புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 மார்., 2014

உதவாதினி ஒரு தாமதம்; உடனே எழுக தம்பி!

16வது நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் கழகத்தின் சார்பில் போட்டியிடும் தொகுதிகளும், அந்தத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களும் உரிய நேர்காணலுக்குப் பிறகு அறிவிக்கப்பட்டுவிட்டன. எப்போதும் போல இந்த முறையும், கழக வேட்பாளர்களின் பட்டியலை செய்தி யாளர்களிடம் படித்து விட்டு வெளியே வந்தபோது, என் உள்ளம் என்னிடம் இல்லை. காரணம் என்ன என்பதை, என்னை முழுவதும் அறிந்த நீ நன்றாகவே உணர்வாய்! ஆம்; இந்த முறை தன்னலம் பாராமல் கழகத்திற்காகப் பல ஆண்டுகள் உழைத்த, மூத்த சில உடன்பிறப்புகளின் விருப்பங்களை என்னால் நிறைவேற்ற முடியவில்லை. அவர்கள் என்னிடம் கேட்ட போது, உங்கள் விருப்பத்தை நிறைவேற்றுகிறேன் என்று என்னால் கூறப்பட்ட போதிலும், தோழமைக் கட்சிகளோடு கொண்டுள்ள கூட்டணி உணர்வையும் அவர்களுடைய உள்ளக் கிடக்கையையும் எண்ணிப் பார்க்க வேண்டிய நெருக்கடிக்கு நான் தள்ளப்பட்டேன்.

உதாரணமாக, தம்பி துரைமுருகன் 24 மணி நேரமும் என்னுடன் இருப்பவர்! கழகத்தின் மூத்த உறுப்பினர். துணைப் பொதுச் செயலாளர்களில் ஒருவர். மூத்த அமைச்சராகத் திறம்படப் பணியாற்றியவர். கழகத்தின் சார்பில் போட்டியிட வேண்டிய உறுப்பினர்களின் பட்டியலைத் தயாரிக்கும்போது, என்னுடனும், பொதுச் செயலாளர், பொருளாளர் ஆகியோருடனும் அமர்ந்து ஒவ்வொரு தொகுதிக்கும் வேட்பாளர்களைத் தேர்ந் தெடுக்க உதவி செய்தவர். அவருடைய மகனுக்காக வேலூர் தொகுதி வேண்டுமென்று வேலூர் கழகத்தினர் விருப்பம் தெரிவித்த போது, என்னால் அதனை மறுக்க முடியவில்லை. ஆனால் அந்தத் தொகுதி, நம்முடன் பல ஆண்டுக் காலமாகத் தோழமை கொண்டிருக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தொடர்ந்து போட்டியிட்ட தொகுதி என்றும், அங்கே தற்போது அந்தக் கட்சியின் சார்பில் உறுப்பினராக இருப்பவரே மீண்டும் போட்டியிட விரும்புகிறார் என்றும் அந்தக்

கட்சியின் தமிழ்நாட்டுத் தலைவராக உள்ள பேராசிரியர் காதர் மொய்தீன் அவர்கள் கேட்ட போது அதனை எங்களால் மறுக்க முடியவில்லை. அதிலும் பேராசிரியர் காதர் மொய்தீன் வேறொரு கட்சி என்று கூட கூற முடியாது. தி.மு. கழகத்தின் அனைத்து சுக துக்கங்களிலும் பங்கெடுத்துக் கொண்ட உயர்ந்த பண்பாளர். அந்தத் தொகுதியில் முடிவெடுக்க நான் பட்ட பாட்டினை நான்தான் அறிவேன்.

