புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஜூலை, 2014



தவியில் இருக்கும் காலம் வரை மத்திய அரசுக்கு ரகசியமாக அறிக்கை அனுப்புவதுதான் கவர்னரின் பணி. பதவி நீக்கப்பட்டால் ஓப்பனாகவே பேட்டி கொடுத்து அதே மத்திய அரசை விமர்சிக்க முடியும் எனக் காட்டி யிருக்கிறார் புதுச்சேரியின் துணை ஆளுநர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட வீரேந்திர கட்டாரியா.

புதனன்று (ஜூலை 16) பத்திரிகையாளர்களை சந்தித்த கட்டாரியா, ""சங்கரராமன் கொலை வழக்கு மேல்முறையீட்டுக்கு அனுமதித்து நான் ஒப்புதல் கொடுத்ததுதான் என்னை பதவி நீக்கம் செய்வதற்கான காரணம். தமிழக அரசு தலைமைச்செயலாளர், சட்டத்துறைச் செயலாளர் இருவரும் சி.பி.சி.ஐ.டி. கூடுதல் டி.ஜி.பி.யிடம் சங்கரராமன் கொலைவழக்கில் மேல்முறையீடு போக நடவடிக்கை எடுங்கள் என்று உத்தரவிட, அதனடிப்படையில் தமிழக சி.பி.சி.ஐ.டி. கூடுதல் டி.ஜி.பி., புதுச்சேரி தலைமைச் செயலாளரையும், சட்டத்துறைச் செயலாளரையும் கேட்டுக்கொண்டார். அதையடுத்து புதுச்சேரி முதல்வர், தலைமைச் செயலாளர், சட்டத்துறைச் செயலாளர் மூவரும் மேல்முறையீடு சம்பந்தமான ஃபைலை என்னிடம் அனுப்பினார்கள்; 302 செக்ஷன் கேஸ் என்று பொதுவாகச் சொன்னார்கள். நானும் வழக்கப்படி கையெழுத்துப் போட்டுவிட்டேன். இதில் என்னை ஒரு கருவியாக பயன்படுத்திவிட்டார்கள். 

நான் இங்கு பதவியேற்றதிலிருந்து புதுவையில் நிலவும் சட்டம்-ஒழுங்கு சிக்கல்களை கவனித்து, ரவுடிகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டது. இங்கு நிலவும் ஊழல் சாம்ராஜ்ஜியத்தில் என்னையும் சேர்க்க தலைமைச் செயலாளர் முயற்சித்தார். நான் கண்டித்து அனுப்பிவிட்டேன். இதனால் என் மீது கடுப்பாக இருந்தவர்கள், சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை மேல்முறையீட்டுக்கு ஒப்புதல் அளித்த பின் நடவடிக்கை எடுக்கச் செய்திருக்கிறார்கள். எனது பதவி நீக்கம் என் நேர்மைக்கு கிடைத்த பரிசு. நான் ஒரு வழக்கறிஞர் ஆர்.டி.ஐ.மூலமாக எனது பதவி நீக்கத்துக்கான காரணத்தை தெரிந்தே தீர்வேன்'' என்றார் பத்திரிகை யாளர்களிடம் ஆவேசமாக.

டெல்லியில் ஜூலை 10-ந் தேதி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சுப்ரமணிய சாமி சந்திக்க, மறுநாள் (ஜூலை 11) கட்டாரியாவின் பதவிநீக்க அறிவிப்பு வெளியாக, சுப்ரமணியசாமியால்தான் இது நடந்தது என்ற ஊடகச் செய்திகள் டெல்லியில் தொடங்கி புதுச்சேரி, தமிழகம் வரை நீண்டது. சாமிக்கு வேண்டிய பலரும் அவரைத் தொடர்புகொண்டு விசாரிக்க, அர்த்தத்துடன் சிரித்திருக்கிறார். ராஷ்ட்ரபதி பவன் வட்டாரங்களில் நாம் விசாரித்தோம். ""வீரேந்திர கட்டாரியா தனது அரசுக்கு ஒத்துழைப்பு தருவதில்லைன்னு ஏற்கனவே டெல்லி வந்த புதுவை முதல்வர் ரங்கசாமி புகார் செய்திருந்தார். புதுவை பா.ஜ.க தலைவர் விக்னேஷ்வரனும் புகார் தெரிவித் திருந்தார். காங்கிரஸ் ஆட்சியில் நியமிக்கப்பட்ட கவர்னர்தான் கட்டாரியா. அதனால மற்ற மாநிலங்களில் காங்கிரசால் நியமிக்கப்பட்ட கவர்னர்களை மாற்றுவதுபோலவே இவரையும் மாற்ற முடிவெடுக்கப்பட்டு விட்டது. 

இதைத் தெரிந்துகொண்ட சுப்ரமணியசாமி, அறிவிப்பு வருவதற்கு முதல்நாள் ஜனாதி பதியை கறுப்புபண விவகாரமாக சந்தித்துப் பேசிவிட்டு, தன்னால் தான் புதுவை ஆளுநர் நீக்கம் என செய்தியை பரப்பவிட்டுவிட்டார்'' என்கிறார்கள் நம்பகமான குரலில்.

