14 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை  நாளை வெளியிடுகிறார். 
தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 14 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை கட்சித் தலைவர்
விஜயகாந்த் நாளை வெளியிடுகிறார். கூட்டணியில் பாமக குழப்பம் ஏற்படுத்து வதாக தேமுதிகவினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
தமிழகத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு இன்னும் முடிவுக்கு வந்த பாடில்லை. பாமக தொடர்ந்து பிடிவாதம் காட்டி வருவதால் கட்சிகளுக்கான தொகுதிகளை இறுதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கூட்டணி கட்சித் தொண்டர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
ஸ்ரீபெரும்புதூர், சேலம், கள்ளக்குறிச்சி, திருப்பூர், கோவை, ஆரணி, விழுப்புரம் உள்ளிட்ட தொகுதிகளை ஒதுக்கீடு செய்வதில்தான் கூட்டணிக் கட்சிகளிடையே இழு பறி நீடிக்கிறது. பாமகவுக்கு ஏற்கெனவே 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது 12 தொகுதிகள் கேட்டு நெருக்கடி கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தேமுதிக போட்டியிடுள்ள 14 தொகுதிகள் மற்றும் வேட்பாளர் பட்டி யலை கட்சித் தலைவர் விஜயகாந்த் நாளை
(19-ம் தேதி) வெளியிடுவார் என கூறப்படுகிறது. இதுதொடர்பாக தேமுதிக மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘‘பாஜக கூட்டணியில் எங்களுக்கு 14 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பாமகவுக்கு 8 தொகுதிகள் ஏற்கெனவே ஒதுக்கப்பட்டு இருந்தது. ஆனால், இப்போது மேலும் சில தொகுதிகளைக் கேட்டு கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர். அவர்கள் வெளியேறுவதற்கு திட்டமிட்டே இவ்வாறு கூடுதல் தொகுதிகளை கேட்கிறார்களோ என்று கருதுகிறோம். எங்களுக்கான தொகுதிகளை பாஜக உறுதி செய்துள்ளது. எனவே, தேமுதிக போட்டியிடும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர்களின் பட்டியலை 19-ம் தேதி தேர்தல் பிரச்சாரம் நடக்கும் இடத்திலேயே விஜயகாந்த் அறி விக்க உள்ளார்’’ என்றார்
.