10-2-1977 அன்று சென்னைக் கடற்கரையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கழகத்தின் சார்பில் 24 நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிடுவதற்கான பெயர்கள் என்னால் அறிவிக்கப்பட்டது. அதில் மத்திய சென்னை தொகுதிக்கு முரசொலி மாறன் பெயர் படிக்கப்பட்டு, கழகத் தோழர்கள் போஸ்டர்கள் எல்லாம் அடித்து, தேர்தல் பணிகளைத் தொடங்கி விட்டார்கள். அதற்குப் பிறகு பிப்ரவரி 15ஆம் தேதியன்று ஜனதா கட்சியின் சார்பில் நீலம் சஞ்சீவ ரெட்டி சென்னைக்கு வந்து, என்னைச் சந்தித்து ஜனதா கட்சியுடன் தேர்தல் உடன்பாடு கொள்ள வேண்டுமென்று கேட்டபோது, மத்திய சென்னையில் ஜனதா கட்சி சார்பில் பா. ராமச்சந்திரனை நிறுத்துவதில் விருப்பம் தெரிவித்து, அதன் காரணமாக உடன்பாடு என்ன ஆகுமோ என்ற நிலை ஏற்பட்ட போது, பொதுச் செயலாளராக இருந்த நாவலர், மாறனைத் தனியாக அழைத்து, மத்திய சென்னையில் நிற்பதாக அறிவிக்கப்பட்டதிலிருந்து நீ பின் வாங்கி விடாதே என்று கூறிய பிறகும், முரசொலி மாறன் தன்னுடைய பிரச்சினையினால் உடன்பாடு வராமல் போய் விடக் கூடாது என்று எண்ணி மத்திய சென்னையில் தான் போட்டியிடுவதில்லை என்றும், கழகத்தினர் ஒத்துழைக்க வேண்டுமென்றும் அறிக்கை விடுத்தார். இந்தப் பழைய சம்பவம்தான் என் மனதிலே நிழலாடியது.

ஒவ்வொரு தொகுதியிலும் முடிவெடுக்க அப்படித்தான் யோசிக்க வேண்டியிருந்தது. மற்றொரு தொகுதி, என்னுடைய மாவட்டம் என்று சொல்லக்கூடிய அளவிலான தஞ்சை நாடாளுமன்றத் தொகுதி. அந்தத் தொகுதியிலே போட்டியிட விருப்பம் தெரிவித்த அனைவரும் முக்கியமானவர்கள் என்ற போதிலும், இறுதியாக கடந்த நாடாளுமன்றத்திலே கழகத்தின் சார்பில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசிலே அமைச்சர்களாக இருந்தவர்கள் - ஒருவர் கழக நாடாளு மன்றக் குழுவின் தலைவராகவே இருந்தவர், தம்பி டி.ஆர். பாலு. - மற்றொருவர் மத்திய அமைச்சரவையில் நிதித் துறையில் இணை அமைச்சராக இருந்தவர், தம்பி பழனிமாணிக்கம் - மூன்றாமவர் அ.தி.மு.க. அமைச்சரவை யில் முக்கிய அமைச்சராகப் பணியாற்றி, பின்னர் அந்தக் கட்சியின் நடவடிக்கைகள் பிடிக்காமல் நம்முடைய கழகத்திற்கு வந்து, கழகப் பணிகளை அந்த வட்டாரத்தில் சிறப்பாகப் பணியாற்றிவரும் அழகு திருநாவுக்கரசு அவர்கள். இந்த மூவரில் ஒருவரை நாங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்; எப்படி முடிவெடுப்பது? இதிலே ஒருவரைத் தேர்ந்தெடுத்தால், மற்ற இருவரையும் எப்படிச் சந்திப்பது? எவ்வாறு சமாதானம் கூறுவது? ஆனால் துரைமுருகன் ஆகட்டும், டி.ஆர்.பாலு ஆகட்டும், பழனிமாணிக்கம் ஆகட்டும், இவர்கள் எல்லாம் எனதருமைத் தம்பிகள் அல்லவா? நான் வளர்த்தவர்கள் அல்லவா? கழக வேட்பாளர் பட்டியலை நான் அறிவித்த பிறகு டி.ஆர். பாலு தஞ்சைக்குச் சென்றதும், நேராக பழனிமாணிக்கம் வீட்டிற்குச் சென்று பொன்னாடை அணிவித்திருக்கிறார்.
பழனிமாணிக்கம் அவரை வரவேற்று கட்டிப் பிடித்துக் கொண்டு சால்வை அணிவித்ததோடு, நேற்று மாலையிலேயே செயல்வீரர்கள் கூட்டத்தை மாவட்டக் கழகத்தின் சார்பில் கூட்டி, டி.ஆர். பாலுவை வெற்றி பெறச் செய்ய அனைவரும் உழைப்போம் என்று உறுதி எடுத்துக் கொண்டதைத் தொலைக்காட்சியிலே நான் பார்த்த போது, "என் தம்பிகள், என் தம்பிகள்தான்” என்று எனக்கு மகிழ்ச்சியும் மனதில் ஒரு துள்ளலும் ஏற்பட்டது. இதுபோலத்தான் பல்லாண்டுகளாக ராமனாத புரத்தில் கழகத்திற்காக மாவட்டச் செயலாளராக அரும்பணியாற்றி வரும் தம்பி சுப. தங்கவேலன், தன் மகன், சம்பத் போட்டி யிடுவதற்காக அனுமதி கோரினார். திருவண்ணாமலை யில் முன்னாள் அமைச்சர் தம்பி கு. பிச்சாண்டி, தன்னுடைய சகோதரர் கு. கருணாநிதிக்காக அனுமதி கோரினார்.
கோவையில் பொங்கலூர் பழனிசாமி தன் மகன் பைந்தமிழ் பாரிக்காக வேண்டுகோள் விடுத்தார். அதுபோலவே திண்டுக்கல் ஐ. பெரியசாமியும், விழுப்புரம் பொன்முடியும், திருவண்ணாமலை எ.வ. வேலுவும் தங்களின் மகன்கள் போட்டியிடுவதற்குத் தயாராக இருந்த போதிலும், என் உள்ளுணர்வைப் புரிந்து கொண்டு, வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யவே இல்லை. மேலும் பல தொகுதிகளில் தற்போது நாடாளுமன்ற உறுப்பினர் களாக நன்றாகப் பணியாற்றி வந்த ஒன்பது பேருக்கு மீண்டும் வாய்ப்பளிக்க முடியவில்லை. வேட்பாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள், புதிய முகங்களாக இருக்க வேண்டும், இளைஞர்களாக இருக்க வேண்டும் என்றெல்லாம் பலரும் விருப்பம் தெரிவித்தார்கள். மகளிருக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டுமென்றும் யோசித்தோம். இரவு முழுவதும் தூங்காமல் மிகுந்த கவனத்தோடு ஒவ்வொரு தொகுதியாக அலசி ஆராய்ந்து வேட்பாளர்களைத் தேர்ந்தெடுத்து அறிவித்துள்ளோம். அவர்களையெல்லாம் வெற்றி வேட்பாளர்ளாக ஆக்கிட வேண்டிய கடமையும், உரிமையும் உனக்குள்ளது.

