புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 மே, 2015

போதைப் பொருள் பாவனை திட்டமிட்டே மாணவச் சமுதாயத்தினரிடையே அறிமுகப்படுத்தப்படுகின்றது?: முதலமைச்சர் விக்கினேஸ்வரன்


போதைப் பொருள் பாவனை திட்டமிட்டே மாணவச் சமுதாயத்தினரிடையே அறிமுகப்படுத்தப் படுகின்றதோ என்று எண்ண வேண்டியுள்ளது
என வடக்கு மாகாண சபை  முதலமைச்சர் க.வி.விக்கினேஸ்வரன் புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்டுள்ளதை கண்டித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புங்குடுதீவில் உயர்தர மாணவி வித்தியா வன்புணர்வுக்கு பின்னர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் அவர் விடுத்துள்ள கண்டன அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
மாணவி வித்தியாவின் பரிதாப மரணமும் அதற்கு முன்னர் அவர் மீது நடத்தப்பட்ட வன்புணர்வும், சித்திரவதையும் எமது சமுதாயத்தின் இன்றைய சீரழிந்த நிலையையே எடுத்துக் காட்டுகின்றது.
இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னர்தான் பிரதிப் பொலிஸ்மா அதிபராக யாழ். மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்டிருக்கும் G.K.பெரேராவுடன் வடமாகாணத்தில், குறிப்பாக யாழ் குடாநாட்டில், அதிகரித்துக் கொண்டு போகும் குற்றங்கள் சம்பந்தமாகப் பேசிக்கொண்டிருந்தேன். பொதுமக்கள் உதவியுடன் இவற்றைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவார் என்று அவர் எனக்கு வாக்குறுதியளித்தார்.
எனினும் இன்று நிலமை கட்டுக்கடங்காது செல்கின்றதோ என்று எண்ண வேண்டியுள்ளது. சில சமயங்களில் பொலிஸாரின் பொறுப்பற்ற நடவடிக்கைகளும் குற்றங்கள் இழைக்க ஏதுவாக அமைந்து விடுகின்றன.
உதாரணத்திற்கு பொலிஸாரிடம் சம்பவம் நடந்த மாலையே குறித்த பெண்ணின் தாய் தந்தையர் முறையிட்டுள்ளனர். ஆனால் பொலிஸார் ஊகங்களின் படி "காதலித்த பொடியனுடன் ஓடிப்போயிருப்பாள் காலமை வந்திடுவாள்" என்று கூறினார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்பேர்ப்பட்ட கரிசனையில்லாத் தன்மை, முன்கருதலற்ற கூற்றுக்கள், தாமதங்கள் ஆகியன மேலும் மேலும் குற்றங்கள் புரிய ஏதுவாக அமைவன என்பதை அதிகாரத்தில் உள்ள யாவரும் உணர வேண்டும். போர் முடிந்த பின்னர் சட்டத்தின் ஆதிக்கம் குறைந்து வருவதாகத் தென்படுகிறது.
சட்டத்திற்கு அமைவாகச் சமுதாயம் நடந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தைச் சீரழிப்பதாகப் பல நடவடிக்கைகள் நடந்துகொண்டிருப்பது மனவருத்தத்தைத் தருகின்றது. போதைப் பொருள் பாவனை திட்டமிட்டே மாணவச் சமுதாயத்தினரிடையே அறிமுகப்படுத்தப் படுகின்றதோ என்று எண்ண வேண்டியுள்ளது.
போரினால் பாதிக்கப்பட்ட அபலைப் பெண்களை வழிமாறிச் செல்ல திட்டமிட்ட வழிமுறைகள் பாவிக்கப்படுகின்றனவோ என்று எண்ண வேண்டியுள்ளது. எனவே கடமையில் கட்டுப்பாட்டுடனும் கண்ணியத்துடனும் இயங்கும் காவல்த்துறையினரின் அவசியத்தை நான் வலியுறுத்த விரும்புகின்றேன்.
இவ்வாறான காவல்த்துறையினரை உருவாக்குவதானால் போதிய பயிற்சிகள் அவர்களுக்கு அளித்து மக்கள் நலம் பேணும் சக்தியாகவும் மனித உரிமைகளைப் பாதுகாக்கும் துறையினராகவும் அவர்களை மாற்றி எடுக்க வேண்டும்.
இதற்கு மக்கள் மொழியில் அவர்கள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மக்கள் போரின் போது அனுபவித்த உடல் ரீதியான உளரீதியான தாக்கங்களை உணர்ந்தவர்களாக அவர்கள் இருக்க வேண்டும். இவற்றை இனியாவது பொலிஸின் உயர்மட்டம் கவனத்திற்கு எடுக்கும் என்று எதிர்பார்க்கின்றேன்.
