புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 மே, 2015

சென்னையில் திரையிடப்பட்ட கௌதமனின் “இது இனப்படுகொலையா? இல்லையா?” ஆவணப்படம்! கண்ணீரால் நிரம்பிய திரையரங்கம்
இலங்கையில் நிகழ்ந்த தமிழினப் படுகொலைகளை ஆரம்பத்தில் இருந்து வரலாற்று ஆய்வுக் கண்ணோட்டத்துடனும் தகுந்த ஆதாரங்களுடனும்
தொகுத்து “இது இனப்படுகொலையா? இல்லையா?” என்கிற புதிய ஆவணப் படமொன்றினை சுமார் ஆறு மாத கால அயராத உழைப்பின் பயனாக உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் கௌதமன்.குறித்த ஆவணப்படமானது உலகத் தமிழர் பேரமைப்பின் ஏற்பாட்டில் கடந்த 13.05.2015 புதன்கிழமை மாலை 6 மணியளவில் சென்னை வடபழனியில் உள்ள ஆர்.கே.வி ஸ்டூடியோவில் (கமலா திரையரங்கம் அருகில்) 600 க்கும் மேற்பட்ட தமிழின உணர்வாளர்கள் மத்தியில் திரையிடப்பட்டது.
ஈழத்தில் தொடர்ச்சியாக, பல ஆண்டுகளாக நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைகளை தொகுத்து ஒரு சிறந்த வரலாற்று ஆவணமாக்கிய கௌதமனின் படைப்பாக்கத்தை பார்த்த தமிழ் மக்கள் கனத்த மனதோடு கண் கலங்கி அழுததை காணக் கூடியதாக இருந்தது.
ஆவணப்படம் படம் திரையிடல் முடிந்தவுடன் தமிழினத் தலைவர்கள் அனைவரும் இதுவரை காலமும் ஈழப் போரில் உயிர்நீத்த மாவீரர்களுக்கும், பொதுமக்களுக்கும் மலரஞ்சலி செலுத்தினார்கள்தொடர்ந்து, முதன் முறையாக ஈழத் தமிழினத்துக்காக குரல் கொடுக்கும் பெரும்பாலான அனைத்து தலைவர்களும் ஒரே மேடையில் ஓரணியில் நின்று ஆவணப் படத்தை வெளியிட்டு வைக்க அனைத்து மாணவ இயக்கங்களும், அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர்களும் குறித்த ஆவணப்படத்தை பெற்றுக் கொண்டார்கள். சில தலைவர்கள் தவிர்க்க முடியாத காரணத்தினால் கலந்து கொள்ள முடியாத போதும், குறித்த அமைப்புக்களின் அடுத்த கட்டத் தலைவர்கள் பங்கேற்றமை இதன் சிறப்பம்சமாகும்.தொடர்ந்து ஆவணப்படம் குறித்தும் தமிழினப் படுகொலை குறித்தும் தமிழினத் தலைவர்கள் உரையாற்றினார்கள்தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன்,
உலகம் முழுதும் பரந்து வாழும் அனைத்து மக்களிடத்திலும் இந்த ஆவணப் படத்தினை எடுத்துச் செல்ல வேண்டும். இந்தச் செய்தியை உலகம் பூராகவும் பரப்புவதன் ஊடாக மட்டுமே நம்முடைய இனத்தின் அழிவை உலகத்தின் கவனத்தின் பால் ஈர்க்க முடியும். அதற்கு இந்தப் படம் சிறப்பாக உதவும் என்று நிச்சயமாக நம்புகின்றேன். சிறப்பாக காட்சிகளைத் தொகுத்து பதிவு செய்த தம்பி கௌதமனுக்கு பாராட்டுக்கள்.
பெரியார் திராவிட விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி,
இனப்படுகொலை தொடர்பில் ஐநாவில் மனித உரிமை ஆணையம் மார்ச் மாதம் அறிக்கை அளித்திருக்க வேண்டும். அதனைச் செப்டெம்பர் மாதத்துக்கு தள்ளி வைத்திருகின்றார்கள். அவர்கள் விசாரணை செய்ய வேண்டும் என்று வைத்திருக்கின்ற கால அளவு என்பது 2002 – 2009 வரை என்று தான் போட்டிருக்கின்றார்கள்.