ஒவ்வொரு தொகுதியிலும் தேர்தல் பணிகளை முறையாகக் கவனித்து, அனைவரையும் ஒருங்கிணைத் துச் செயல்பட வைத்திட துணையாகத் தலைமைக் கழகத்தின் சார்பில் பொறுப்பாளர்களும் அறிவிக்கப்பட் டுள்ளார்கள்.

ஒவ்வொரு தொகுதிக்கும் வழக்கறிஞர் குழுவினரும் அமைக்கப்படவுள்ளார்கள். அனைவருக் கும் அகமும் - முகமும் ஒன்றே என்ற ஒற்றுமை உணர்வோடு, தனிப்பட்ட காழ்ப்புணர்வுகளை கை கழுவி விட்டு, இந்த முறை வாய்ப்பு கிடைக்காவிட்டால், அடுத்த முறை நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு வாய்ப்புகள் எப்போது வேண்டுமானாலும் வரும், கழகத்தை வெற்றிப் பாதையில் இட்டுச் செல்வதுதான் இப்போது முக்கியமானது என்று ஆர்வத்தோடு பணிகளை ஆற்றிட வேண்டுமென்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

கழகத்தின் சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற் காக ஒரு குழு அமைக்கப்பட்டு, அந்தக் குழுவில் டி.ஆர். பாலு, டி.கே.எஸ். இளங்கோவன், கவிஞர் கனிமொழி, சற்குண பாண்டியன், ஆ. இராசா, பேராசிரியர் இராமசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோர் இடம் பெற்று தயாரித்த அறிக்கையினைப் படிக்கச் செய்து, நானும், பொதுச் செயலாளரும், பொருளாளரும், துணைப் பொதுச் செயலாளரும் அதிலே உரிய திருத்தங்களையெல்லாம் செய்து, அதுவும் வெளியிடப்பட்டுவிட்டது. அதனைப் படித்து விட்டு ஆக்கப்பூர்வமான அறிக்கையென்று பலரும் தங்கள் பாராட்டினைத் தெரிவித்து வருகிறார்கள்.

