புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஜூலை, 2014




யற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் மறைவுக்குப் பிறகு, எல்லாரின் கவனத்தையும் டெல்டா மாவட்டங்களின் பக்கம் ஈர்த்திருக்கிறது மீத்தேன் திட்ட எதிர்ப்பு மாநாடு!

காவிரி டெல்டா பகுதியில் உள்ள நாகை, திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் நிலக்கரிப் படிம மீத்தேன் வாயு இருப்பதைக் கண்டறிந்து, அதை உறிஞ்சி எடுப்பதற்கு, கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேசன் என்ற கம்பெனிக்கு அனுமதி தரப்பட்டுள்ளது. முதல்கட்டமாக நாகை மாவட்டம் சீர்காழி வட்டம் திருநகரியிலும், தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் வட்டம் நரசிங்கன்பேட்டையிலும் வேலைகளைத் தொடங்கினார்கள். ஊர் மக்களின் எதிர்ப்பால், இரண்டு இடங்களிலும் பணிகள் நிறுத்தப்பட்டன. 

தொடர்ந்து, திருநகரியில் நாகை மாவட்ட ஆட்சியர் முனுசாமி கருத்துக்கேட்பு எனும் பெயரில் மக்களைச் சந்தித்தார். அதில் ஆவேசப்பட்ட பகுதிவாசிகள், ""திட்டத்துக்காக தோண்டப்பட்டுள்ள இடத்தில் எடுக்கப்பட்ட நீரை நீங்கள் குடிக்கத் தயாரா?''’எனப் பொங்க, பதில்கூற முடியாமல், விட்டால் போதும் என பறந்தது அதிகாரிகள் படை. மறுநாளும் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தி மக்கள் தங்களின் எதிர்ப்பைக் காட்டினர்.

நடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் எல்லா அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கையிலும் மீத்தேன் உறிஞ்சு திட்ட விவகாரம் இடம் பெற்றிருந்தது. குறிப்பாக ஆளும்கட்சியான அ.தி.மு.க.வின் நாகப்பட்டினம், மயிலாடுதுறை பிரச்சாரக் கூட்டங்களில் பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா, "மக்களுக்கு பாதகமாக இருக்கும்பட்சத்தில் திட்டத்தை வர விடமாட்டேன்' என உறுதி கொடுத்தார். மீத்தேன் உறிஞ்சும் திட்டம் நல்லதா, கெட்டதா என ஆய்வுசெய்து அறிக்கை தர ஒரு குழுவை அமைத்தார். அதன் கதி என்ன என்று இன்றுவரை தெரியவில்லை. ஆனால், திட்டப்பணிகள் நிறுத்திவைக்கப்பட்ட திருநகரியில் போலீசார் அணிவகுப்பு நடத்த.. பயபீதியில் ஆழ்ந்துள்ளனர், அப்பகுதி மக்கள். 


இந்த சூழலில், கடந்த 13-ஆம் தேதியன்று கும்பகோணம் எஸ்.டி.எஸ். மகாலில் மீத்தேன் உறிஞ்சும் திட்டத்தை எதிர்த்து ஒரு மாநாடு நடத்தப்பட்டது. காலை 10 மணிக்குத் தொடங்கிய நிகழ்வு, முடிவதற்கு இரவு 10 மணி ஆகிவிட்டது. பல்வேறு தமிழ்த்தேசிய, சுற்றுச்சூழல் மற்றும் பொதுநல அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பல மாவட்டங்களிலிருந்தும் வந்திருந்தனர். 

நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் 2009 நவம்பரில் திருவாரூர் உச்சிமேடு கிராமத்தை சேர்ந்த 17வயதான சேதுபதி என்கிற இளைஞன் ஓ.என்.ஜி.சி குழாய் வெடித்து உடல் காயத்தோடு உயிர் பிழைத்தான். அவரை மேடைக்குக் கொண்டு வந்து நிறுத்த... மொத்தக் கூட்டமும் "உச்' கொட்டியது. 

மாநாட்டைத் தொடங்கிவைத்த தமிழர் தேசிய முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன், ""மீத்தேன் திட்டத்தை முறியடிக்காவிட்டால் எதிர்காலம் இருள் சூழ்ந்துபோகும்'' என்று பேசிவிட்டுக் கிளம்பினார்.

