புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 மே, 2013

எந்தனை சக்திகள் எதிர்த்து நின்றாலும் தமிழீழத் தேசியத் தலைவர் வழியில் நின்று தமிழீழ விடுதலைக்காக உறுதியுடன் போராடுவோம் – செம்பியன்.

தமிழகத்தில் மாணவர் போராட்டத் தீ பற்றிப் படருவதற்கு வித்திட்ட சென்னை இலயோலா கல்லூரி மாணவர்களில் ஒருவரும் தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பைச் சேர்ந்தவருமான செம்பியன் இதனைத் தெரிவித்திருந்தார்.
ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் சிறிலங்காவிற்கு எதிரான களம் சூடுபிடித்த புறச்சூழலில் அதனை தமிழீழ விடுதலைக்கான களமாக்கும் முயற்சியாக இலயோலா கல்லுரி மாணவர்கள் எட்டுப்பேர் எட்டு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையறையற்ற உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார்கள்.
அவர்களது உண்ணாவிரதப் போராட்டம் அரசியல் சதிகாரணமாக வலிந்து முடித்துவைக்கப்பட்ட போதிலும் யாரும் எதிர்பாராத வகையில் தமிழகம் தழுவியதாக விசுவரூபம் எடுத்து தமிழினத்திற்கு எதிரானவர்களை கலங்கவைத்தது என்றால் மிகையில்லை.
செனீவா தீர்மானம் திட்டமிட்டு வலுக்குறைக்கப்பட்டு வெற்றிபெற்ற பின்னணியிலும் தமிழக அரசால் விடுக்கப்பட்ட கல்லுரிகளிற்கு காலவரையறையற்ற விடுமுறையாலும் மெல்ல மெல்ல அதன் வேகம் தணிந்துபோனது.
இந்தப் பின்னணியில் வரலாற்று பெருமுயற்சியாக மாணவர்கள் கைக்கு சென்ற போராட்டம் வாக்கு அரசியல் மூலம் பிழைப்பு நடத்தும் அரசியல் மற்றும் சாதிக் கட்சிகள் மடைமாற்றும் முயற்சியில் ஈடுபட்டு துரோக பாதைக்கு அடித்தளமிட்டார்கள்.
ஏற்கனவே மாணவர்களை அவர்கள் சார்ந்த சாதி அடிப்படையிலும் ஒவ்வொரு கட்சிக்குள்ளும் உள்வாங்கியிருந்த சூழ்நிலையில் அதனை ஆயுதமாகப் பயண்படுத்தி தத்தமது அரசியல் சுயலாபத்திற்காக மாணவர்களிடையே பிளவுகள் குறித்த அரசியற் கட்சிகளால் ஏற்படுத்தப்பட்டது. இந்தத் துரோகத்தில் தமிழீழ விடுதலையை ஆதரிப்பவர்களும் எதிர்ப்பவர்களும் இணைந்து செயல்பட்டுவருகின்றனர்.
இலயோலாக் கல்லூரி மாணவர்களால் தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு சார்பாக தனித் தமிழீழ விடுதலை ஒன்றே இனப்படுகொலைக்குள்ளாகிவரும் ஈழத்தமிழர்களிற்கு ஒரே தீர்வாக இருக்கமுடியும் என்ற உறுதியான நிலைப்பட்டில் போராட்டத்தை முன்னெடுத்துவந்த நிலையில் வேறுசில பிழைப்புவாத சக்திகளின் தூண்டுதலில் வேறு மாணவர் ஒருவரின் பெரில் பதிவுசெய்து அவர்கள் சார்ந்த மாணவர்கள் குழுவிற்குரியதாக்கிவிட்டார்கள் தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பை.
இதைவிட பல்வேறு சாதிக் கட்சிகள் அரசியல் கட்சிகளின் பின்னணியில் மாணவர்களது போராட்டம் பிளவுபடுத்தப்பட்டது. இன்று யார் உண்மையானவர்கள் என்ற கேள்விக்கு விடைகான்பது பெரும்பாடாய் உள்ளது.
இந்நிலையில் தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பின் உண்மையான மாணவப்போராளிகளில் ஒருவரான செம்பியனை தொடர்பு கொண்டு அவர்களது நிலைப்பாடு தொடர்பாக உலகத்தமிழர்களிற்கு தெளிவுபடுத்துமாறு நாம் கேட்டுகொண்டதற்கினங்க தமது கருத்துக்களை தெரிவித்தார்.
