புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 டிச., 2013




           பா.ஜ.க. ஐந்து மாநில தேர்தல்களில் நான்கில் வெற்றி பெற்ற பிறகும் நிம்மதி இல்லா மல் இருக்கிறது. அது இப்போது யார் மீதாவது உச்சக்கட்ட எரிச்சலில் இருக்கும் என்றால் அது ஆம் ஆத்மி கட்சியின் மீதும் அதன் தலைவர் அர்விந்த் கெஜ்ரிவால் மீதும்தான். இந்தக் கட்டுரை எழுதப்படும்வரை டெல்லி சட்டசபையில் யார் ஆட்சிப் பொறுப் பேற்கப் போகிறார்கள்
என்று தெளிவாக வில்லை. பிறந்து ஒரு வருடம்கூட ஆகாத ஆம் ஆத்மி கட்சி 28 இடங்களைக் கைப்பற்றி எல்லா அரசியல் கட்சிகளுக்கும் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறது. ஆட்சி அமைக்க 36 இடங்கள் தேவை. ஆனால் பா.ஜ.க.விடம் இருப்பதோ 32 இடங்கள். காங்கிரஸ்  வெறும் 8 இடங்களுடன் அதன் கோட்டையிலிருந்து வெளியேற்றப்பட்டுவிட் டது. ஆட்சி மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. ஆனால் அதிகாரத்தை ஏற்க யாரும் முன்வர மறுக்கிறார்கள்.  ஆம் ஆத்மி கட்சியின் ஆதரவுடன் பா.ஜ.க ஆட்சியமைப்பது ஒரு வழி. ஆம் ஆத்மி கட்சிக்குள்ளேயே அதற்கான ஆதரவு குரல்கள் ஒலிக்கத் தொடங்கியிருக் கின்றன. வலுவான லோக்பாலை உருவாக்க வாக்குறுதி அளித்தால் குறைந்தபட்ச செயல் திட்டத்தின் அடிப்படையில் பா.ஜ.க. ஆட்சியமைக்க உதவலாம் என்கிற கருத்துக்கள் கட்சிக்குள் முன்வைக்கப் படுகின்றன. ஆனால் காங்கிரஸ் எதிர்ப்பு அலையில் பா.ஜ.கவுக்கு வந்திருக்க வேண்டிய வாக்குகளைத் தான் ஆம் ஆத்மி பெற்றிருக்கிறது. இந்நிலையில் உடனடியாக பா.ஜ.க.விற்கு ஆதரவளித்தால் அது தன்னுடைய செல்வாக்கை மங்கச் செய்யலாம் என அர்விந்த் கெஜ்ரிவால் நினைக்கலாம். நாடாளு மன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் சூழலில் எந்தக் கட்சியுடனும் சமரசம் செய்துகொண்டு தன்னுடைய கவர்ச்சியை இழக்க அவர் விரும்ப மாட்டார். 

பா.ஜ.கவை பொறுத்தவரை அர்விந்த் கெஜ்ரி வாலை நம்பி ஆட்சியமைக்க அதற்கு தயக்கங்கள் இருக்கின்றன. கெஜ்ரிவாலின் ஒரே மூலதனம் எதிர்ப்பு அரசியல். எனவே உடன் இருந்து குடைச் சல் கொடுப்பார். ஆட்சியை எந்த நேரத்திலும் நெருக்கடிக்கு ஆளாக்குவார் என்று பா.ஜ.க யோ சிக்கக்கூடும்.  பா.ஜ.க. ஆதரவுடன் ஒரு வேளை ஆம் ஆத்மி ஆட்சியமைக்க வேண்டிய சூழல் ஏற் பட்டால் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கும் பா.ஜ.க.விடம் அதே பயம் இருக்கும். ஆம் ஆத்மியை செல்வாக்கு இழக்கவைக்க பா.ஜ.க எந்த தந்திரத்தையும் கையாளும் என்று அவருக்குத் தெரியும். காங்கிரஸ் இந்தச் சூழலை மிகவும் ரசிக்கிறது. அது ஆம் ஆத்மிக்கு ஆதரவளிக் கத் தயாராக இருக் கிறது. ஆம் ஆத்மியின் நம்பகத்தன்மையை சீர்குலைக்க அதுதான் சிறந்தவழி என்று காங்கிரசிற்குத் தெரியும். ஆனால் அர்விந்த் கெஜ்ரிவால் அவ்வளவு ஏமாளியல்ல. இப்படி எல்லோருமே ஒருவரையொருவர் சந்தே கிக்கும் சூழலில் குடியரசுத் தலைவர் ஆட்சி டெல்லி யில் பிரகடனப்படுத்தப்பட்டு நாடாளுமன்றத் தேர் தலுடன் மீண்டும் டெல்லி சட்டசபைக்கு தேர்தல் நடத்துவதுதான் மிஞ்சியிருக்கும் ஒரே வழி. 