நாம் சொல்ல விரும்புவதும், ஆவணப்படத்தில் சொல்லி இருப்பதும் நீண்ட நெடிய வரலாறு தமிழினப் படுகொலைக்கு இருக்கின்றது என்பது தான். இங்கே உயிரை அழிக்கின்ற இனப்படுகொலை காட்டப்பட்டுள்ளது. ஆனால் பண்பாட்டை அழிக்கின்ற இனப்படுகொலை, மொழியை அழிக்கின்ற இனப்படுகொலை, அரசியல் கட்டமைப்பை அழிக்கின்ற இனப்படுகொலை எல்லாமே உள்ளடங்கியுள்ளது. ஈழம் ஒரு காலத்தில் தமிழர்கள் ஆண்ட இறையாண்மை உள்ள ஆட்சி அமைந்த நாடு தான். இடையில் இழந்து விட்டிருந்த இறையாண்மையை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தலைமையில் அதனை மீட்டெடுத்தார்கள். மீண்டும் இழந்து போய் இருக்கின்றோம். எனவே, அதனை மீட்டெடுப்பது தான் எங்களுக்குள்ள தீர்வாக இருக்க முடியும் என்பதனையும் அதில் காட்டி இருக்கின்றார்கள்.
எழுச்சிகளைக் காட்டும் போது மக்கள் போராட்டங்களை இங்கே நடந்த மாணவர் போராட்டங்களை காட்டியிருக்கலாம். வரும் செப்டெம்பர் மாதத்துக்குள் இங்கே நாம் எழுச்சிமிகு போராட்டங்களை முன்னெடுத்தாக வேண்டிய நிலையில் இருக்கின்றோம். முடிந்த வரை இங்கிருந்தும் சாட்சியங்கள் திரட்டி அளிக்கப்பட்டு இருக்கின்றன.
2009 தேர்தலின் போது “இனி என்ன செய்யப் போகின்றோம்” என்ற கௌதமனின் ஆவணப்படத்தை பெரியார் திராவிடக் கழகத்தின் பெயரால் வெளியிட்டோம். அதற்கு நிறையத் தடைகள் வந்தது. இன்றும் கூட வழக்குகள் நடந்து கொண்டிருக்கின்றது. ஆனால் குறித்த ஆவணப்படம் பெரிய தாக்கத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியது.
உணர்ச்சி பாவலர் காசி ஆனந்தன்,
கௌதமன் போன்றவர்கள் தமிழீழ விடுதலைப் போரில் ஆற்றி வருகின்ற பணி மிகப்பெரியது. பேசாத படங்கள் வந்த காலம் முதலான கடந்த 75 ஆண்டுகளுக்கு மேலாக ஈழத் தமிழர்கள் தங்களுக்கென்று திரைப்படங்களை உருவாக்கியது இல்லை. இது வரை காலமும் அவர்கள் தமிழ்நாட்டில் உருவாகும் திரைப்படங்களைத் தான் பார்த்தார்கள் பார்த்து வருகின்றார்கள். தமிழ்நாட்டில் உருவாகும் திரைப்படங்களுக்கு கிடைக்கின்ற வருமானம் தமிழ்நாட்டை விட புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர்களால் தான் கிடைக்கின்றது. இது வரை காலமும் தமிழ் திரையுலகத்துக்கு அவர்கள் எத்தனை கோடி ரூபாயினை கொடுத்திருப்பார்கள் என்பதனை மறந்து விடாதீர்கள். ஈழத் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் தமிழ்த் திரையுலகம் பெருமளவு துணை நின்றிருக்கின்றது என்பதனை நாம் மறக்கவில்லை. ஆனால், கௌதமன், புகழேந்தி தங்கராஜ் போன்றவர்கள் தமிழீழ விடுதலைப் போரில் முழுமையாகத் துணை நிற்கின்றார்கள். மூச்சோடும் தமிழின விடுதலையைப் பேசும் திரைப்படங்களாக புகழேந்தி தங்கராஜ் அவர்களின் திரைப்படங்கள் அமைந்தன.