பொலிஸ் அதிகாரங்கள் சம்பந்தமான மாகாணசபை அதிகாரங்கள் கட்டுப்படுத்தப்பட்டவையே என்பது யாவரும் அறிந்ததே. எனினும் மக்கள் நலம் நோக்கி எமக்குள் புரிந்துணர்வும் ஒற்றுமையும் இருந்தால்த்தான் சமுதாயச் சீரழிப்பாளர்களை நாங்கள் வெற்றி கொள்ளலாம்.
எம்மைப் பொறுத்தவரையில் மக்களிடையே அறிவையும் விழிப்புணர்ச்சியையும் ஏற்படுத்துவது எமது தலையாய கடனாகும். இதுகாறும் தமிழ் மக்களிடையே வன்முறைக் கலாசாரம் தலைதூக்கியிருந்தது.
பயத்தினால் குற்றங்களில் ஈடுபடாதிருந்தோர் பயம் அவர்களை விட்டதும் மிருக வெறியைக் காட்டி நிற்கின்றார்களோ என்றும் எண்ணத் தோன்றுகின்றது. மனித உரிமைகள் முக்கியமாக பெண்களின் உரிமைகள் பற்றி எமது சமுதாயம் போதிய அளவு அறிந்து வைத்திருப்பது அவசியம்.
இவை முன்னர் எமது பண்பாட்டுச் சூழல் காரணமாக இயற்கையாகவே மக்களுக்குத் தெரிந்திருந்தது. ஆனால் இனி நாங்கள் அறிவையும் விழிப்புணர்வையும் கட்டாயமாக மக்கள் மத்தியில் பரப்புவதன் மூலமாகத்தான் மாற்றத்தைக் கொண்டுவர முடியும்.
இதற்குக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பொது அமைப்புக்கள், சமய சார்பான நிறுவனங்கள் போன்ற பலவும் உதவ முன்வர வேண்டும். அருமருந்தன்ன ஒரு கெட்டிக்காரப் பெண்ணின் வாழ்க்கையைச் சீரழித்து கொன்று விட்டிருக்கின்றது எமது சமுதாயம்.
சமுதாயத்தில் குடி கொண்டிருக்கும் வன் எண்ணங்களின், சீர்கேட்டின் பிறழ்நடப்புக்களின் பிரதிபலிப்புக்களாகவே குற்றம் இழைத்தோரை நான் காண்கின்றேன். சமுதாய விழிப்புணர்ச்சி இனியேனும் எம்முள் எழ வேண்டும். வித்தியா சம்பந்தமாக புலம்பல்களைச் செய்து விட்டு சில காலத்தின் பின்னர் வாழாதிருப்பதில் பயனில்லை.
பல விடயங்களை ஆராய வேண்டியுள்ளது. வித்தியாமீது குற்றங்கள் இழைத்தவர்களுக்கு அப்பால் அண்மையில் வன் செயல்கள் அதிகரித்திருப்பதற்கு அரசியல் காரணங்கள் உண்டா? எமக்கு யாராவது பாடங்கள் சில புகட்ட எழுந்திருக்கின்றார்களா? அவை என்ன? என்ற பல கேள்விகளும் ஆராய வேண்டியுள்ளன.
எனினும் முதலில் பொலிஸாரின் விசாரணைகள் முடிவடையட்டும். இவை பற்றி நாம் அதன் பின் ஆராய்வோம். வன்முறைகள் சடுதியாகத் தலைதூக்க ஏதோ காரணம் இருக்க வேண்டும் என்பதே எனது கணிப்பு. மக்கள் பொலிஸாருக்குப் போதிய உதவியை நல்க முன்வர வேண்டும்.
வன்செயல்களில் ஈடுபட்டுள்ளவர்களுக்குப் பயந்து ஒதுங்கி இருக்கக் கூடாது. யாரேனும் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு அந்தரங்கமாகவேனும் உங்களுக்குத் தெரிந்ததைத் தெரியப்படுத்துங்கள். தீவகப் பகுதிகளில் பிறிதொரு அரசியல் அலகோ என்று எண்ணும் வண்ணம் சிலர் செயல்ப்பட்ட காலங்கள் இருந்தன.
ஆனால் அக்காலம் மலையேறிவிட்டது. மக்கள் மனத் திடத்துடன் இனி முன்னேற முன்வர வேண்டும். மரணித்த மகளை எமக்கு ஈடுசெய்ய முடியாது. தாய், தந்தையர், உற்றார், உறவினரின் கலக்கத்தையும், சோகத்தையும், மனவருத்தத்தையும் நாங்கள் நன்கு உணர்கின்றோம்.
அவர்களுக்கு எமது அடி மனதில் இருந்து வரும் அனுதாபங்களைத் தெரிவிக்கின்றோம். வடமாகாணசபையினர் தம்மால் முடியுமான உதவிகள் அனைத்தையுஞ் செய்ய கடமைப்பட்டிருக்கின்றார்கள். இப்பேர்ப்பட்ட குற்றங்கள் இனியும் ஏற்படாத வகையில் நடந்து கொள்வோமாக! வித்தியாவின் ஆத்மா இறைவனடி சேர்வதாக!-  இவ்வாறு முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ad

ad