத்திருக்கிறார். குஷ்பு, ஸ்டாலினுக்கு எதிராக கிளப்பிய சூறாவளியை தங்களுக்கு சாதகமாகத் திருப்ப முடியுமா? என்று கூர்ந்து பார்த்துக்கொண்டிருக்கிறது "அ'னா தரப்பு.

மதுரையில் நடந்த ரத்தக்களறியைப் பார்த்த அதிர்ச்சியில் இருந்தே விலகாத கலைஞரை இந்த விவகாரம் மேலும் அப்செட் ஆக்கியிருக்கிறது.

-இளையசெல்வன், ஜெ.டி.ஆர். சேதுராமன்
அட்டைப் படம் : அசோக்

ad

ad