உலக இளைஞர் மாநாடு இன்று ஆரம்பம்
ஹம்பாந்தோட்டையில் ஜனாதிபதியினால் அங்குரார்ப்பணம்
ஐ.நா. விசேட அதிதிகள் உட்பட 168 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்பு
கே. அசோக்குமார்இலங்கையில் முதல் தடவையாக நடத்தப்படும் உலக இளைஞர் மாநாடு ஹம்பாந்தோட்டை மாகம்புர மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று கோலாகலமாக ஆரம்பமாகிறது.ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் உத்தியோகபூர்வமாக இன்று ஆரம்பித்து வைக்கப்படும் இம் மாநாட்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் தலைவர் கலாநிதி ஜோன் டபிள்யூ ஆஷி மற்றும் இளைஞர் விவகாரங்களுக்கான ஐ.நா. செயலாளர் பான் கீ மூனின் விசேட பிரதிநிதி அஹமட் அல்ஹெந்தாவி ஆகியோர் விசேட பிரதிநிதிகளாக கலந்து சிறப்பிக்கவுள்ளனர். நேற்று மாலைவரை 15 நாடுகளைச் சேர்ந்த இளைஞர் விவகார அமைச்சர்கள் இலங்கை வந்து சேர்ந்துள்ளதாக உலக இளைஞர் மாநாட்டின் பேச்சாளர் தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தான், சீசல்ஸ், பங்களாதேஷ், பல்கேரியா, சீனா, நைஜீரியா, டொங்கா, ரினிடேட், சாம்பியா, பிஜி, நேபாளம், கியூபா, கெபோன்., மியன்மார், அல்ஜீரியா போன்ற நாடுகளிலிருந்து பிரதிநிதிகள் நேற்று இலங்கை வந்தனர்.இதேவேளை மாநாட்டின் நிகழ்வுகளை படம் பிடிக்கவும் செய்தி சேகரிப்பதற்காகவும் இந்திய ஊடகவியலாளர்கள் 5 பேர் இலங்கை வந்துள்ளனர்.168 நாடுகளைச் சேர்ந்த இளைஞர் பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்துகொள்கின்றனர்.இன்று காலை 7.30 க்கு கொழும்பிலிருந்து உலக இளைஞர் மாநாட்டு பிரதிநிதிகள் ஹம்பாந்தோட்டை புறப்பட்டுச் செல்வதுடன் காலை 11.30 க்கு ஹம்பாந்தோட்டை மாகம்புர மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் உலக இளைஞர் மாநாட்டின் ஆரம்ப வைபவம் ஆரம்பமாகிறது.பிரதமர் டி. எம். ஜயரட்ண, பிரதம நீதியரசர் உட்பட சிரேஷ்ட அமைச்சர்கள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொள்ள வுள்ளனர்.இளைஞர் நகரமாக பிரகடனப்ப டுத்தப்பட்டுள்ள ஹம்பாந்தோட்டை நகரம் மற்றும் மாநாட்டு மண்டப பகுதி உலக இளைஞர் மாநாட்டு சின்னங்களுடனும் கொடிகளுடன் கோலாகலமாக காட்சியளிப்பதாக ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.இளைஞர் விவகார திறன் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும ஹம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ எம்.பி. ஆகியோரின் இணைத் தலைமையில் இன்று ஆரம்பமாகும். ஜனாதிபதி அவர்கள் மாநாட்டை ஆரம்பித்து வைத்த பின்னர் உலக இளைஞர் மாநாட்டின் ஆரம்ப வைபவத்தின் போது ஐ. நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனின் விசேட பிரதிநிதியாக இலங்கை வந்திருக்கும் அஹமட் அல் ஹெந்தாவி உரையாற்றுவார்.இன்று மதியம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மாநாட்டின் பிரதிநிதிகளுக்கு பகல் போசன விருந்துபசாரம் வழங்குவார். இதனைத் தொடர்ந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுடன் பிரதிநிதிகள் குழு புகைப்படம் எடுத்துக் கொள்வார்கள்.இதனையடுத்து பிரதிநிதிகள் அனைவரும் ஹம்பாந்தோட்டையின் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை பார்வையிடுவார்கள். நாளை இரண்டாவது அமர்வுகள் கொழும்பில் நடைபெறும்.நேற்று மாலை பிரதிநிதிகள் தங்கியிருந்த ஹோட்டல்களில் அவர்களுக்கான மாநாடு தொடர்பான விசேட செயலமர்வுகள் நடைபெற்றது.இந்த மாநாட்டில் வெளியிடப்படவுள்ள கொழும்பு பிரகடனத்தின் விடயங்கள் ஐக்கிய நாடுகள் சபையின் ஊடாக முன்னெடுக்கப்பட்டு உள்ளூர் மற்றும் சர்வதேச ரீதியில் கொண்டு செல்லப்படவுள்ளது.விசேடமாக இலங்கையில் ஒவ்வொரு கிராமங்களிலும், இத்திட்டம் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது.உலகின் முன்னணி இளைஞர் அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்வதன் ஊடாக இவர்களுடைய யோசனைகள் அரசு மற்றும் தனியார் துறையின் ஆலோசனைகளும் பெறப்பட்டு கொழும்பு பிரகடனம் தயாரிக்கப்பட உள்ளது.இந்த பிரகடனத்தில் எமது எதிர்கால இளைஞர்களுக்குத் தேவையான யோசனைகள் உள்ளடக்கப்படவுள்ளன.