ஆனால் அப்படி நடந்தால் அது ஆம் ஆத்மி கட்சிக்கு இழப்புகளையே ஏற்படுத்தும். பொதுவாக  பழைய அதிகார சக்திகள் வீழ்ச்சியடைந்து புதிய சக்திகள் மேலே வரும்போது மக்கள் அவர்களிடம்  ஒரு ஸ்திரத்தன்மையை எதிர்பார்க்கிறார்கள். ஆனால் இந்திய வரலாற்றில் அது அவ்வளவு சுலப மாக நடப்பதில்லை. நெருக்கடிநிலையை எதிர்த்து ஜனதா கட்சிக்கு 1977இல் மிகப்பெரிய வெற்றியை மக்கள் அளித்தார்கள். ஆனால் அந்த அரசு உறுதி யற்று வீழ்ச்சியடைந்தது. இந்திரா காந்தி மூன்றே ஆண்டுகளில் மிகப்பெரிய வெற்றியுடன் மறுபடி ஆட்சியமைத்தார். 1989இல் ராஜீவ் காந்திக்கு எதிராக ஊழல் எதிர்ப்பின் மகத்தான நாயகனாக வி.பி.சிங் எழுந்து வந்தார். பா.ஜ.க., இடது சாரிகள் என வினோதமான ஆதரவு நிலைகளுடன் ஆட்சி யமைத்தார். ஓராண்டிற்கு மேல் தாக்குப் பிடிக்க முடியவில்லை. மீண்டும் காங்கிரஸ் கைக்கு ஆட்சி போனது. மாநில அளவிலும் இதுபோன்ற பரிசோத னைகள் நடந்துள்ளன. மாணவர் போராட்டத்தி லிருந்து எழுந்த அசாம் கண பரிஷத் ஒரு காலத்தில் மிகப்பெரிய அரசியல் சக்தியாக எழுந்து அதிகாரத் தைக் கைப்பற்றியது. பிறகு அது இருந்த இடம் தெரியாமல் துடைத்து எறியப்பட்டது. நாம் இதை புதிய அரசியல் சக்திகள் வெற்றி பெற இயலாது என்ற அர்த்தத்தில் சொல்லவில்லை. மாறாக அவை உள்முரண்பாடுகளாலும் கற்பனையான இலட்சிய வாதங்களாலும் சீக்கிரமே சரிந்துவிடுகின்றன. பெரிய கட்சிகள் இந்த புதிய சக்திகளை வேட்டையாட எப்போதும் தயாராக இருக்கின்றன.  

ஆனால்  ஒரு தேர்தலில் வென்றால் அதிகாரத் தில் பங்கெடுத்தால் மட்டுமே ஒரு கட்சி அடுத்த நிலைக்குச் செல்ல முடியுமென்பது எதார்த்தம். குறைந்தபட்சம் சட்டசபையில் ஒரு வலுவான எதிர்க் கட்சியாகவாவது செயல்பட வேண்டும். ஆனால் ஆம் ஆத்மி இரண்டையுமே செய்ய முடியாத ஒரு இக் கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. இப்போது கிடைத்த வாக்குகளை வரும் நாடாளுமன்ற தேர்தல் வரை தக்கவைத்து சில தொகுதிகளில் வெற்றி பெற முடியுமா என்பதுதான் இப்போதைக்கு அதன் கனவு. டெல்லி வெற்றியால் நாடாளுமன்றத் தேர்தலில்   நாடு முழுக்க வேட்பாளர் களை நிறுத்த முடியுமா என்று அது யோசிக்கிறது. ஹரியானாவில் ராபர்ட் வதேராவின் நில ஊழலை வெளிப்படுத்திய ஐ.ஏ.எஸ். அதிகாரி அசோக் கெம்கே, உ.பி.யில் மணல் கொள்ளையரை எதிர்த்ததற்காக பழி வாங்கப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி சக்தி நாக்பால் போன்றோரை அது தன்னுடன் இணைத்துக்கொள்ள முயன்று வருகிறது. இவ்வாறு ஒவ்வொரு மாநிலத்திலும் அரசாங்கத்தோடு போராடிய, அரசாங்கத்தால் பழி வாங்கப்பட்ட அதிகாரிகள், நேர்மையாளர்கள் என்ற அடையாளம் கொண்டவர்களை முன்னிறுத்தி தனது அரசியல் களத்தை விரிவு படுத்தலாம் என அர்விந்த் கெஜ்ரிவால் நினைக்கிறார். ஆனால் அது அவ்வளவு எளிதல்ல. டெல்லியின் அரசியல் களம் என்பது வேறு. அன்னா ஹஸாரேயின் ஊழலுக்கு எதிரான போராட் டங்கள், பெண்கள் மீதான பாலியல் வன்முறைக்கு எதிராக நடந்த கிளர்ச்சிகள், மத்தியதர வர்க்கத்தை மையமாக வைத்து அர்விந்த் கெஜ்ரிவால் நடத்திய மின்கட்டணக் குறைப்பு உள்ளிட்ட போராட்டங்கள் எல்லாமே ஆம் ஆத்மிக்கு அங்கு இயல்பாக ஒரு களத்தை உருவாக்கி தந்தன. இது எதுவுமே மும்பை, கொல்கத்தா, சென்னை போன்ற நகரத்தில் நடப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. அன்னா ஹஸாரேயின் போராட்டங்கள் கூட டெல்லியைத் தவிர வேறு எங்கும் வெற்றி பெறவில்லை. 