எதிர் அணியின் சார்பில் முதலமைச்சர் ஜெயலலிதா, அவர்களுக்குள்ள வசதி வாய்ப்பின் காரணமாக விமானத்திலும், கெலிகாப்டரிலும் பறந்து பறந்து சென்று, மேடைகளில் வேறு யாருக்கும் வாய்ப்பு அளிக்காமல், தனக்காக தயாரிக்கப்பட்ட உரைகளை எழுத்து மாறாமல் அப்படியே படித்து விட்டு வந்து விடுகிறார். அவருடைய கூட்டங்களுக்கு எப்படியெல்லாம் ஆட்களைத் திரட்டி வருகிறார்கள், கூட்டம் நடக்கின்ற ஊர்களில் என்னென்ன நடக்கின்றன; ஆங்காங்கே பொதுமக்கள் என்ன நினைக் கிறார்கள் என்பதைப் பற்றியெல்லாம் ஒரு சில ஏடுகள் மட்டும் துணிந்து வெளியிட்டு வருவதை அன்றாடம் படித்துத்தான் வருகிறோம். அம்மையார் பேசுகின்ற மேடை மட்டும் 85 இலட்சம் ரூபாய்ச் செலவில் அமைக்கப்படு கிறதாம்! அனைத்து ஊர்களிலும் கூட்டங்கள் நடத்து வதற்கு மேடை அமைக்க ஒருவருக்கே வாய்ப்பு தரப்படுவதாகவும், அவர்தான் 85 லட்சம் ரூபாயைப் பெற்றுக் கொண்டு, ஒரே மாதிரியாக மேடை அமைக் கிறாராம். கூட்டத்தில் கலந்து கொள்ள ஆண்களாக இருந்தால் ஒரு பேண்ட் அல்லது வேட்டி, 100 ரூபாய் ரொக்கம், மதிய உணவாக "பிரியாணி பாக்கெட்” ஒன்று தரப்படுகிறதாம். பெண்களாக இருந்தால் பேண்ட், வேட்டிக்குப் பதிலாக புடவை தருகிறார்களாம். முதலமைச்சர் வருகின்ற வழியிலே அமைக்கப்படும் வளைவுகளுக்கே பல இலட்ச ரூபாய் செலவாகிறதாம். தேர்தல் ஆணையம் என்று ஒன்று இருப்பதாகச் சொல்லப்படுகிறதல்லவா? சிறு வணிகர்கள் குறைந்த அளவிற்கு வியாபாரத்திற்காக தொகையைக் கொண்டு போவதைக்கூட சோதனை என்ற பெயரால் தடுத்து, அந்தத் தொகையை முடக்கம் செய்வதில் காட்டுகின்ற ஆர்வத்தை தேர்தல் ஆணையம் இதுபோன்ற செயல் களிலும் காட்டலாம் அல்லவா?