அடுத்து பேசிய மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் ஜவாஹிருல்லா,"" மத்திய அரசின் பட்ஜெட் டில் மீத்தேன் நிலக்கரி எடுக்கும் திட்டம் குறித்து ஊக்குவிக்கப்படும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. மன்மோகன் அரசின் கொள்கையைத்தான் பா.ஜ.க அரசும் பின்பற்றப் போகிறது'' என்றார். 

தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச்செயலர் தியாகு, ""சோறுடைத்த சோழநாடு இன்று வாடிக் கிடக்கிறது. அதற்குக் காரணம் நம் காவிரியை கர்நாடகா சிறை பிடித்திருப்பதுதான். இயற்கை பொய்த்துவிட்டது என ஒற்றைவரியில் சொல்லிவிட முடியாது. கர்நாடகம் தண்ணீர் கொடுக்க மறுத்தால், நாம் மின்சாரம் கொடுக்கக்கூடாது'' என்று கோபத்தைக் கொட்டினார். 

அணு உலை எதிர்ப்பாளர் சுப.உதயகுமார் பேசுகையில், ""அணுசக்தி பிரச்சினை தென் மாவட்டங்களுக்கான பிரச்சினை மட்டுமன்றி, எப்படி ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் பிரச்சினையோ, அதேபோல்தான் மீத்தேன் பிரச்சினையும்'' என்றார்.

நிறைவரங்கத்தில் பேசிய கொளத்தூர்மணி, ""இருக்கும் வளங்களை எல்லாம் தனியாரிடம் தாரைவார்த்துக் கொண்டிருக்கிறது, நமது அரசு. எங்கள் பகுதியில் அழகு தந்துகொண்டிருந்த மலைகளை வெட்டி தனிநபர்கள் கொள்ளையடிக்கின்றனர். மக்கள் சக்தியால் மட்டுமே மீத்தேன் உறிஞ்சும் திட்டத்தை முறியடிக்க முடியும்'' என்றார் சுருக்கென. 

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் தலைவர் பெ.மணியரசனோ, ""இலங்கையில் சிங்களவன் தமிழர்களை கொன்று குவித்த போது அங்கிருந்த தமிழர்கள் தாய்நாடான தமிழ்நாட்டுக்கு வந்தனர். இந்த தனியார் நிறுவனங்கள் தமிழ்நாட்டிலிருந்து தமிழர்களை அப்புறப்படுத்தத் துடிக்கிறது. நாம் எங்கே போவது?'' என்று உணர்ச்சிபொங்க வைத்தார்.

பொங்கு தமிழ் இயக்க அமைப்பாளரும், இதய சிகிச்சை வல்லுநருமான இலரா.பாரதிசெல்வன், ""மீத்தேன் திட்டத்தை மூன்று மாவட்டங்களின் 40 லட்சம் மக்களும் எதிர்ப்பதால், முதலமைச்சர் இடைக்காலத் தடை விதித்துள்ளார். இத்திட்டத்தைக் கிடப்பில் போடுவது போல பாசாங்கு செய்துகொண்டு, ஏற்கனவே டெல்டாவில் செயல்படும் கெயில், ஓ.என்.ஜி.சி. மூலமே குழாய் பதித்து மீத்தேன் எடுக்கும் நிறுவனத்திடம் கையளிக்கும் வாய்ப்பு உள்ளது. இதுபோன்ற சூழலில், அரசு வெளிப்படையாக செயல்படுவதில்லை'' என யதார்த்தத்தை நறுக்கென பேசினார்.

மீத்தேன் எதிர்ப்புக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் விவரித்த மாநாட்டுத் தீர்மானங்களில், தமிழக அரசின் நிலை குறித்து சொல்லும்படி எதுவும் இல்லை. மேலும், பாதிக்கப்படும் டெல்டா கிராமங்களுக்குச் சென்று நம்மாழ்வாரின் வழியில் உண்மைநிலையைப் புரியவைத்தால்தான், வரக்கூடிய ஆபத்தைத் தடுத்துநிறுத்த முடியும் என மாநாட்டுக்கு வந்திருந்த விவசாயிகள் ஆதங்கப்பட்டனர். 

ad

ad