டாக்டர் ராமதாஸூக்கு அவசர இதய அறுவை சிகிச்சை
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸுக்கு அவசர இதய அறுவை சிகிச்சை செய்யப்பட இருப்பதாக அக்கட்சியின் இளைஞரணித் தலைவரான அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக
அவர் வெளியிட்ட அறிக்கையில், அதிமுக அரசால் அரசியல் பழிவாங்கும் நோக்குடன் கடந்த ஏப்ரல் 30-ந் தேதி கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் ராமதாஸ் அடைக்கப்பட்டார். 12 நாள் சிறைவாசத்துக்குப் பிறகு மே 11-ந் தேதி விடுதலை செய்யப்பட்டார். அன்று மாலை 7 மணிக்கு தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. அதையடுத்து இரவு 11 மணிக்கு சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார். ராமதாஸூக்கு கடந்த 2 நாள்களாக பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்ட நிலையில், செவ்வாய்க்கிழமை ஆஞ்சியோகிராம் செய்யப்பட்டது. இதையடுத்து, அவருக்கு அவசர இதய அறுவை சிகிச்சை செய்ய மருத்துவக் குழுவினர் முடிவு செய்துள்ளனர். ராமதாஸூக்கு ஓய்வு தேவைப்படுவதால் அவரை யாரும் சந்திக்க மருத்துவமனைக்கு நேரில் வருவதைத் தவிர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.