புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 மார்., 2014

பாஜக கூட்டணியில் தொடரும் சிக்கல்: ராஜ்நாத் சிங் நாளை சென்னை வருகை

பாஜக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு குறித்த சிக்கல் நீடித்து வரும் நிலையில் இது தொடர்பாக உறுதியான முடிவெடுக்க பாஜக தேசியத் தலைவர் ராஜ்நாத் சிங்
வியாழக்கிழமை (மார்ச் 20) சென்னை வருகிறார்.
தமிழகத்தில் பாஜக கூட்டணியில் தேமுதிக, பாமக, மதிமுக, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி, புதிய நீதிக் கட்சி ஆகியவை இணைந்தன. இந்தக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பாக பாஜக தலைவர் ஆகியோர் மார்ச் 7-ஆம் தேதி முதல் பேச்சு நடத்தி வருகின்றனர்.
பேச்சுவார்த்தையின் முடிவில் தேமுதிகவுக்கு 14, பாஜக, பாமகவுக்கு தலா 8, மதிமுகவுக்கு 7, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி, புதுச்சேரி என்.ஆர். காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு தலா 1 தொகுதிகள் என உடன்பாடு எட்டப்பட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால், கூட்டணியில் உள்ள தேமுதிக தலைவர் மார்ச் 14-ஆம் தேதி தேர்தல் பிரசாரத்தை தொடங்கியதுடன் 5 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் அறிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, மார்ச் 16-ஆம் தேதி தருமபுரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டதாகக் கூறப்படும் கள்ளக்குறிச்சி தொகுதிக்கு வேட்பாளரை அறிவித்தார்.
மேலும் சேலம் தொகுதியில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளரையும் ராமதாஸ் அறிமுகப்படுத்தினார். இதனால், பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறி தனித்துப் போட்டியிட பாமக முடிவு செய்துவிட்டதாக செய்திகள் வெளியாகின.
ஆனால், கூட்டணியிலிருந்து எந்தக் கட்சியும் வெளியேறுவதை விரும்பாத பாஜக, பாமக தலைவர்களுடன் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்தது. ஆனாலும் பாமகவுடன் உடன்பாட்டுக்கு வர முடியவில்லை. அதுபோல பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டதாகக் கூறப்படும் தென்காசி (தனி), ஸ்ரீபெரும்புதூர் தொகுதிகள் மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக செய்தி பரவியது.
இதனால் பாஜகவுக்கான தொகுதிகளை இறுதி செய்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பாமக வந்தாலும் வராவிட்டாலும் புதன்கிழமைக்குள் (மார்ச் 19) தொகுதிப் பங்கீட்டை முடிக்க பாஜக திட்டமிட்டுள்ளது. வியாழக்கிழமை காலை சென்னைக்கு வரும் ராஜ்நாத் சிங் தொகுதிப் பங்கீட்டை அறிவிக்க இருப்பதாக பாஜக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

ad

ad