கடந்த முறை வெளியான கௌதமனின் நீதியைத் தேடி என்கிற ஆவணப்படம் தமிழீழத்தில் பெண்களுக்கு நிகழ்ந்த கொடுமைகளைத் தோலுரித்துக் காட்டியது. ஐ.நாவில் குறித்த ஆவணப்படம் திரையிடப்பட்டது. அதனைப் பார்த்த பான் கீ மூன் அவர்கள் இலங்கையில் பெண்களுக்கு நிகழும் கொடுமைகளை தடுக்க காத்திரமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என அவரே கூறுமளவுக்கு கௌதமனின் ஆவணப்படம் நிதர்சனத்தை காட்டியுள்ளது. முள்ளிவாய்க்கால் மட்டுமல்லாமல் தொடர்ச்சியாக தமிழினத்துக்கு நடந்த கொடுமையை, இன அழிப்பை முழுமையாகக் காட்டுகின்றது குறித்த ஆவணப்படம்.
1833 ஆம் ஆண்டு கோல்புறூக் ஆணைக்குழு அமைக்கப்பட்ட போது தமிழர்களின் தாயகம் 26500 சதுர கிலோமீட்டர் என்று சொல்லப்பட்டது. இன்று 11 500 சதுர கிலோமீட்டராக சுருங்கி விட்டது அதிலும் ஏராளமான நிலங்கள் சிங்களப் படைகளின் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி இருக்கின்றது. அன்று 80 இலட்சமாக இருந்த சிங்களவர்கள் 2 கோடியை நெருங்கிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் தமிழர்கள் அன்றும் இன்றும் 35 இலட்சம் தான். நீண்ட நெடும் காலமாக ஈழத் தமிழினம் இன அழிப்புக்கு ஆளாகிக் கொண்டிருக்கின்றது. முள்ளிவாய்க்காலுக்குப் பின்பும் கூட அந்தக் கொடுமையான இன அழிப்புத் தொடர்கின்றது. இந்த இன அழிப்பை உலகம் ஒப்புக் கொள்ளச் செய்கின்ற வரை தமிழகம் ஒற்றுமையாக தன்னை இந்தப் போராட்டத்தில் ஈடுபடுத்த வேண்டும் என்பதனை என்னுடைய பணிவான வேண்டுகோளாகும். நீங்கள் முடிந்த வரை எம் போராட்டத்துக்கு உறுதுணையாக இருந்திருக்கின்றீர்கள். இனி வரும் காலங்களில் எம் போராட்டத்தை இன்னும் முழு வீச்சோடு கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு எமக்கு இருக்கின்றது.
இங்கு உளவுத்துறையினர் இருந்தால் தமிழின மக்கள் சார்பில் பதிவு செய்ய விரும்புவது இது தான். நேற்று நீங்கள் எப்படியோ இருந்திருக்கலாம். நாளை நீங்கள் அப்படி இருக்கக் கூடாது என்பதே எங்களுடைய பணிவான வேண்டுகோள். 1983 களில் எம் போராட்டத்தோடு தொடர்புடைய தலைவரான இந்திராகாந்தி அம்மையார் அவர்கள் அன்றே இலங்கையில் இடம்பெறுவது தமிழின அழிப்பு என்று சொன்னார். ஆரம்ப காலங்களில் இருந்தே அங்கு இன அழிப்பு இடம்பெற்று வந்திருக்கின்றது. அதனை வைத்தே அவர் அவ்வாறு கூறினார். இன்று நீங்கள் அன்று இந்திரா காந்தி அம்மையார் சொன்ன இன அழிப்பை ஒத்துக் கொள்கின்ற நிலைக்கு நீங்கள் வந்தாக வேண்டும். அப்படி வருகின்ற போது அமைகின்ற தமிழீழம் நான் உறுதியாகச் சொல்வேன். தமிழீழம் அமைவதால் தமிழீழத்துக்கு கிடைக்கும் நன்மையை விட இந்தியாவிற்குக் கிடைக்கும் நன்மை கூடுதலாக இருக்கும். அதனை சான்றுகளோடு நிறுவ எந்த நிமிடமும் நாங்கள் தயாராக இருக்கின்றோம். கௌதமன் காட்டியிருக்கின்ற இன அழிப்பு கண்ணீரின், சாவின், விம்மலின், பெருமூச்சின் இன அழிப்பு, இந்த இன அழிப்பு நீங்கள் மறுக்க முடியாத இன அழிப்பு. ஒப்புக் கொண்டே ஆக வேண்டிய இன அழிப்பு. இந்திரா காந்தி அம்மையார் சொன்ன இன அழிப்பு. இதனால் அதனை முதலில் ஒப்புக்கொள்ளுங்கள்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு,
இந்த ஆவணப் படத்தை பார்த்து விட்டேன். இன்று போய்த் தூங்கினால் இரவு முழுவதும் இதை யோசித்து அழுது, திரும்பவும் என் மனதுக்குள் ஒரு வெறி வரும். அந்த நிலைமைக்கு மாறாக எல்லாரையும் பேச வைத்து ஆளுக்கொரு கருத்தைச் சொல்லி எந்தக் கருத்திலை போய்த் தூங்குவது என்று தெரியாமல் இருக்கிறேன். (சிரிப்பொலியால் அதிர்ந்தது சபை)..