இதற்கு முன்பு அம்மையார் பேசுகின்ற மேடைகளில் வேட்பாளர் மட்டுமே கும்பிட்டுக் கொண்டு, அம்மையார் பேசுகின்ற ஒரு மணி நேரத்திற்கு மேலாக, நின்று கொண்டே இருப்பார். மற்ற அமைச்சர்களும், கழக முன்னணியினரும் மேடைக்குக் கீழேதான் அமர்ந்திருப் பார்கள். ஆனால் இந்த முறை அமைச்சர்களும், முன்னணியினரும் மேடையிலே அமருவதற்கு அனுமதிக் கப்பட்டிருக்கிறார்கள். அது ஒரு நல்ல முன்னேற்றம்தான். அதைப்போலவே ஒரு மணி நேரத்திற்கு மேலாக நின்று கொண்டிருக்க வேண்டிய வேட்பாளருக்கும் சற்று கருணை காட்டலாம்.
முதலமைச்சர் தன்னுடைய பேச்சின் முக்கால் பகுதியை மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சியைத் திட்டுவதிலும், மீதி கால் பகுதியை தி.மு. கழகத்தைத் தாக்குவதிலும் நேரத்தை எடுத்துக் கொள்கிறார். குறிப்பாக 11-3-2014 அன்று சிதம்பரத்தில் பேசிய - மன்னிக்கவும் - படித்த முதலமைச்சர் கழகப் பொருளாளர், தளபதி மு.க. ஸ்டாலின் மீது கடுமையாகக் காய்ந்து விழுந்திருக்கிறார். பேச்சின் துவக்கத்திலேயே "கிட்டத்தட்ட 17 ஆண்டுக் காலம் மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்த தி.மு.க. தமிழ்நாட்டிற்காக எதையாவது செய்ததா?” என்று கேட்டிருக்கிறார்.

அவருடைய தேர்தல் பிரச்சாரத்தின் துவக்க நாளிலிருந்து இதே கேள்வியைத் தொடர்ந்து ஒவ்வொரு கூட்டத்திலும் கேட்கிறார். இந்தக் கேள்விக் கான பதிலை, தி.மு.கழகம் மத்திய அரசில் பங்கேற்றிருந்த காலகட்டங்களில் தமிழ்நாட்டிற்காக என்னென்ன செய்தது என்பதை ஒரு பக்க விளம்பரமாகவே "முரசொலி”யில் வெளியிட்டுவிட்டோம். மேலும் கழகத் தேர்தல் அறிக்கை யின் தொடக்கமே, தி.மு. கழகம் மத்திய ஆட்சியில் பங்கேற்றிருந்த காலத்தில், தமிழ்நாட்டிற்காக என்னென்ன திட்டங்களைக் கேட்டுப் பெற்றது என்பதற்கான விரிவான பட்டியல்தான்!

முதலமைச்சராக இருப்பவர், ஒரு கட்சிக் குத் தலைவராக இருப்பவர், தான் கேட்கின்ற கேள்வி களுக்கு, தான் சாற்றுகின்ற குற்றச்சாட்டுகளுக்கு எதிர் தரப்பிலே இருந்து என்ன பதில் கிடைக்கிறது என்பதைக் கவனிக்க வேண்டாமா? தனக்கு என்ன பதில் கிடைக் கிறது என்பதைப் பற்றியே கவலைப்படாமல், தான் முதல் நாளில் படித்ததையே, அப்படியே தொடர்ந்து "சொன்னதையே சொல்லுமாம் கிளிப்பிள்ளை” என்பதைப் போல ஒவ்வொரு நாளும் படித்துக் கொண்டிருந்தால், அதைக் கேட்பவர்கள் எள்ளி நகையாட மாட்டார்களா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் இரட்டை இலை போன்ற தோற்றம் அளிப்பவை இருக்கிறதோ, அவற்றையெல்லாம்

மறைக்க வேண்டும் என்று நான் பொருளாளர் தம்பி மு.க.ஸ்டாலின் மூலம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருப்பதாகவும், அப்படியென்றால் காங்கிரஸ் கட்சியினுடைய சின்னம் கை, அனைவரின் கைகளையும் வெட்டி விட வேண்டுமென்று ஸ்டாலின் மனு கொடுப்பாரா? என்றெல்லாம் சிதம்பரத்தில் அம்மையார் ஆழமாகச் சிந்தித்துப் பேசுவதாக எண்ணி, முழக்கமிட்டு அது அனைத்து நாளேடுகளிலும் பெரிதாக வெளியிடப்பட் டுள்ளது. மேலும் அந்தப் பேச்சில், "காமாலை கண்ணுக்கு கண்டதெல்லாம் மஞ்சள்” என்பது பழமொழி; அதைப் போல அ.தி.மு.க.வினரைக் கண்டு அஞ்சும் தி.மு.க. வினருக்கு எதைப் பார்த்தாலும் "இரட்டை இலை” போலத் தெரிந்து ஓயாமல் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள் என்றெல்லாம் பேசியிருக்கிறார்.