புதுவை உயரதிகாரிகள்  மட்டத்தில் விசாரித்தோம். ""சங்கரராமன் கொலை வழக்கு மேல்முறையீட்டுக்கான ஒப்புதலைத் தெரிந்தே தான் கொடுத்தார் வீரேந்திர கட்டாரியா. அவர் எதிர்பார்த்தது மூன்றுமாத கால பதவி நீட்டிப்பு. மோடி அரசுடன் ஜெயலலிதா நட்புறவில் இருப்பதால், இதன்மூலம் டெல்லியில் தனக்கு சாதகமான சூழல் அமையும் என்பது அவரது எதிர்பார்ப்பு. அது நிறைவேறவில்லை. ஆளுநரை மாற்றவேண்டும் என்பதில் புதுவை முதல்வரும் கோரியிருந்ததால் மத்திய அரசு ஒரு முடிவுக்கு வந்தவிட்டது. ஜூன் 27-ந் தேதியே மேல்முறை யீட்டு ஃபைலில் கையெழுத்துப் போட்டுவிட்டார். ஆனால், ஜூலை 11-ந் தேதிதான் அவரது மாறுதல் உத்தரவு வெளியாகிறது. மேல்முறையீட்டு விவகாரம்தான் மாற்றத்துக்குக் காரணம் என்றால் ஏன் இத்தனை நாட்கள் ஆகப்போகிறது? 

சங்கராச்சாரியார்கள் ஜெயேந்திரர்-விஜயேந்திரர் விவகாரத்தில் அப்பீல் என்றதும் மோடி அரசு அதிர்ச்சியடைந்தது உண்மைதான். தமிழக அரசைச் சேர்ந்தவர்கள் டெல்லியில் இது தொடர்பான சட்ட ஆலோ சனைகள் நடத்தியிருக்கிறார்கள் என்பதும் மோடி அரசுக்கு தெரியவந்திருக்கிறது. எனினும் கவர்னர் மாற்றம் என்பது முன்பே ஆலோசிக்கப்பட்டதுதான்'' என்றும் சொல்கிறார்கள்.

சங்கரராமன் மகன் அனந்த சர்மா, ""எங்க அப்பா கொலையில் இப்பவாவது நியாயம் கிடைக்குமான்னு எதிர்பார்த்திருக் கோம். அதிலும் அரசியல் பண்ணுறாங்களே.. .. சங்கர மடத்தோட நிர்வாகத்தில் இருக்கும் காஞ்சிபுரம் காமாட்சி யம்மன் கோயிலில் மோடியோட வெற்றிக்காக நடனசாஸ்திரிங் கிற ஸ்தானீகரை வச்சி ஒரு ஹோமம் நடத்த அனுமதி கேட்டப்ப நடக்கலை. இப்ப கேஸ் வராமல் இருக்கவும், எதிரிகளை ஒழிக்கவும் ஜெயேந்திரர் தரப்பு அதே கோயிலில் சுரேஷ்ங்கிற ஸ்தானீகரை வச்சி சண்டி ஹோமம் நடத்திட்டிருக்குது.  கடவுள்தான் நல்ல தீர்ப்பு கொடுக்கணும்'' என்றார் வேதனைக் குரலில்.

காஞ்சிபுரம் நகராட்சி கவுன்சிலர் கண்ணன், சங்கர ராமனின் உறவினர். அவர் நம்மிடம், ""புதுச்சேரி கோர்ட்டில் தீர்ப்பு வந்ததுமே அப்பீலுக்கு நாங்க ட்ரை பண்ணினோம். அது சம்பந்தமான காப்பிகள் உடனடியாக  கிடைக்கலை. இப்பதான் கவர்னர் கையெழுத்துப் போட்டிருக்கிறார். அவரை சுப்ரமணியசாமி முயற்சியால மாற்றிட்டதா தகவல் வருது. அவங்களோட குடும்பத்தில் ஒருத்தரை இப்படி மடத்தைச் சேர்ந்தவங்க வெட்டிக் கொன்னிருந்தா சும்மா விட்டுவிடு வாரா?'' என்றார் ஆவேசமாக.

ஜெயேந்திரருக்கு ஆதரவான நடவடிக்கையாகத்தான் துணை நிலை ஆளுநர் வீரேந்திர கட்டாரியாவை மத்திய அரசு நீக்கியிருக்கிறது என வெளிப்படும் குற்றச்சாட்டை  மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் முன்வைத்தோம். ""சங்கரராமன் வழக்கில் அப்பீல் என்பது பற்றியோ, சுப்ரமணியசாமியின் தலையீடு என்பது பற்றியோ நான் எந்தக் கருத்தும் சொல்ல முடியாது. ஆளுநர்கள் மாற்றம் என்பது ஒரு வழக்கமான முடிவு. புதுவை துணை நிலை ஆளுநர் விவகாரத்திலும் அதுதான் நடந்துள்ளது'' என்றார் மிகவும் கவனமாக.

""அரசியலும் மதமும் பின்னிப்பிணைந்திருக்கும்போது நீதிக்கானப் போராட்டப் பாதை மிகவும் நெடியதாக இருக்கும்'' என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

ad

ad