கௌதமன் தொடர்ச்சியாக பல படைப்புக்களை செய்து கொண்டிருக்கிறார். அவை எல்லா இடத்துக்கும் எல்லா மொழிகளிலும் கொண்டு போக வேண்டும். அகில இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி 10 ஆண்டுகளுக்கு முன்னாலேயே அகில இந்திய கம்யூனிஸ்ட் மாநாட்டில் இலங்கையில் இடம்பெறுவது இனப்படுகொலை. இதனை உலக நாடுகள் எல்லாம் சேர்ந்து தடுத்து நிறுத்த வேண்டும். என்று சொல்லி தீர்மானம் போட்டோம். அதனை எல்லோரும் வரவேற்றார்கள். தமிழன் என்று பெருமை பேசுகிறோம். தமிழன் என்றால் யார்? சமத்துவமாக, ஜாதி வேற்றுமை இன்றி எல்லோரும் தமிழன் என்கிற உணர்வோடு நாம் இருந்தால் எதையும் சமாளிக்க முடியும். அந்த உணர்வு மங்கும் போது தான் தமிழனுக்கு பல சிக்கல்கள் வருகின்றன. இதனை நாம் மறந்துவிடக் கூடாது.
எனவே, ஈழத் தமிழர்களுக்கு நிகழ்வது மனித குல சோகம். வியட்நாமுக்கு அடுத்த படியாக அதை விடக் கொடுமையாக 25 – 30 ஆண்டுகள் தொடர்ச்சியாக தமிழினம் அழிக்கப்பட்டிருக்கின்றது. எம்மினத்தைக் காக்க வேண்டும் என்கிற வைராக்கியம் ஒவ்வொரு தமிழனின் மனதிலும் சுடர் விட்டு எரிய வேண்டும். இந்தப் படம் அந்த வைராக்கியத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.
தமிழ்நாட்டில் முத்துக்குமார் தொடங்கி 29 உயிர்கள் தற்கொலை செய்து விட்டார்கள். அவர்கள் ஒரு ஜாதியைச் சேர்ந்தவர்கள் அல்ல. ஒரு மதத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. எல்லோருமே வாழக் கூடிய உயிர்கள். செய்து மடிந்து விட்டார்கள் என்பதனை நாம் மறந்து விடக் கூடாது. முத்துக்குமார் தன் மரண சாசனத்தில் ஒரு விடயத்தை மாத்திரம் சொல்லவில்லை. தமிழினம் எப்படிச் சீர் கெட்டிருக்கின்றது என்பதைச் சொன்னார். அதெல்லாம் நமக்குப் பாடமாக இருக்க வேண்டும். தமிழன் என்கிற முறையில் ஒன்று பட்டிருக்க வேண்டும். இனம் அழிந்து விடாமல் பாதுகாக்க வேண்டும். இன அழிப்புக்கு இடம் கொடுக்காமல் உறுதியாக இருக்க வேண்டும். கௌதமன் இந்தப் படைப்பில் வெற்றி பெற்றிருக்கின்றார். அந்த வெற்றியை எல்லா இடத்துக்கும் எடுத்துச் செல்ல வேண்டும். தமிழின அழிப்பு என்பது மட்டுமல்லாமல், ஒரு மனித குலம் எப்படி அழிக்கப்பட்டிருக்கின்றது. என்பதனைக் கூறும் இந்தப் படம் பல்வேறு தளங்களில் எடுத்துச் செல்லப்பட வேண்டும். கௌதமனுக்கும், மணிவண்ணனுக்கும் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இளந்தமிழக இயக்க ஒருங்கிணைப்பாளர் செந்தில்,