கிராமங்களில் "ஒப்புக்குச் சப்பாணி” என்று ஒரு பழமொழி சொல்வார்கள். அதைப்போல ஜெயலலிதா பேசியதற்கு வக்காலத்து வாங்கி இன்றைய (13-3-2014) தினமணி நாளிதழ் எழுதியுள்ள தலையங்கத்தில், "அரசு வாகனம், இலவசப் பொருள்கள், நியாய விலைப் பொருள்களின் மீதான முதல்வர் படம் அழிக்கப்பட்டு விட்டதாலேயே ஒரு மாநில முதல்வரின் முகம் அனைத்து வாக்காளர்களின் மனதிலிருந்து நீக்கப்பட்டு விடுமா?” என்று கேட்டிருக்கிறது. அந்தப் பொருள் களின் மீதெல்லாம் முதல்வரின் படம் இருப்பதால் மட்டும், மக்கள் அவருக்கு வாக்களித்து விடப் போகிறார்களா? பிறகு எதற்காக அந்தப் படம் இருக்க வேண்டுமென்று அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான "தினமணி” எண்ணுகிறது?

ஒரு முதலமைச்சர் பேசுவதற்காகப் பேச்சினைத் தயாரித்துக் கொடுப்பவர்கள், உண்மையான விவரத்தை அறிந்து பேச்சினைத் தயாரித்துக் கொடுக்க மாட்டார்களா? தவறாகப் பேச்சினைத் தயாரித்துக் கொடுத்து விட்டால், பின்னர் எதிர்க்கட்சி உண்மையை விளக்கும்போது எங்கே கொண்டு போய் முகத்தை வைத்துக் கொள்ள முடியும்? தம்பி மு.க. ஸ்டாலின் தமிழ்நாட்டில் எங்கெல்லாம் இரட்டை இலை போன்ற தோற்றம் அளிப்பவை இருக்கிறதோ, அவற்றையெல்லாம் மறைக்க வேண்டும் என்ற ரீதியிலா வழக்கு தொடுத்திருக்கிறார்? "தேர்தல் நடத்தை விதிகளை மீறி, அரசின் தண்ணீர் பாட்டில்கள், அரசுப் பேருந்துகள் மற்றும் பொதுச் சொத்துக்களில் இடம் பெற்றுள்ள அ.தி.மு.க.வின் தேர்தல் சின்னங்களையும், முதலமைச் சர் ஜெயலலிதாவின் படங்களையும் அகற்றக் கோரித்தான் சென்னை உயர்நீதிமன்றத்தில் மு.க. ஸ்டாலின் வழக்கு தொடுத்திருக்கிறார். இவர்கள் ஊர் பூராவும் சொந்தச் செலவில் இரட்டை இலை சின்னத்தை வைத்துக் கொள்வதைப் பற்றி யாரும் கவலைப்படவில்லை; அரசாங்கச் செலவில், மக்கள் தரும் வரிப் பணத்தில், ஆளுங்கட்சியின் சின்னத்தை விளம்பரம் செய்வது என்ன நியாயம் என்பதுதான் கேள்வியே தவிர, இவர்களின் "இரட்டை இலை” சின்னத்தைப் பற்றி யாரும் அஞ்சுகின்ற நிலையிலே இல்லை. உண்மையில் சொல்லப்போனால், இரட்டை இலைச் சின்னத்தைப் பார்த்து தி.மு.க.வில் யாரும் புலம்பவில்லை. பெங்களூரில் நடைபெறும் சொத்து வழக்கின் முடிவு என்ன ஆகுமோ என்று நாள்தோறும் எண்ணித்தான் ஜெயலலிதா புலம்பிக் கொண்டிருக் கிறார் என்பதை தமிழ்நாடே நன்கறியும். அந்தத் தீர்ப்பு விரைவில் வெளிவந்து விடக் கூடாது என்பதற்காகத் தான், தங்களுக்கு எதிராக வாதாட வேண்டிய அரசாங்க வழக்கறிஞர் பவானிசிங் அவர்களை அந்தப் பதவியிலே யிருந்து