முதலில் இலாயோலா கல்லூரி மாணவர்கள் என விளிப்பதை தவிர்க்கும்படி கேட்டுக் கொள்கின்றேன். உண்ணாவிரதம் இருப்பது என முடிவெடுத்த ஆரம்ப நிலையில் மட்டுமே நாம் இலயோலாக் கல்லூரி மாணவர்கள். அன்று மாலையே அது சென்னை மாணவர்கள் போராட்டமாக மாறியது. நான்காம் நாளில் இருந்து இந்த மாணவர் போராட்டம் ஒட்டு மொத்த தமிழக மாணவர் போராட்டமாக உருவெடுத்தது.
உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் இவ்வளவு மாபெரும் சக்தியாக மாணவர் போராட்டம் விசுவரூபம் எடுக்கும் என நாங்கள் யாரும் நினைத்ததில்லை. ஆனால் எமது கோரிக்கைகள் நிறைவேறும்வரை போராடுவது என்பதில் உறுதியுடன் இருந்தோம்.
நாங்கள் தமிழீழ விடுதலை ஒன்றே ஈழத்தில் சிங்களத்தால் இனப்படுகொலைக்குள்ளாக்கப்பட்டு வரும் ஈழத்தமிழர்களிற்கு நிரந்தர தீர்hவக அமையும் என்பதை உணர்ந்ததால் தமிழீழ விடுதலைக்கான பொதுவாக்கெடுப்பை உடனே நடத்த வேண்டும் என்ற பிரதான இலக்கை முன்வைத்து உண்ணதவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தோம்.
எமது போராட்டம் உக்கிரம்பெற்று உலகக் கவனம்பெற்றுவந்த நிலையில் அதனை இல்லாமல் செய்வதற்கு அரசியல் சக்திகள் முயற்சிசெய்தது. மாணவர்கள் முன்வைத்த அமெரிக்க தீர்மான எதிர்ப்பை அமெரிக்க தீர்மானத்திற்கு ஆதரவாக மாற்ற பலர் முயன்று தோல்வியுற்றனர். சில நாட்களிலேயே எங்களை வற்புறுத்திய அரசியல் கட்சிகளே அமெரிக்க தீர்மானத்தை எதிர்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டது எவராலும் மறுக்கமுடியாத வரலாறு. இது தமிழக மாணவர்களுக்கு கிடைத்த முதல் வெற்றியாகும்.
உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பித்த நேரத்தில் ஈழதேசம் இணையத்தின் மூலம் உலகத் தமிழர்களிற்கு தெரிவித்ததை இங்கு நினைவுபடுத்த விரும்புகின்றேன். வெற்றி அல்லது மரணம்தான் எமது போராட்டத்தின் முடிவாக இருக்கும் என அன்று கூறியதே இன்றும் என்றும் எமது நிலைப்பாடு.
உண்ணாவிரத அரங்கத்தில் இருந்து பலவந்தமாக கைதுசெய்யப்பட்டு மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்ட போது மூடிய அறைக்குள் எம்மை சிறைவைத்தது போன்று போராட்டத்தை முடித்துக்கொள்ளுமாறு எமது சக்திக்கு மிஞ்சியவர்கள் வற்புறுத்தினார்கள். கல்லூரி நிர்வாகமும் இணைந்து எம்மை நெருக்கடிக்குள் தள்ளியதன்விளைவாக போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்து மனக்கவலையுடன் வெளியேறினோம்.
ஆதிக்க சக்திகளினால் எமது உன்னதமான போராட்டம் முடக்கப்பட்டதை நினைத்து மீளமுடியாத மனவேதனையோடு குணிந்த தலைகளுடன் நாம் வெளியேறினோம். பலநாட்கள் எமது இந்த நிலை தொடர்ந்தது. எமது போராட்டத்திற்கு ஆக்கமும் ஊக்கமும் தெரிவித்து உடனிருந்து பலம்சேர்த்த அண்ணன்மார் அக்காமார் அய்யாமார் என எண்ணற்வர்களின் முகத்தில் முழிக்க தயங்கி கைபேசிகளை அணைத்துவிட்டு முடங்கவேண்டிய நிலைக்கு பெரும் மனஉளைச்சலிற்கு ஆளானோம்.
போராட்ட வடிவங்கள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை என்ற தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனையை மனதில் நிறுத்தி எம்மை இயல்புநிலைக்கு கொண்டுவந்தோம்.
