புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 டிச., 2013

           ட்டுக்கு பணம் கொடுத்து வாக்கு வாங்கலாம்... ஆனால் ஏற்காடு இடைத்தேர்தலில் ஓட்டுக்கு கொடுத்த பணம் இரண்டு குடும்பங் களையே காவு வாங்கி இன்று நடுத்தெருவில் நிற்க வைத்துள்ளது. 

அதிகம் வளர்ச்சிபெறாத சின்னகவுண்டாபுரம் ஓட்டப்பட்டிக்குள் நுழைந்து ""முருகன் வீடு எங்கம்மா?''’என்றோம் முள்ளுவெட்டிக்கொண்டு இருந்த பெண்மணியிடம்...’""ஓ எலீக்சன் அன்னைக்கு குழந்தையோட தற்கொலை பண்ணிகிட்டாளே மலரு.. அந்த விசயமா வாரீகளா!''’என்றபடியே வீட்டை காட்டினார். 

ஒற்றை குடிசையில் இருந்து வெளியே வந்தார் முருகனின் தாயார் சித்தம்மா...’""அம்மா உங்க மருமக தற்கொலை விசயமா...’சொல்லி முடிப்பதற்குள் ‘""அவளை மகளாதான் கண்ணு பார்த்துகிட்டேன் இப்படி பண்ணிபுட்டாளே''’ அழுதவர் தொடர்ந்தார்.’

""நாங்கெல்லாம் கூலி வேலைக்கு போறவங்க... ஒரு நாளைக்கு 70ரூபா வந்தா பெரிய விஷயம்... எங்க போயர் ஜாதில  படிச்சவங்களும் பெருசா இல்ல கண்ணு... அந்த நேரத்துல தான் எலீக்சனு வந்துச்சு... கட்சிக்காரங்களா வந்தாங்க... எங்க ஊரையே திருவிழா போல கவனிச்சு கிட்டாங்க.. எங்க ஊரே சந்தோஷப்பட்டுச்சு... ஆனா எங்கூட்டுல மட்டும் அப்பப்போ நிம்மதியில்ல... என் மருமவ மலரு, மவன் முருகன்கிட்ட பொழுதினிக்கும் சண்டை போட்டுகிட்டே இருப்பா... அன்னைக்கு எலீக்சனுல ஓட்டு போட்டுட்டு பேரன் கண்ணனை கூட்டிக்கிட்டு போனா... எப்பவும் போல அவங்கம்மா வீட்டுக்குதான் போவான்னு பார்த்தோம்... ஆனா ரெண்டு நாள் கழிச்சு "உம்மருமவளும், பேராண்டியும் ராமலிங்க புரத்துல இருக்குற கெணத்துல பொணமா மெதக்குறாங்கடி'ன்னு சொன்னாங்க.. என் மாரே அடிச்சுகுச்சு தம்பீ'' கலங்கினார்.

அருவா தீட்டிக்கொண்டு இருந்த சித்தம்மாவின் கணவர் காத்தவராயன்...’""எங்க ஊட்டுல அஞ்சு ஓட்டு... ரெட்டலை கட்சிக் காரங்க ஒண்ணுக்கு ரெண்டாயிரம்னு பத்தாயிரம் ரூவா தந்தாங்க... மூணு மாசம் ஒழைச்சாலும் இம்புட்டு காசு பாக்க முடியுமா? சொளையா கெடச்ச பணத்துல எம்மவன் முருகன் நாலாயிரம் ரூவாய்க்கு செல்லுபோனு வாங்கினான்... அதுலதான் பிரச்சனையே... அதுல புருஷன் பொஞ்சாதிக்கு பிரச்சனை வந்து உசுரையே விட்டுட்டா... போனவ எம் ஆறு வயசு பேரனையும் கூட்டிட்டு போயிட்டாளே... அவன் என்ன பாவம் செஞ் சான்?''’ குமுறினார், பெரியவர்.



கணவர் முருகனோ,’""நாம இருக்குற நிலைமைல எதுக்கு செல்போன் வாங்கினன்னு மலரு கேட்டா... அதுல ரெண்டு பேருக்கும் சண்டை... அப்படி இருந்தும் அன்னைக்கு (டிச.4-ம் தேதி) போயி ஓட்டு போட்டுட்டு வீட்டுக்கு வந்தவ, "இனி உன்கூட ஒரு நிமிஷம் கூட வாழ முடியாது'ன்னு  கோவிச்சுகிட்டு பையனை கூப்டுகிட்டு போனாள். 6 ஆம் தேதி சாயந்திரம் கெணத்துல மிதக்குறா... பாழா போன தேர்தல் வந்து என் பொண்டாட்டிய பிரிச் சுடுச்சே''குமுற... ஆறுதல் சொல்லிவிட்டு காரிப்பட்டி காவல்நிலைய எஸ்.ஐ சவுதம்மா விடம் ""ஓட்டுக்கு பணம் கொடுத்ததால்தான் குடும்ப பிரச்சனை ஏற்பட்டு மலர் தற்கொலை செய்துகொண்டாரா?''’என்றோம். ""அது தெரியவில்லை. விசாரித்து வருகிறோம். தற்போது குடும்ப பிரச்சினையால் தற்கொலை செய்துகொண்டார் என்ற வகையில் வழக்குபதிவு செய்துள்ளோம்'' என்றார். 