நான்காம் கட்ட ஈழப் போர் தீவிரமாக நடந்து கொண்டிருந்த நேரத்தில் “என்ன செய்யப் போகின்றோம்”, “இறுதி யுத்தம்” ஆகிய ஆவணப்படங்கள் கௌதமனின் படைப்பில் வெளிவந்திருந்தது. அந்தக் காலகட்டத்திலே தேர்தல் நேரத்தில் இறுதி யுத்தம் என்கிற ஆவணப்படம் காங்கிரசுக்கு எதிரான பரப்புரைகளுக்கு பெரும் கருவியாகப் பயன்பட்டது. அதற்கு முன்னர் துண்டறிக்கை, சுவரொட்டி என்கிற வகையில் இருந்த எங்களின் பரப்புரைக் கருவிகள், இவர் எடுத்த படத்துக்குப் பிறகு தான். எளிதாக மக்களிடத்தில் பிரச்சினைகளைக் கொண்டு போகக் கூடியதாக இருந்தது. யூத இனப்படுகொலைகள் தொடர்பில் ஏராளமான முழுநீளத் திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. அதே போல் தமிழினப் படுகொலை தொடர்பிலான முழு நீளப் படங்கள் வெளி வர வேண்டும். அப்போது தான் அது மனித குல நாகரிகத்தின் வளர்ச்சிக்கும் பங்களிக்கும். கடந்த ஆறாண்டு காலத்தில் எம் போராட்டம் அதன் வலியைச் சொல்லும் ஒரு முழுநீளத் திரைப்படங்கள் கூட வரவில்லை என்பது மிகுந்த துயரமாக உள்ளது. மிகச் சிறந்த படங்கள் வந்திருக்க வேண்டும். அதற்கான மனித வளமும் ஆற்றலும் தமிழ் நாட்டில் தான் இருக்கின்றது. பிறிதொரு காலத்தில் விடுதலைக்குப் பிறகு தமிழீழ மண்ணில் இருந்து ரஷ்யப் புரட்சிக்குப் பிறகு வெளிவரும் திரைப்படங்கள் போல் மிகச் சிறந்த படங்கள் வெளிவரும். தற்போது தமிழ் நாட்டில் இருந்தே அப்படியான திரைப்படங்கள் எடுக்கப்பட வேண்டும். இதனை கௌதமன் போன்ற இன்னும் பல இயக்குனர்கள் இயக்க வேண்டும்.
தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கோவை ராமகிருஷ்ணன்,
எந்தப் பிரச்சினையை எடுத்தாலும் ஒரு வாரம், ஒரு மாதத்தில் மறந்து விடும் பழக்கமுடைய தமிழ் மக்கள் மத்தியில் ஈழ மக்களின் வாழ்வியலையும் வரலாற்றையும் கோரச் சாவினையும், இந்த ஆவணப்படத்தில் இயக்குனர் கௌதமன் கொண்டு வந்திருப்பது மீண்டும் நாம் இதனை மக்களிடத்தில் கொண்டு செல்வோமாக இருந்தால், இங்கே படம் திரையிடப்பட்ட போது அனுதாப அசைவுகள் எல்லோர் வாயில் இருந்தும் எதிரொலித்துக் கொண்டிருந்தது. அது போல் தமிழ்நாட்டு மக்களிடத்திலும் மீண்டும் நாம் இந்த உணர்வை தட்டியெழுப்ப முடியும். காரணம் நாம் யாரை நம்பிக் கொண்டிருக்கின்றோமோ அந்த ஐ.நா மனித உரிமை ஆணையமே குற்றவாளி கையிலேயே தீர்ப்பை எழுதுகின்ற வாய்ப்பைத் தருகின்றது. இந்தியா ஒரு போதும் தமிழர் விடுதலையை அனுமதிக்காது. அதேநேரம் தமிழ்நாடு இல்லாமல் ஈழம் மலராது. ஆகவே தமிழ்நாட்டு மக்கள் தான் ஈழ மக்களுக்கு ஒரே துணை. ஒரே உதவி. இறுதிப்போரில் களமிறங்கி இருக்க வேண்டிய நாம். பார்த்துக் கொண்டேயிருந்து விட்டு விட்டோம். அந்த துரோகத்தை அன்றைக்கு நாம் செய்தோம். இனியாவது அந்த துரோகத்தை தொடர்ந்து செய்யாமல் ஈழ விடுதலைக்காக இந்த ஆவணப்படத்தை மக்களிடத்தில் கொண்டு செல்வோம்.மே17 அமைப்பின் தலைவர் திருமுருகன் காந்தி,