மாணவர் போராட்டத்தின் ஆரம்பப்புள்ளி நாங்கள் என்பதோடு ஓதுங்கிக்கொள்ளாது தமிழீழ விடுதலை கிட்டும்வரை தொடர் போராட்டங்களை காலத்திற்கேற்ப முன்னெடுத்துச் செல்வதில் உறுதியாக உள்ளோம்.
இன்று தெலுங்கானா போராட்டம் வெற்றிபெறும் நிலையில் இருப்பதற்கு அங்குள்ள உசுமானியா பல்கலைக்கழக மாணவர்களின் பங்கை யாராலும் மறுக்க முடியாது. வேறுவேறு கொள்கை கொண்ட பலதரப்பட்ட மாணவர்களாக அவர்கள் இருந்தாலும் தனித் தெலுங்கானா என்று வந்துவிட்டால் எல்லா மாணவர்களும் ஒன்றிணைந்து போராடுகின்றார்கள். இதற்கு முக்கிய காரணம் அங்குள்ள அரசியல் கட்சிகள் மாணவர்களை மாணவர்களாகவே செயல்பட வைப்பதுதான்.
ஆனால் இங்கு தனித் தமிழீழ கோரிக்கையை முன்வைத்து மாணவர்கள் போராட முற்பட்ட போது ஒருவார காலத்துக்குள்ளேயே போட்டி மாணவர் அணியை “மாணவ போராட்ட குழு” என்று ஒரு கட்சி அறிவிக்கின்றது. சரி தங்கள் கட்;சியை வளர்ப்பதற்காக சுயநலத்திற்காக அவ்வாறு செய்கிறார்கள் என்று எண்ணினால் நாடாளுமன்றத்தில் தனி ஈழம் அமைவதை தீவிரமாக எதிர்க்கும் பழம்பெரும் கட்சிகூட தங்களது மாணவர் அணியை இந்தப் போராட்டக் களத்தில் இருக்கும் எங்களிடையே புகுத்தி ஒட்டுமொத்த மாணவ போராட்டத்தை சீர்குலைத்து பொது மக்களிடையே குழப்பத்தை உண்டாக்குகிறார்கள்.
உண்ணாநிலை தொடங்கிய மார்ச் 8 முதல் ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேறிய மார்ச்21 வரை வெறும் 14நாட்கள் தமிழக மாணவர்கள் ஒற்றுமையுடன் போராடியதன் உடனடி விளைவாக ஒன்பது ஆண்டுகளாக இணைபிரியாமல் மத்தியில் ஆட்சியிலிருந்த தி.மு.க. – காங்கிசு கூட்டணி முடிவுக்கு வந்தது.
அதோடு நின்றுவிடாது தமிழகத்தில் உள்ள அனைத்து சிறு இயக்கங்கள் முதற்கொண்டு பெரிய கட்சிகள் வரை தங்களுடைய ஈழநிலைப்பாட்டில் மாற்றங்களை ஏற்படுத்தும் நிலையினையும் ஏற்படுத்தியது. தந்திரமாகப் பேசும் நடிகர்களோ தனி ஈழமே தீர்வு எனத் தீர்மானம் நிறைவேற்றினார்கள்.
இந்திய தேசியக் கட்சிகளான காங்கிரசு பாரதிய ஜனதா மார்க்சிட் கட்சிகளின் தமிழர்விரோத முகத்தை கிழித்துக்காட்டினோம். ஈழம் என்ற வார்த்தையையே கடந்த இருபது ஆண்டுகளாக பயண்படுத்தாத அ.தி.மு.க. சட்டப்பேரவையில் மாணவர்கள் முன்வைத்த கோரிக்கைகளை சட்மன்றத் தீர்மானமாக நிறைவேற்றியது. இவை அனைத்தும் தமிழ்நாட்டு மாணவர்களது உன்னதமான போராட்டத்தினால் ஏற்பட்ட உடனடிவிளைவுகளாகும். அனைத்திற்கும் மேலாக உலகத் தமிழர்களிற்கு ஒரு நம்பிக்கை பிறந்தது.
இந்திய அரசும் தமிழர் விரோத கட்சிகளும் நம் எதிரிகளும் மாணவர்களிடையே ஏற்படுத்த வேண்டிய பிரித்தாளும் சூழ்ச்சியை ஈழ ஆதரவு அமைப்புகளும் கட்சிகளுமே செய்தது ஒரு வரலாற்றுப் பிழையாகும்.