ஆனால் ஆம் ஆத்மி கட்சியின் வெற்றி இங்குள்ள பிரதான கட்சிகளால் கசப்படைந்த பலருக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பெரிய பணம் எதுவுமில்லாமல், தொண்டர் படை இல்லாமல், கட்சி நடத்திய அனுபவம் எதுவுமில்லாமல் சாதி, மத பிராந்திய உணர்வுகள் எதையும் பயன்படுத்தா மல், சினிமா போன்ற வெகுசன கவர்ச்சி இல்லாமல் பிரச்சினைகளின் அடிப்படையில் மட்டும் இந்தியாவில் ஒரு கட்சி தோன்றி வெல்ல முடியும் என்பது ஒரு முக்கியமான மாற்றமாக பார்க்கப்படுகிறது. இதை நாம் புறக்கணிக்க முடியாது. ஒரு காலத்தில் இடதுசாரிகளுக்கு இத்தகைய ஒரு அடையாளம் இருந்தது. ஆனால் இடதுசாரிகள் பிற மைய நீரோட்ட கட்சிகளோடு செய்துகொண்ட சமரசங் கள் அவற்றை முற்றாக நீர்த்துப்போகச் செய்துவிட்டன. அந்த வெற்றிடத்தை இன்று ஆம் ஆத்மி போன்ற கட்சிகள் நிரப்ப முயல்கின்றன. 

மோடி மாற்றத்தின் நாயகனாக, வளர்ச்சியின் நாயகனாக, மத்தியதர வர்க்கத்தின் கனவான உறுதியான ஒரு அரசாங்கத்தைத் தரும் நாயகனாக தொடர்ந்து முன்னிறுத்தப்படுகிறார். ஆனால் அவரது வகுப்புவாத பிளவு படுத்தும் அரசியல் இந்த கதாநாயக பிம்பத்தை தொடர்ந்து அழித்துக் கொண்டே இருக்கிறது. டெல்லி தேர் தலில் அர்விந்த் கெஜ்ரிவால் செய்த முக்கியமான ஒரு பணி, மோடி அலை என்ற மாயையை உடைத்தது தான். மோடி டெல்லியைக் குறி வைத்துதான் தீவிர பிரச்சாரங்கள் மேற்கொண்டார். அதிகமான பொதுக் கூட்டங்களை அங்கு தான் நடத்தினார். ஆனால் அவரது மேஜிக் எதுவும் அங்கு எடுபடவில்லை. இப்போது ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க வென்றதற்கு மோடிதான் காரணம் என்று பா.ஜ.க. கதறிக் கொண்டிருக்கிறது. நீண்டகாலமாகவே இந்த மாநிலங்கள் பா.ஜ.க. வின் கோட்டைகள். ராஜஸ்தானில் வசுந்தரா ராஜேவின் செல் வாக்குதான் அங்கு காங்கிரசை வீழ்த்தி மறுபடி பா.ஜ.க. ஆட்சியைக் கொண்டுவர காரணம் என அங்குள்ள பா.ஜ.க.வினரே கூறுகின்ற னர். மத்திய பிரதேசத்தில் சிவராஜ் சிங் சவுகான்  அரசின் நலத் திட்டங்கள் அவருக்கு பெரும் செல்வாக்கை அந்த மாநிலத்தில் ஏற்கனவே உருவாக்கியிருந்தன. சிவராஜ் சிங் சவுகான் மோடிக்குப் பதில் பிரதமர் வேட்பாளருக்கு தகுதியானவர் என்று அத்வானியே சில காலத்திற்கு முன்பு கூறினார். சட்டீஸ்கர் முதல்வர் ராமன்சிங் பொது விநியோக முறையை சிறப்பாகச் செயல்படுத்தியதன் மூலம் மக்களின் ஆதரவை தக்கவைத்துக் கொண்டார். இவ்வாறு மூன்று மாநிலங்களிலும் மிக வலுவான தலைவர்களும் அவர்களுக்கு இருந்த மக்கள் செல்வாக்கும்தான் பா.ஜ.கவிற்கு அந்தந்த மாநிலங்களில் வெற்றியைத் தேடித் தந்தன. 