நீக்கக்கூடாது என்று உச்சநீதிமன்றம் வரை ஜெயலலிதா வழக்கு தொடுத்ததும், தற்போது சிறப்பு நீதிமன்றத்தில் இறுதியாக வாதாட வேண்டிய அந்த அரசு வழக்கறிஞர் பவானி சிங் "மருத்துவக் காரணங்களுக் காக” என்று சொல்லி வாய்தா கேட்கின்ற நிலையையும் வேடிக்கை பார்த்து, தமிழ்நாட்டு மக்கள் எல்லாம் சிரிக்கிறார்கள். அகில இந்தியக் கட்சிகளான, இடதுசாரி கம்யூனிஸ்ட் கட்சிகள், எந்த அளவிற்கு உறுதியோடு, அ.தி.மு.க.வோடு தோழமை கொண்டு போட்டியிடு வதற்காகக் காத்திருந்தார்கள்? கடைசி நேரத்தில் அந்தக் கட்சிகளின் காலை வாரி விட்டு ஏமாற்றி அவர்களை நிராதரவாக கை விட்ட அம்மையார் கடந்த காலங்களில் தங்களோடு கூட்டணி அமைத்தவர்களை எல்லாம் முதலில் நம்ப வைத்து முடிவில் ஏமாற்றி நடுத்தெருவிலே நிற்க விட்டார் என்ற வஞ்சக வரலாற்றினை தமிழ்நாட்டு மக்கள் அவ்வளவு சீக்கிரம் மறந்திருப்பார்களா என்ன? அப்படியே மறந்திருந்தாலும் அதையெல்லாம் நினைவூட்ட வேண்டிய பொறுப்பும், கடமையும் நமக்குள்ளது. பொருளாளர் தம்பி ஸ்டாலின் இன்று முதல் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்குகிறார். தேர்தல் முடிகின்ற வரை ஒரு நாள் கூட ஓய்வு இல்லாமல் தேர்தல் பிரச்சாரத்தை அவர் அறிவித்திருக்கிறார். அவரைத் தொடர்ந்து கழகத்தின் சொற்பொழி வாளர்கள், தோழமைக் கட்சிகளின் தலைவர்கள், நம்முடைய கட்சியிலே உள்ள கலைத்துறையினர் சுற்றுப் பயணத் திட்டங்களை வகுத்து அறிவிக்க இருக் கிறார்கள். தலைமையிலே உள்ள நானோ, பொதுச் செய லாளரோ இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை, அவர்கள் அளவிற்கு ஒவ்வொரு நாளும் தொகுதி தொகுதியாகச் சென்று பிரச்சாரம் செய்ய இயலாவிட்டாலும், உடல்நிலை இடம் கொடுக்கின்ற வரையில் பிரச்சாரக் கூட்டங்களில் கலந்து கொள்வோம்.

இதுபோன்ற "உடன்பிறப்பு” மடல்கள் மூலமாகவும் கருத்துகளைத் தெரிவிப்போம். உடன்பிறப்பே, இந்தத் தேர்தல் தமிழ்நாட்டு தலைவிதியை மாற்றப் போகிற தேர்தல் இல்லையே, நாடாளுமன்றத் தேர்தல்தானே, என்றெண்ணி அலட்சியமாக இருந்து விடாமல், இந்தத் தேர்தலில் நாம் பெறுகின்ற வெற்றிதான் அடுத்து 2016ஆம் ஆண்டு வரவிருக்கின்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முன்னோடி என்பதை மனதிலே கொண்டு, நமது அணியினர் அனைத்து இடங்களிலும் மிகப் பெரிய வெற்றியினைப் பெறுவதற்கான அரிய முயற்சியிலே இன்று முதலே அயராது ஈடுபட வேண்டுமென்று அன்போடும் உரிமையோடும் உன் அண்ணன் என்ற பாச உணர்வோடும் கேட்டுக் கொள்கிறேன். உதவாதினி ஒரு தாமதம்; உடனே எழுக தம்பி!

ad

ad