மாணவர்களை தங்களது கட்சிக்கும் இயக்கத்துக்கும் சிக்கிய தேர்தல் வாக்குவங்கியாகப் பார்க்காமல் மாணவர்களை மாணவர்களாகவே இயங்க விட்டால் தற்போதைய தமிழக இந்திய அரசியல் சூழலில் ‘ஈழத் தமிழர்களிடத்தில் பொது வாக்கெடுப்பு நடத்த ஐ.நா.விற்கு நெருக்குதல் உண்டாக்க’ தமிழக மாணவர்கள் உறுதுணையாக நிற்பார்கள்.
பல்வேறு பிரிவுநிலையில் மாணவர் போராட்டம் தொடர்ந்து வருகின்றது. மற்றைய மாணவர் குழுக்கள் தாம் சார்ந்தவர்களின் கொள்கைகளிற்கு தகுந்தவாறு கோரிக்கைகளில் மாற்றங்களை செய்து போராட்டத்தை முன்னெடுத்துவருகின்றார்கள்.
மற்றவர்கள் போராட்டத்தை முன்னெடுப்பதை தவறு என்று சொல்லவில்லை. அறுபது ஆண்டுகளாக சிங்கள பேரினவாத அடக்குமுறைக்குள் சிக்கித்தவித்து பெரும் துன்பங்களையும் துயரங்களையும் கடந்து மாபெரும் அழிவைச் சந்தித்து நிற்கின்ற ஈழத்தமிழர்களே தமது தலையெழுத்தை தீர்மாணிக்க வேண்டும் என்பதில் நாம் உறுதியாக நிற்கின்றோம்.
ஒன்றுபட்ட இலங்கைக்குள் என்ற வாதமே இனி பயணற்றது எனுமளவிற்கு காரணங்கள் மலைபோல் குவிந்துள்ள புறச்சூழலில் எங்கள் தலைவர் கட்டியமைத்து அரசாண்ட தமிழீழ சோசலிசக் குடியரசை உலகம் அங்கீகரிக்க வேண்டும். அதற்கான பொதுவாக்கெடுப்பை ஈழத்தமிழர்களிடத்தில் நடத்த இந்தியா உள்ளிட்ட உலகநாடுகள் முன்வரவேண்டும்.
அதனை சமரசமின்றி ஏற்றுக்கொண்டு போராடும் மாணவர்கள் யாராக இருந்தாலும் அவரவர் தளங்களில் நின்று போராடுங்கள்.
தமிழகத்தில் மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டங்களிற்கு தார்மீக ஆதரவளித்துவரும் புலம்பெயர்வாழ் ஈழத்தமிழ் சொந்தங்களிற்கு இந்நேரத்தில் நன்றி சொல்லக்கடமைப்பட்டுள்ளோம். தமிழீழத்தை வென்றெடுக்கும் போராட்டத்தில் நாங்களும் உங்களுடன் என்றும் உறுதியுடன் களமாடுவோம் என்பதனையும் இந்த சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்கின்றோம் என்று செம்பியன் தெரிவித்துள்ளார்.
எமக்கு ஒரு நாடு வேண்டும் – எமது மக்களிற்கு விடுதலை வேண்டும் – எமது இனம் சுதந்திரமாக வாழவேண்டும் என நாற்பதாயிரத்திற்கு மேற்பட்ட சுதந்திர பிரகடனங்கள் நிகழ்த்தப்பட்டுவிட்டது. அதனை மாற்றவோ மறக்கவோ எமக்கு அதிகாரமமில்லை. ஏன்என்றால் அது சத்திய இலட்சியத்திற்காக சரித்திரமாகிவிட்ட மாவீரர்கள் எழுதிய சுதந்திரப் பிரகடனம்.
எமக்கு ஒரு நாடு வேண்டும் – எமது மக்களிற்கு விடுதலை வேண்டும் – எமது இனம் சுதந்திரமாக வாழ வேண்டும் என்ற ஆக்ரோசமான இலட்சிய வேட்கையுடனேயே மாவீரர்கள் களத்தில் விழுகின்றார்கள். எனவே எமது மாவீரர்கள் ஒவ்வொருவரது சாவும் எமது நாட்டின் விடுதலையை முரசறையும் வீர சுதந்திரப் பிரகடனமாகவே நிகழ்கின்றது – தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்.
சுதந்திர தமிழீழ விடுதலைக்காக போராடி வீரச்சாவைத் தழுவிக்கொண்ட சந்தனப்பேழைகளான மாவீரர்கள் காட்டிய பாதையில் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் வழிகாட்டுதலில் தொடர்ந்து போராடுவோம். தமிழீழத்தை வென்றெடுப்போம்.
‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்’
நேர்காணல் மற்றும் தொகுப்பு ம.செந்தமிழ்.

ad

ad