11 அக்., 2013

சந்திரபாபுநாயுடு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்
டெல்லியில் உண்ணாவிரதம் இருந்த சந்திரபாபுநாயுடு, உடல்நிலை மோசமாக ஆனதால் சிகிச்சைக்காக் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.தனி தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தெலுங்கு தேச தலைவர் சந்திரபாபு நாயுடு டெல்லியில் உள்ள ஆந்திர பவன் வளாகத்தில் சாகும்வரை உண்ணாவிரதம் தொடங்கினார்.
தெலுங்கானா விவகாரத்தில் சீமாந்திரா பகுதி மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தி நடக்கும் அவரது உண்ணாவிரதம் இன்று 5–வது நாளாக நீடிக்கிறது. தண்ணீர் மட்டும் அருந்தி வருகிறார். இருந்தாலும் தற்போது அதிக தண்ணீர் கூட எடுத்துக் கொள்ள முடியவில்லை.
இதனால் அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டது. ரத்தத்தில் சர்க்கரை அளவு கனிசமாக குறைந்தது. அதோடு இடுப்பு வலியாலும் அவதிப்பட்டார். இதனால் உட்கார முடியாமல் சோர்வடைந்து படுத்த நிலையில் உண்ணாவிரதத்தை தொடர்ந்தார். டாக்டர்கள் குழு அவரது உடல்நிலையை அடிக்கடி பரிசோதித்து வருகிறார்கள்.
உண்ணாவிரதத்தை கைவிடும்படி அவர்கள் கேட்டுக் கொண்ட போதிலும் அதனை ஏற்க சந்திரபாபு நாயுடு மறுத்து விட்டார். 5 நாளில் அவரது உடல் எடை 3 கிலோ குறைந்தது.நேற்று டெல்லியில் பலத்த மழை பெய்தது. இதனால் உண்ணாவிரத பந்தல் நனைந்தது. குளிர் நிலவுவதால் சந்திரபாபு நாயுடு தண்ணீர் அருந்துவதையும் குறைத்துக் கொண்டார். இதனால் உடல்நிலை மோசமாகி வந்தது.
இந்நிலையில் அவர் உண்ணாவிரத பந்தலில் இருந்து அகற்றப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.