புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 மார்., 2014

நாட்டு மக்கள் எம்மோடு இருக்கும் வரை எந்த சர்வதேச சக்திகளுக்கும் இடமில்லை

நாட்டின் நலனில் அக்கறை கொண்ட மக்கள் எம்மோடு இருக்கும் வரை எந்த சர்வதேச சக்திகளும் நாட்டுக்குள் பிரவேசித்து நாட்டைச் சீர்குலைக்க இடமளிக்கப் போவதில்லை என மனித உரிமை விவகாரம் தொடர்பான ஜனாதிபதியின் பிரதிநிதி அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.
ஜெனீவா பிரேரணையை எப்போதுமே நாம் ஏற்கவில்லை எனவும் உள்நாட்டில் விசாரணைகளுக்கான எந்த வசதியையும்
செய்து கொடுக்கப் போவதில்லை எனவும் குறிப்பிட்ட அமைச்சர், இது போன்ற நூறு பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டாலும் சர்வதேச சக்திகள் உள்நாட்டு விவகாரங்க ளில் தலையிட ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை எனவும் தெரிவித்தார். ஜெனீவா முடிவுகளையடுத்து அது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது :-
2012 மற்றும் 2013 தேர்தல் முடிவுகளை பார்க்கும் போது பிரேரணையை முன்வைத்த தரப்பினருக்கு பெரும்பான்மை வாக்கு கிட்டவில்லை. இம்முறை முடிவுகளை நோக்குகையில் அவ்வாறே பிரேரணையைக் கொண்டு வந்தவர்களுக்கு பெரும்பான்மை ஆதரவு கிடைக்கவில்லை.
47 வாக்குகளில் 23 வாக்குகளே கிடைத்துள்ளன. இதில் பெரும்பான்மை பலத்தைக் காட்டுவதற்கு 24 வாக்குகள் அளிக்கப்பட்டிருக்க வேண்டும். அதேபோன்ற பெரும்பாலானவர்களின் ஆதரவு இந்த பிரேரணைக்கு வழங்கப்படவில்லை என்பதைக் குறிப்பிட வேண்டும்.
ஒரு பிரிவின் பிரேரணைக்கு எதிராகவும் மற்றும் ஒரு தரப்பினர் வாக்களிப்பிலிருந்து விலகிச் செயற்பட்டுள்ளனர். இந்த வகையில் இந்த பிரேரணையை நடைமுறைப்படுத்துவதற்கான எந்தவித தார்மிக உரிமையும் கிடையாது.
அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகள் இது தொடர்பில் பாரிய அரசியல் அழுத்தங்களை இப்பிரேரணையை நிறைவேற்றிக் கொள்வதற்காகப் பிரயோகித்தன. வாக்களிப்பு தொடர்பான சந்தர்ப்பங்களில் இது எமக்குத் தெளிவாகப் புலப்பட்டது. அவ்வாறிருந்தும் அவர்களால் பெரும்பான்மை ஆதரவை காட்ட முடியாமல் போனது.
இந்த பிரேரணை கொண்டு வரப்படும் முன்பே நாம் ஐ. நா. மனித உரிமைப் பேரவைக்கு எமது தெளிவான ஸ்திரமான நிலைப்பாட்டை எடுத்துக் கூறியிருந்தோம். இந்த பிரேரணையை எந்த வகையிலும் நாம் ஏற்கப்போவதில்லை என்பதையும் அதில் குறிப்பிட்டிருந்தோம். அந்த நிலைப்பாட்டிலேயே நாம் தொடர்ந்தும் இருந்தோம். மேற்படி பிரேரணையில் எவ்வாறு திருத்தம் கொண்டு வருவது அதனை எவ்வாறு பலமிழக்கச் செய்வது போன்ற எந்தவொரு பேச்சுவார்த்தைக்கும் நாம் சமுகமளிக்கவுமில்லை. ஏனெனில் இதனை நாங்கள் ஒரு அரசியல் செயல்பாடாகவே கருதினோம்.
