11 அக்., 2013

யுவராஜ் அதிரடியில் இந்தியா அசத்தல் வெற்றி: 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்தது அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவுக்கெதிரான டி20 போட்டியில் யுவராஜ் அரை சதம் கடந்து கைகொடுக்க இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா சென்றுள்ள அவுஸ்திரேலிய அணி ஒரு டி20, 7 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. டி20 போட்டி இன்று ராஜ்கோட்டில் நடக்கிறது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணியின் அணித்தலைவர் மஹேந்திர சிங் டோனி களத்தடுப்பை தெரிவு செய்தார்.
அவுஸ்திரேலியா அணிக்கு மட்டின்சன், ஆரோன் பின்ச் ஜோடி நல்ல தொடக்கம் கொடுத்தது. வினய் ஓவரில் மட்டின்சன் இரண்டு பவுண்டரி விளாசினார்.
தன் பங்கிற்கு அஷ்வின் பந்துவீச்சில் பின்ச் இரண்டு பவுண்டரி அடித்தார். இப்படி மாறி மாறி பவுண்டரி விளாச ஸ்கோர் உயர்ந்தது. மட்டின்சன் 34 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
அரை சதம் கடந்த ஆரோன் பின்ச் 89 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். மேக்ஸ்வெல் 27 ஓட்டங்களும், ஹென்ரிக்ஸ் 12 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
அவுஸ்திரேலியா அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 201 ஓட்டங்கள் எடுத்தது. இந்திய அணி சார்பில் வினய், புவனேஷ்வர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
இதனையடுத்து கடின இலக்கை துரத்திய இந்திய அணி 19.4 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 202 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
ரெய்னா 19 ஓட்டங்களும்,  தவான் 32 ஓட்டங்களும், கோஹ்லி 29 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். ஆட்டமிழக்காமல் யுவராஜ் அரைசதம் கடந்து 77 ஓட்டங்களும், டோனி 24 ஓட்டங்களும் எடுத்தனர்.