சேலத்தில் இருந்து 60 கி.மீ இருக்கும் தும்பல் மலையில் உள்ள வீரன் குடும்பத்திலோ இன்னொரு வகையான துயரம்.  70 வயது கணவன் வீரன் இறந்து கிடக்க அவர் உடலை வைத்துக்கொண்டே அவரின் மனைவி 65 வயது பாப்பாத்தியம்மா வாக்களிக்க சென்று தன் ஜ(ப)னநாயக(!) கடமையை செய்துவந்தார் என்ற தகவல் அறிந்து தும்பல் அருந்ததியர் காலனிக்குள் நுழைந்தோம்... 

பாப்பாத்தியம்மாவின் குடிசையை அடைந்தோம்... சின்னதாக அடுப்பில் உலை கொதித்துகொண்டு இருக்க, இருட்டான அந்த மண் பூசிய குடிசையே வறுமையை பறைசாற்ற, உள்ளே அமரக்கூட இடமில்லாமல் உறவினர்கள் வீதியில் அமர்ந்துகொண்டு இருந்தனர். அவர் மகள்கள் மலர், வசந்தாவிடம் பேசினோம். ‘""அப்பா ஆறு மாசமா படுத்தபடுக்கையா இருந்தாரு. தேர்தல் அன்னைக்கு மொதநாள் நைட் எட்டு மணி இருக்கும் அப்பா எறந்துட்டாரு... ஆனாலும் மக்காநாளு ஓட்டு போட்டுட்டு வந்துதான் அப்பாவ அடக்கம் செஞ்சோம்''’ என்றனர் மகள்கள். 

சடங்குகள் செய்ய கையில் வளையல்களோடு பாப்பாத்தியம்மா இருக்க, ""கணவன்  எறந்துகிடக்குறாரு அந்த நேரத்துலயும் போயி வோட்டு போட்டுட்டு வரணுமா? துக்க நேரத்துல கூட ஜனநாயக கடமையை செய்யணுமாமா?'' என்று நாம் கேட்டதும், ""செத்தவரு எழுந்தா வரபோறாரு... அவரு நேரம் போயிட்டாரு.. அதுக்காக ஓட்டு போடாமலா இருக்க முடியும். மதுரைவீரன் படம் பார்த்ததுல  இருந்து ஒருமுறை கூட  நான் ஓட்டுபோடாம இருந்ததில்ல... அதான் ஒரு பையனை கூப்பிட்டு அவன் புல்லட்டுல உக்காந்துட்டு போயி ஓட்டு போட்டுட்டு வந்தேன் அம்புட்டுதான்''’என்றவர் ‘""ஆனாலும் எம் புருஷன் இன்னைக்கு இல்லை இனி என்ன பாத்துக்க யார் இருக்கா'' என கலங்கினார்.’

""வீரனுக்கு நாலு பசங்க மூணு பொண்ணுங்க அதுல ரெண்டு பசங்க தவறிட்டாங்க.. மத்தவங்க எல்லோரும் இந்தூருலதான் இருக்காங்க''’என்றனர் உறவினர்கள். 

அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்தோம்...’""இங்க முக்காவாசி பேருங்க ரெட்டை எலை ஆளுங்கதான்.. அதுவும் இந்தமுறை வோட்டுக்கு ரெண்டாயிரமும், வழி செலவுக்குன்னு எரநூறு ரூவாயும் வூட்டு ஊட்டுக்கும் வந்து கொடுத்தாங்க.. அதான் ரெண்டாயிரம் ரூவா பணம் கொடுத்தவங்கள மதிச்சு அந்தம்மா ஓட்டு போட்டுட்டு வந்துச்சு.. சடங்கு செய்ய ஆரம்பிச்சுட்டா வெளிய போகமுடி யாதே'' என்றனர் வெள்ளந்தியாய். ஆளும்கட்சி கொடுத்த பணம் சரியாக வேலை செய்துள்ளது, அதனால்தான் சின்ன கவுண்டாபுரத்தில் பதிவான 2149 வாக்குகளில் அ.தி.மு.க 1615 வாக்குகள் பெறமுடிந்தது. தும்பல் மலையை கவனித்தது அமைச்சர் வளர்மதிதான், அவரின் அபார வேலை வாக்குகளில் தெரிந்துள்ளது. பதிவான 3926 வாக்குகளில் அ.தி.மு.க 2634 வாக்குகள் பெறமுடிந்தது. பணத்திற்கு காட்டிய விசுவாசம் உறவுகளை சிதைத்துவிட்டதே’என வருந்தினர் நோட்டாவை பிரச்சாரப்படுத்திய சிலர்.

விரலில் இடும் மை வேட்பாளரின் தலைவிதியை தீர்மானிக்கும் ஜனநாயக மை... ஆனால் அதே விரல்களின் இடுக்கில் பணத்தை சொருகி ஜனநாயகத்தின் உயிரையும் சேர்த்தே காவுவாங்கி வருகிறது கரைவேட்டிகள். ஜனநாயகத்தை மீட்க இன்னும் போராட வேண்டியுள்ளது. அருந்ததியர் காலனியில் இருந்து திரும்பிய எல்லையில் தொடக்கமாக விரல் நீட்டியபடி அண்ணல் அம்பேத்கர் சிலை இருந்தது... அவர் சுட்டிகாட்டுவதும் இதைத்தானோ!

ad

ad