இந்த பிரேரணையைக் கொண்டு வந்தவர்களைப் பார்க்கும் போது அவர்கள் ஐ. நா. மனித உரிமை ஆணைக் குழு அலுவலகத்தோடும் நவநீதனம் பிள்ளையோடும் நெருங்கிய தொடர்பினைக் கொண்டவர்களே.
இந்த வகையில் இதுபோன்ற நூற்றுக் கணக்கில் பிரேரணைகள் கொண்டுவரப்பட்டு அவை நிறைவேற்றப்பட்டாலும் சர்வதேச சக்திகள் இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிட நாம் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை.
நாட்டு மக்களுக்குச் செய்ய வேண்டிய அனைத்தையும் அரசாங்கம் தடையின்றி முன்னெடுக்கும். இப்போதும் அதை மேற்கொள்வது போல் எதிர்காலத்திலும் அதனைச் செய்வோம்.
இது போன்றதொரு விடயம் இலங்கையில் நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியமில்லை என்பதை இம்முறை இந்தியா தெளிவாக உணர்ந்து கொண்டதாலேயே பிரேரணைக்கு நடுநிலை வகித்தது. இந்த பிரேரணை மூலம் உள்நாட்டு விவகாரங்களில் சர்வதேச தலையீடு ஏற்படும் என்பதை இந்தியத் தூதுவரும் தெரிவித்திருந்தார். இந்தியாவின் இந்த வெளிப்பாடு ஏனைய நாடுகளுக்கும் சிறந்த செய்தியாக அமைந்தது.
நேற்று முன்தினம் முடிவையடுத்து ஐ. நா. மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் இதனை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடும். அச்சந்தர்ப்பத்தில் அதற்கான வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு எம்மிடம் கேட்கும் அவர்கள் இங்கு வந்து தேவையான தகவல்களைப் பெறுதல் மற்றும் விசாரணைகளுக்கு எமது ஒத்துழைப்பையும் கோரும் நாம் அந்த வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கப் போவதில்லை. இதனை நாம் ஆரம்பம் முதலே தெளிவாகக் கூறி வந்துள்ளோம்.
எவ்வாறாயினும் ஐ. நா. மனித உரிமை ஆணைக் குழு அலுவலகமோ நவநீதம்பிள்ளையோ பாரபட்சமற்ற விதத்தில் செயற்படப் போவதில்லை என்பதை நாம் அறிவோம். மேற்கத்தைய நாடுகளினாலேயே இந்த பிரேரணை தயாரிக்கப்பட்டுள்ளது என்பதுடன் இதுவும் தருஷ்மன் அறிக்கை போன்றதொன்றே என்பதையும் நாம் குறிப்பிட விரும்புகின்றோம்.
ஏனெனில் மேற்படி ஆணைக் குழு அலுவலகத்தில் பணிபுரிவோரில் 100 ற்கு 85 வீதமானோர் எமக்கெதிராகச் செயற்படுகின்ற மேற்கத்தைய நாடுகளைச் சேர்ந்தவர்களே இந்த அலுவலகத்தின் நடவடிக்கைகளுக்கு ஐ. நா. வின் நிதி ஒதுக்கீடு 50 வீதமே இடம்பெறுகிறது. மீதம் 50 வீதத்தை இத்தகைய நாடுகளிடமிருந்தே அலுவலகம் பெற்றுக் கொள்கிறது. எவ்வாறான நிபந்தனைகளுடன் இந்த நிதி பெறப்படுகிறது என்பதும் வெளிப்படையானதல்ல.
ற்கனவே நாம் நவநீதம்பிள்ளைக்கு இலங்கைக்கு வர அழைப்புவிடுத்தோம். அவர் வந்து செயற்பட்ட விதம் அதன் பிரதிபலன்கள் யாவரும் அறிந்ததே. இதனால் மீண்டும் ஒருமுறை அரசியல் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு பாரபட்சமான ரீதியில் அறிக்கை வெளியிட இடமளிக்கப் போவதில்லை. அதற்கான ரி:திகளை ஏற்படுத்திக் கொடுக்கவும் போவதில்லை.

ad

ad