கிளைக்கழக நிர்வாகிகள் உள்பட பலரையும் மாவட்ட வாரியாக சந்திக்கும் ஸ்டாலின், காஞ்சி மாவட்ட பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் பேசும்போது, ""இந்த மாவட்டச் செயலாளர் தா.மோ.அன்பரசனுக்கு வேறு தொழில்கள் எதுவும் கிடையாது. முழுக்க முழுக்க கட்சி வேலைதான் பார்க்கிறார். இவர்தான் மா.செக்களிலேயே சிறந்த மா.செ.'' என்று பாராட்டினார். ஸ்டாலின் இப்படிப் பேசிச் சென்றபிறகு உட்கட்சித் தேர்தலில் எஸ்.டி. உக்கம்சந்த், அண்ணா காலத்து அரசியல் வாதியான சி.வி.எம்.அண்ணாமலை குடும்பத்தார் இவர்களையெல்லாம் ஓரங்கட்டிவிட்டாராம் அன்பரசன். இவர்களைப்போல பாதிக்கப்பட்ட பலரும் தலைமைக்கு ஏராளமான புகார்களை அனுப்ப, இத்தனை புகார்களா என தா.மோ.அன்பரசனை நேரில் வரச்சொல்லி விசாரித்துள்ளார் கலைஞர்.
அதன் வெளிப்பாடுதான் மு.க.ஸ்டாலினின் அறிக்கை. அதில், "தலைவருக்கும், எனக்கும், கழக முன்னணியினருக்கும் இடையே பிளவை உருவாக்கிட நினைத்து கண்டதை எழுதுபவர்களுக்கு கூறிக் கொள்வேன் -ஆப்பசைத்த குரங்கின் நிலைதான் பின்னர் உங்கள் நிலையும் ஆகும் என்பதை உணர்வீர்! சிண்டு முடியும் வேலையை தொடராமல் இனியாவது நிறுத்துங்கள். இதுவே எனது தாழ்மையான வேண்டுகோள்' என்று கூறியுள்ளார்.
மீடியாக்கள் ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தை உணர்ந் தவர் முரசொலி செல்வம். அவர்தான் இந்த அறிக் கையின் பின்னணியில் இருந்திருக்கிறார் என்கிறது தி.மு.க தரப்பு. அறிக்கையைப் பார்த்த தொண்டர்களோ, "இது மீடியாக்களுக்கு மட்டுமல்ல, கட்சிக்குள்ளேயே இருக்கும் சிலருக்கும் பொருந்தும். எதிரியோடு மோதாமல் நமக்குள்ளேயே மோதி கட்சியை பலவீனமாக்கிக் கொண்டிருப்பவர்கள் புரிந்துகொள்ளும் வகையில் ஸ்டாலின் செயல்பட்டிருக்கிறார்' என நிம்மதியடைகிறார்கள்.
-நமது நிருபர்