தடா கோர்ட்டில் சரண் அடைந்தார் சஞ்சய் தத்!
சிறையில் அடைப்பு! Photos

சிறையில் அடைப்பு! Photos
கடந்த 1993-ம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 257 பேர் பலியானார்கள். 700 பேர் காயம் அடைந்தனர். இந்த வழக்கில் நடிகர் சஞ்சய்தத் துப்பாக்கிகள், வெடிமருந்து பொருட்கள் பதுக்கியதாக குற்றம் சாட்டப்பட்டது.
மும்பை தடா கோர்ட்டு சஞ்சய்தத்துக்கு 6 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்தது. 6 ஆண்டு ஜெயில் தண்டனையை எதிர்த்து சஞ்சய்தத் டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். சுப்ரீம் கோர்ட் அவரது தண்டனையை 5 ஆண்டாக குறைத்தது. அவர் மும்பை தடா கோர்ட்டில் சரண் அடைய வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
சஞ்சய்தத் சில படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டு இருந்ததால் அவருக்கு கோர்ட்டில் சரண் அடைய நேற்று வரை அவகாசம் அளித்தது. அவகாசத்தை மேலும் நீடிக்க கோரும் மனுக்களை சுப்ரீம் கோர்டடு தள்ளுபடி செய்தது.
இதையடுத்து நடிகர் சஞ்சய்தத் மதியம் 1.30 மணியளவில் அவரது வீட்டிலிருந்து புறப்பட்டார். 2.30 மணியளவில் கோர்ட் வளாகத்தை சென்றடைந்தார். அதன்பின், நீதிபதிகள் முன் ஆஜரான அவர் முறைப்படி கோர்ட்டில் சரணடைவதாக தெரிவித்தார்.
சரணடைந்த சஞ்சய் தத் புனேயில் உள்ள எரவடா ஜெயிலுக்கு கொண்டு செல்லப்பட்டார்.
சஞ்சய்தத் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவித்து இருந்ததால் தெற்கு மும்பையில் உள்ள தடா கோர்ட்டில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். பத்திரிகையாளர்கள், வீடியோ கிராபர்களும் குவிந்து இருந்தனர். பொதுமக்கள், ரசிகர்கள் திரண்டதால் அந்தப் பகுதியில் போக்குவரத்து சிறிது நேரம் தடை செய்யப்பட்டது.
சஞ்சய்தத் ஏற்கனவே 1 1/2 ஆண்டுகள் ஜெயில் தண்டனை அனுபவித்து ஜாமீனில் விடுதலையானார். எனவே அவர் மீதம் 3 1/2 ஆண்டுகள் ஜெயில் தண்டனை அனுபவிக்க வேண்டும்.