11 அக்., 2013

வடக்கில் வறுமை, பொருளாதார சுமைகளால் பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடும் நிர்ப்பந்தம்: விசாகா தர்மசேன

இலங்கையில் வடக்கு பகுதியில் யுத்தத்தின் பின்னர் அதிகளவான பெண்கள் தங்களது வருவாய் மூலமே குடும்பத்தை நடத்த வேண்டிய வறுமையான சூழல் உருவாகியுள்ளது.


இந்நிலையில் வடக்கில் அதிகளவான பெண்கள் உயிர் வாழ்வதற்காக பாலியல் தொழிலில் ஈடுபடுவதாக இணையத் தளமொன்று சுட்டிக்காட்டியுள்ளது.

வடக்கில் மாத்திரம் 7 ஆயிரம் பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளதாகவும் அவ்விணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.

போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் அமைப்பின் தலைவி விசாகா தர்மசேன இது குறித்து கருத்துத் தெரிவிக்கையில்,

யுத்தத்தில் கணவனை இழந்த மற்றும் கணவன்மார் காணாமல்போன பெண்கள் தங்களது வாழ்வாதார தேவைகளுக்காக, குடும்ப சூழ்நிலை காரணமாக இவ்வாறான தொழில்களுக்குள் செல்ல வேண்டி நிர்ப்பத்தத்திற்குள்ளாகின்றனர்.

இலங்கை அரசாங்கம் 2012ம் ஆண்டு மேற்கொண்ட ஆய்வின் படி வடக்கில் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் 59 ஆயிரத்திற்கும் அதிகமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இவ்வாறான பெண்களில் அதிகமானோர் குடும்ப வறுமை பொருளாதார சுமைகளைத் தாங்க வேண்டிய சூழலில் பாலியல் வர்த்தகத்தில் ஈடுபடுகின்றனர்.

வடக்கில் இராணுவம் வலுவான நிலையில் இருப்பதாக தெரிவிக்கும் விசாகா தர்மசேன, வட பகுதியில் இடம்பெறும் கட்டிட நிர்மாணப் பணிகளுக்கு தெற்கிலிருந்து ஆட்களை கொண்டு வரப்படுகின்றனர்.

இது வர்த்தக ரீதியிலாக பாலியல் தொழில் அதிகரிக்க காரணமாகி விடுவதாக குறிப்பிட்டார்.