7 பிப்., 2015

தேசிய வருவாயில் 81 வீதத்தை ராஜபக்ச குடும்பமே நிர்வகித்தது

நாட்டின் தேசிய வருமானம் 700 பில்லியனாக இருந்தபோதும் அதில் 19 வீதத்தை தவிர ஏனையவற்றை ராஜபக்ச குடும்பமே நிர்வகித்தது என அமைச்சர் சம்பிக்க ரணவக்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
நாட்டின் முழு வரி வருமானத்தையும் மஹிந்த ராஜபக்ஷ, பஷில் ராஜபக்ஷ, கோத்தபாய ராஜபக்ச என ஒரு குடும்பமே நிர்வகித்தது என்பதைக் குறிப்பிட்ட அமைச்சர் உலகில் இந்தளவு மோசமான நிர்வாகம் வேறெந்த நாட்டிலும் இருந்ததில்லை என்றும் தெரிவித்தார்.
வரவு செலவு திட்டம் மீதான விவாதத்தில் உரையாற்றிய அமைச்சர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த அரசாங்கத்தின் காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் 2000 முறைப்பாடுகள் அரசாங்கத்துக்குக் கிடைத்துள்ளன. இது தொடர்பில் முழுமையான விசாரணைகள் முன்னெடுக்கப்படும்.
கடந்த ஐந்து வருட காலத்தில் எந்த சட்ட திட்டங்களும் மதிக்கப்படாமல் ஊழல் மோசடிகள் பெருமளவில் இடம்பெற்றுள்ளன. நாட்டின் தேசிய வருமானத்தில் பெருமளவு பகுதியை ராஜபக்ச குடும்பமே நிர்வகித்துள்ளது.
எமது ஏற்றுமதித்துறை பாரிய பின்னடைவை அடைந்துள்ளது. மக்களுக்கான நிவாரணங்கள் வழங்கப்படாமல் வரிச் சுமைகள் மக்கள் மீதே சுமத்தப்பட்டன.
வெளிநாட்டு கையிருப்பு தொடர்பில் தொடர்ந்தும் மக்களுக்கு பொய்யே கூறப்பட்டு வந்துள்ளது.
மத்திய வங்கி அறிக்கைகளும் திரிபுபடுத்தியே வெளியிடப்பட்டுள்ளன.
கடன்பெற்ற பணமே வெளிநாட்டுக் கையிருப்பு என காட்டப்பட்டது. 100 ற்கு 8 வீதமான பொருளாதார அபிவிருத்தி எனக் காட்டுவதற்காக சரியான புள்ளி விபரங்கள் திரிபுபடுத்தப்பட்டதையும் குறிப்பிட வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.