புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 மார்., 2014

ஜெயலலிதா பிரதமராக நீங்கள் ஆதரவு தெரிவிப்பீர்களா?பதிலளிக்கிறார்  தா.பாண்டியன் 
மோடி பிரதமர் பதவிக்கு ‘அலை’வது தெரிகிறது, மோடி அலைவீசுவதாக தெரியவில்லை என்று தா.பாண்டியன் கூறினார். மேலும் ஜெயலலிதா பிரதமராக இந்திய கம்யூனிஸ்டு ஆதரவு
அளிக்குமா? என்ற கேள்விக்கும் தா.பாண்டியன் பதில் அளித்தார்.
ஜெயலலிதாவுக்கு ஆதரவா?
சென்னை சேப்பாக்கம் பத்திரிகையாளர் மன்றத்தில், இந்திய கம்யூனிஸ்டு கட்சி பாராளுமன்ற தேர்தல்(தமிழக) அறிக்கை வெளியீடு நிகழ்ச்சிக்கு பிறகு, கட்சி மாநில செயலாளர் தா.பாண்டியன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு தா.பாண்டியன் அளித்த பதில்களும் வருமாறு:–
கேள்வி:– தேர்தல் முடிவுக்கு பிறகு 3–வது அணிக்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா வர வாய்ப்புள்ளதா?
பதில்:– அதை நீங்கள், அவரிடம் தான் கேட்க வேண்டும்.
கேள்வி:– ஜெயலலிதா வந்தால் ஏற்றுக்கொள்வீர்களா?
பதில்:– யூகத்தின் அடிப்படையில் பதில் சொல்ல நாங்கள் ஜோதிடர்கள் இல்லை.
கேள்வி:– ஜெயலலிதா பிரதமராக நீங்கள் ஆதரவு தெரிவிப்பீர்களா?
பதில்:– 40 தொகுதிகளை மட்டும் வைத்துக்கொண்டு ஒருவர் பிரதமர் ஆக முடியாது. பிரதமராக 270 தொகுதிகள் வேண்டும். அதன்படி, அவர்களுக்கு(அ.தி.மு.க.) 230 தொகுதிகளில் யார்? ஆதரவு தருவார்கள் என்பதை பார்த்துவிட்டு பிறகு பேசலாம்.
தி.மு.க.–காங்கிரஸ் விவகாரம்
கேள்வி:– காங்கிரஸ் மன்னிப்பு கேட்டால் தி.மு.க. ஆதரவு அளிக்கும் என்று கருணாநிதி கூறியிருக்கிறாரே?
பதில்:– காங்கிரஸ், தி.மு.க.வுக்கு இடையே இருக்கிற விவகாரம் அது. அவர்களை நம்பி இவர்கள் இருக்கிறார்கள், இவர்களை நம்பி அவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் இருவரையும் நம்பி மக்கள் கெட்டு போய் இருக்கிறார்கள்.
கேள்வி:– இலங்கைக்கு எதிராக ஐ.நா.கொண்டு வந்த மனித உரிமை மீறல் விசாரணை மீதான தீர்மானத்தில் இந்தியா கலந்துகொள்ளவில்லையே?
பதில்:– தமிழின கொள்கைக்கு எதிராக மத்திய அரசு எடுத்த முடிவு அது. விசாரணை நடத்தினால் கூட்டு குற்றவாளியான தானும்(மத்திய அரசு) சிக்கி கொள்வோமோ! என்பதால் கலந்துகொள்ளவில்லை என்று நினைக்கிறேன்.
மோடி அலை
கேள்வி:– நாடு முழுவதும் நரேந்திரமோடி அலை வீசுவதாக கூறப்படுகிறதே?
பதில்:– மோடி பிரதமர் பதவிக்கு ‘அலை’வது தெரிகிறது. மோடி ‘அலை’ வீசுவதாக தெரியவில்லை.
அப்படி ‘அலை’ அடித்தாலும், அதை தடுக்கும் பாறைகளும் உண்டு என்பது தேர்தல் முடிவுக்கு பிறகு தெரியும்.
லட்சியங்கள் வெற்றி பெறுவதில்லை
கேள்வி:–இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு இருவரும் கூட்டணி அமைத்து தனித்தனியே தேர்தலை சந்திப்பதைவிட இரண்டு கம்யூனிஸ்டுகளும் ஒன்றாக இணைந்துவிட வேண்டியது தானே?
பதில்:–நல்ல கேள்வி. உயர்ந்த லட்சியங்கள் உடனடியாக வெற்றி பெறுவதில்லை. இதற்கு நீங்களும்(பத்திரிகையாளர்கள்) உறுதுணையாக இருங்கள். நாங்களும் முயற்சிகளை எடுக்கிறோம்.
இவ்வாறு தா.பாண்டியன் பதில் அளித்தார்.

ad

ad