இவ்வாறான ஆவணப் படங்கள் இல்லை என்றால் பல்வேறு தகவல்களை வெளியில் கொண்டு போய்ச் சேர்த்திருக்க முடியாது. ஒரு வரலாற்றை முழுமையாகச் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை இல்லை என்று மேற்குலகம் முன்மொழிந்து கொண்டிருக்கக் கூடிய இந்தது தருணத்திலே இவ்வாறான ஆவணப்படங்கள் அங்கு நடந்தது இனப்படுகொலை தான் என்பதனை நிரூபிக்க பெரும் பங்கு ஆற்றுகின்றன. வரலாற்றுப் புத்தகங்களை புரட்டி நாம் தெரிந்து கொள்ளக் கூடிய விடயங்களை காணொளி மிக எளிமையாக விளக்கி விடுகின்றது. அந்த வகையில் கௌதமனின் இந்தப் படைப்பு போற்றுதலுக்கு உரியதாக இருக்கின்றதுஒவ்வொரு கலைப்படைப்பும் ஒரு ஆயுதமாக ஜனநாயக உலகத்தில் பயன்படுத்தப்படுகின்றது. ஆர்மீனியப் படுகொலை நடந்து நூறாண்டு கடந்த பின்பும் இன்றும் பேசிக் கொண்டு இருக்கின்றார்கள். ஆர்மீனிய இனப் படுகொலையை உலகம் அங்கீகரிக்க வேண்டும் என்பதற்காக நூறு ஆண்டுகளாக மக்கள் போராடிக் கொண்டு இருக்கின்றார்கள். ஐநாவின் சாசனத்தில் தேசிய இனங்கள் அவர்கள் விரும்பினால் பிரிந்து போகலாம் என கூறப்பட்டிருக்கிறது. ஏனெனில் இது அரசுகள் ஆள்கின்ற உலகம் அல்ல. மக்கள் ஆள்கின்ற உலகம். இதனால் விரும்பினால் நாட்டை உருவாக்கிக் கொள்ள முடியும் என்று ஐநாவின் முதல் விதியே சொல்கின்றது. தாங்கள் தேசிய இனம் என்பதனை வரலாற்று ரீதியாக நிரூபித்து விட்டார்கள் என்றால் அவர்கள் பிரிந்து செல்லக் கூடிய உரிமை என்பது அடிப்படை உரிமையாக மாறுகின்றது. பிரிந்து போகக் கூடிய விடயம் என்பது அடிப்படை மனித உரிமை விதி என்கிறது. அதனை மறுக்க முடியாது என்பதனை சட்டமாகக் கொண்டு வந்து விட்டார்கள். ஆகவே, தமிழீழத்தில் நடந்தது இனப்படுகொலை என்பதனை நாம் வரையறுத்தோம் என்றால் எமக்கு பிரிந்து செல்லும் உரிமை உண்டு என்ற காரணத்தினால் தான் இது இனப்படுகொலை இல்லை என்பதனை மேற்குலகம் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்கின்றது. ஆகவே, தமிழ் மக்கள் ஒன்றிணைந்து போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும்.
பசுமைத்தாயகம் அமைப்பைச் சேர்ந்த இரா.அருள் பேசும் போது,
தங்கள் அமைப்பு சூழலியலுக்கு ஆதரவாக போராடும் அமைப்பாக இருந்தாலும் தொடர்ச்சியாக 16 தடவைகள் ஐ.நாவில் ஈழத் தமிழ்மக்களுக்காக குரல் கொடுத்திருப்பதாக கூறினார். குறித்த ஆவணப்படத்தையும் ஆங்கில உப தலைப்புக்களுடன் ஐ.நாவில் திரையிட ஏற்பாடு செய்வதாகவும் கூறினார்.
