புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 செப்., 2013

தம்புள்ளை காளியின் சிலையை உடைத்தவர்கள் விரைவில் அழிந்து விடுவார்கள்!- பிரசன்னா இந்திரகுமார்
தம்புள்ளையில் உள்ள காளியின் விக்கிரகத்தை உடைத்தெறிந்ததன் ஊடாக இலங்கைக்கு அழிவு காலம் ஏற்பட்டுவிட்டது. காளியின் கோபம் நிச்சயம் சிலையை உடைத்தவர்களை விரைவில் அழித்துவிடும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

தம்புள்ளை காளி கோவில் விக்கிரகம் சிங்கள அடிப்படை வாதிகளினால் உடைத்தெறியப்பட்ட விடயம் சம்பந்தமாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இச்சம்பவம் தொடர்பாக பிரச்சன்னா மேலும் தெரிவிக்கையில்!
கடந்த காலங்களில் சிறுபான்மையினர் மீது தாக்குதல்களை நடத்தியவர்கள் தற்போது சிறுபான்மையினர் வழிபடும் ஆலயங்கள் மீதும், அவர்களது கடவுள்கள் மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
எங்களது மதத்தில் ஒரு பழமொழி உண்டு “அரசன் அன்றறுப்பான் தெய்வம் நின்றறுக்கும்” என்று, அதன்படி இலங்கை அரசாங்கத்தினாலும், இலங்கையிலுள்ள பௌத்த வாதிகளினாலும் மேற்கொள்ளப்படும் தாக்குதல்களுக்கான தண்டனைகளை நிச்சயம் இறைவன் வழங்குவார்.
இன்று சகல சமூகங்களையும் இணைப்பதற்கு அரசாங்கம் பாலம் அமைப்பதாக சிலர் கூறுகின்றனர். ஆனால் அதே சமூகங்களை பிரிப்பதற்காகவே பள்ளிவாசல்கள் மீதும், இந்து ஆலயங்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றது என்பதனை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
என்னைப் பொறுத்தவரை அரசாங்கம் வடகிழக்கில் பாலங்களை அமைப்பது சமூகங்களை இணைப்பதற்காக அல்ல. மாறாக சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்வதற்காகவும், பௌத்த மதத்தை பரப்புவதற்காகவுமேயாகும்.
தெற்கில் சிறுபான்மையினரின் மதஸ்தலங்கள் மீது தாக்குதல்களை நடாத்தும் பௌத்த அடிப்படைவாதக் குழுக்களை கண்டு கொள்ளாத அரசாங்கம் வடகிழக்கில் புத்தர் சிலைகளை அமைக்கும் பௌத்த அடிப்படைவாதக் குழுக்களுக்கு பாதுகாப்பு வழங்குகின்றது. இந்த அரசாங்கத்தை நாம் எவ்வாறு சமூகங்களை ஒன்றிணைக்கும் அரசாங்கம் என்று பாராட்ட முடியும்.
இந்து ஆலயங்கள் தாக்கப்படுவதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினால் அது மத வன்முறையைத் தூண்டும் எனக் கூறி தடுக்கும் பொலிஸார் தம்புள்ளை காளிகோயில் மீது தாக்குதல் நடத்தும் போது அதனை வேடிக்கை பார்ப்பது எந்த வகையில் நியாயமானது அது மட்டும் மத வன்முறை இல்லையா?
இந்த நாட்டில் இன்று சிறுபான்மையினருக்கான அனைத்து உரிமைகளும் மறுக்கப்பட்டே உள்ளது. ஒவ்வொரு இனத்திற்கும் வெவ்வேறு உரிமைகள் இந்த நாட்டில் இருக்கின்றது என்பதையே தம்புள்ளை காளிகோயில் மீதான தாக்குதல் எடுத்துக் காட்டியுள்ளது. இங்கு இனங்களை மட்டுமல்ல உரிமைகளையும் அரசாங்கம் பிரித்தே வைத்துள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

ad

ad