காங்கிரஸ் எதிர்ப்பு கடந்த இரண்டு ஆண்டுகளாகவே வீசிக்கொண்டிருக்கிறது. மோடி ஆதரவு அலையும் இரண்டு ஆண்டுகளாகவே அடித்துக்கொண்டிருப்பதாகச் சொல்லப்படு கிறது. ஆனால் சென்ற ஆண்டு உத்தர்காண்ட் மற்றும் இமாசலப் பிரதேசத்திலும் சில மாதங்களுக்கு முன்பு கர்நாடகாவிலும் நடந்த தேர்தல்களில் காங்கிரஸ் வென்று ஆட்சியமைத்ததை எந்த அலை என்று புரிந்துகொள்வது? உ.பி.யில் நடந்த தேர்தலில் மோடி அலை ஏன் பா.ஜ.க.வுக்கு வெற்றி தேடித் தரவில்லை? இப்போது பா.ஜ.க. வென்றிருக்கும் மூன்று மாநிலங்களிலும் 2003லும் இதேபோல வென்றது. அப்போது மோடி என்ன செய்து கொண்டிருந்தார்? குஜராத் படுகொலைகளின் ரத்தக்கறைகளை அவசர அவசரமாக கழுவிக்கொண்டிருந்தார். அந்த மூன்று மாநில வெற்றிகள் 2004 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு வெற்றியைத் தேடித் தரவில்லை. நாட்டில் வெய்யிலடித்தாலும் மழை பெய்தாலும் அது மோடியின் வெற்றி என பா.ஜ.க. முழங்குவது அதன் பதட்டத்தையே காட்டுகிறது. மோடியை மட்டும் நம்பமுடியாது என்றுதான் எடியூரப்பா போன்ற பழம் பெருச்சாளிகளை மீண்டும் கட்சிக்குள் கொண்டுவரும் வேலையில் பா.ஜ.க. இறங்கியிருக்கிறது. மோடி அலை என்பது ஊடகங்களால் மிகைப்படுத்தப்பட்ட ஒரு கட்டுக்கதை.

டெல்லி தேர்தல் முடிவுகள் இந்திய அரசியலில் புதிய சக்தி களுக்கான இடம் உருவாகி வருவதைக் காட்டுகிறது. அர்விந்த் கெஜ்ரிவாலின் கொள்கைகள் எல்லைகளுக்கு உட்பட்டவை. கற்பனாவாதத் தன்மை கொண்டவை. நடைமுறையில் அவ்வளவு எளிதாக நிறைவேற்ற இயலாதவை. ஆனால் எளிமையையும் குறைந்தபட்ச நேர்மையையும் மக்களிடமிருந்து அன்னியமாகாத தன்மையும் கொண்ட கட்சிகளை மக்கள் ஆதரிக்கத் தயாராக இருக்கிறார்கள் என்பதுதான் ஆம் ஆத்மியின் வெற்றி சொல்லும் செய்தி. ஆம் ஆத்மி இந்தியா முழுக்க பரவுவதற்கான வாய்ப்பு குறைவு. ஆனால் ஆம் ஆத்மி போன்ற புதிய கட்சிகள் இந்தியா முழுக்க தோன்றுவதற்கான அவசியம் இருக்கிறது. அதுதான் இந்த இறுக்கமான அரசியல் சூழலை சற்றே நெகிழச் செய்யும். மைய நீரோட்டக் கட்சிகளுக்கு தார்மீகரீதியான நெருக்கடிகளை ஏற்படுத்தும்.

ad

ad