இறுதியாக இயக்குனர் கௌதமன்,
எவ்வளவு முயற்சி செய்தாலும் சரி, எவ்வளவு மூடி மறைத்தாலும் சரி. எங்களுடைய இனம் எழும், எழ வேண்டும். அப்படி மீண்டெழும் என்கிற அடிப்படையில் தான் இந்தப் படைப்பை நான் செய்திருக்கிறேன். என் இனம் விடுதலை அடைகின்ற வரைக்கும் நான் படைப்புக்களை படைச்சுக்கிட்டே இருப்பேன்.
ஏராளமான காட்சித் துண்டங்களைத் தொகுத்து பல ராத்திரிகள் கண்விழித்து அழுதழுது படித்தவை தான் இந்த ஆவணப் படைப்புக்கள். தமிழீழமும், தாய்த் தமிழ்நாடும் விடுதலை அடைகின்ற வரைக்கும் நான் ஓயவே மாட்டேன். படைப்பைச் செய்து கொண்டே இருப்பேன். ஒன்று என் இனம் விடுதலை அடைய வேண்டும். அல்லது நான் சாக வேண்டும். அப்போது தான் என் படைப்புப் பயணம் நிற்கும். இதனை நான் உணர்ச்சி வசப்பட்டுச் சொல்லவில்லை. தெளிவான மனநிலையில் சொல்கிறேன். ஏனென்றால், இந்தப் பூமிப் பந்தில் யாருக்கும் இல்லாத பெருமையும் தீரமும் அறமும் இலட்சியமும் வாழ்வியலும் வரலாறும் வரைபடமும் என் இனத்திற்கு மட்டுமே சொந்தமானது. நாங்கள் ஈழத்தில் வாழ்ந்தோம் என்று எத்தனையோ பதிவுகள் வந்திருக்கிறன. நாங்கள் வாழவில்லை. ஆண்டு வாழ்ந்தோம் என்பது தான் முக்கியமானது.மறுபடியும் இந்தப் பூமிப் பந்தில் இரு தேசங்கள் உருவாகியே ஆக வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். அதற்காக காலம் காலமாக எத்தனை இலட்சம் தமிழ் உயிர்கள் மண்ணைக் காக்க இறந்திருக்கிறார்கள். இதற்காக தான் என் மனநிலை சிதைந்தாலும், சுயநினைவு இருக்கின்ற வரை படைப்புக்களைச் செய்ய வேண்டும் என நினைக்கின்றேன். Pursuit Of Justice – நீதிக்கான இடைவிடாத போராட்டம் என்கிற எனது முன்னைய ஆவணப்படம் ஐ.நா மன்றத்தில் திரையிடப்பட்ட போது அங்கே திரண்டிருந்த கறுப்பின, வெள்ளையின அரசியல் அறிஞர்கள், மனித உரிமைப் போராளிகள் கண்ணீர் விட்டு அழுதார்கள் என அறிந்தேன். உண்மையான ஆன்மாவோட ஒன்றி அந்தப் படைப்பு உருவானதால் அதன் தாக்கம் அந்தளவு இருந்திருக்கிறது.
அந்தப படைப்பை உருவாக்கிய இறுதிக்கட்ட வேலையில் இருந்த போது, அங்கே ஒரு கேள்வி வரும். இந்த உலகம் கோடானு கோடி ஆண்டுகளாக அறத்தோடு தான் இயங்கிக் கொண்டு இருக்கின்றது. எங்களுடைய இனம் இன்று வரைக்கும் அறத்தோடு, ஒழுக்கத்தோடு, நீதியோடு இயங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த இரு அறங்களும் உண்மை என்றால் எங்களைச் சிதைத்தனை இன்றைக்கு வரைக்கும் வேடிக்கை பார்க்கின்றீர்களே? இது அறமா என்று கேட்ட அந்த இடம் வரும் போது குலுங்கிக் குலுங்கி அழுதேன். இந்தக் குமுறல் இந்தக் கோபம் இந்த வெறி ஒவ்வொரு தமிழனுக்குள்ளும் இருக்க வேண்டும். நமக்கு விடுதலை கிடைக்கின்ற வரைக்கும் அந்த வெறி ஓயவே கூடாது.

ad

ad