11 ஜூலை, 2014

மூன்றாம் இடத்துக்கான போட்டியில் நெய்மர் விளையாடுகிறார் 
உலகக் கோப்பை கால்பந்து தொடரை நடத்தும் பிரேசில் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வந்த நெய்மர், காலிறுதி ஆட்டத்தில் துரதிர்ஷ்டவசமாக காயமடைந்தார். 
 
ஆட்டம் முடிய சில நிமிடங்கள் இருந்தபோது கொலம்பிய வீரர் ஜியன் ஜூனைசா இடித்ததால் கீழே விழுந்த நெய்மரின் முதுகுப்பகுதியில் அடிபட்டது. முதுகெலும்பில் லேசான முறிவு ஏற்பட்டதால் தொடர்ந்து ஆட முடியாத நிலை ஏற்பட்டது. 
 
நெய்மர் இல்லாத குறை அரையிறுதியில் தெரிந்தது. கடும் நெருக்கடியுடன் களமிறங்கிய பிரேசில் வீரர்கள், ஜெர்மனியிடம் 1-7 என்ற கோல்கணக்கில் மோசமான தோல்வியைத் தழுவினர்.
 
இந்நிலையில், சனிக்கிழமை நடைபெற உள்ள 3-வது இடத்துக்கான போட்டியில் நெதர்லாந்து அணியுடன் பிரேசில் விளையாட உள்ளது. 
 
இப்போட்டியில் நெய்மர் பங்கேற்பார் என்று அணியின் செய்தித் தொடர்பாளர் ரோட்ரிகோ பாய்வா அறிவித்துள்ளார். இது ரசிகர்களுக்கு ஆறுதல் அளிக்கும் செய்தியாக உள்ளது.