காங்கிரசை எதிர்ப்பது ஒன்றே எங்கள் இலக்கு: வைகோ
கூட்டத்தில் சென்னை மாவட்ட ம.தி.மு.க. சார்பில் ஒரு கோடியே 31 லட்சம் ரூபாய் தேர்தல் நிதியாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவிடம் வழங்கப்பட்டது. பின்னர் கூட்டத்தில் பேசிய வைகோ,
ஊழல் என்பது இந்திய வரலாற்றில் இல்லாத அளவுக்கு தலைவிரித்தாடுகிறது. 64 கோடி ரூபாய் போர்பஸ் ஊழல் செய்த ராஜீவ்காந்தி அரசை மக்கள் தூக்கி எரிந்தார்கள்.
இன்று லட்சக்கணக்கான கோடி ஊழல் நடைபெற்று உள்ளது. அது எல்லாவற்றையும் விட கோப்புகள் காணவில்லை என்று கூறினால் அரசாங்கம் இங்கு இருக்கிறதா?. மக்களின் கோபம் கடுமையான அளவிற்கு காங்கிரஸ் மீது உள்ளது.
எனவே ம.தி.மு.க.வின் இலக்கு தமிழ்நாட்டை வஞ்சித்ததாலும், தமிழக வாழ்வாதாரத்திற்கு கேடு விளைவித்ததாலும், காவிரி உள்ளிட்ட நதி நீர் பிரச்சினைகளில் துரோகம் செய்ததாலும், லட்சக்கணக்கான ஈழத்தமிழர்களை படுகொலை செய்வதற்கு முழுக்க முழுக்க காரணமாக இருந்ததாலும், காங்கிரசை எதிர்ப்பது ஒன்றே எங்கள் இலக்காக கொண்டு எங்கள் அணுகுமுறையை வைத்துள்ளோம். இவ்வாறு வைகோ பேசினார்.