6 ஜூன், 2015

குடும்ப நலனைவிட கழக நலனுக்கே தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டவர் சுலோச்சனா சம்பத்: ஜெ. இரங்கல்சுலோச்சனா சம்பத் மறைவுக்கு ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:–

அ.தி.மு.க. அமைப்புச் செயலாளரும், கழகத்தின் மூத்த உறுப்பினருமான ஈ.வி.கே.சுலோச்சனா சம்பத் உடல் நலக்குறைவால் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.

தந்தை பெரியாரின் குடும்பத்தைச் சேர்ந்த சுலோச்சனா சம்பத் பொது வாழ்வில் பெண்கள் பங்கு பெறுவதற்கும், சமூகத்தில் பெண்கள் சம உரிமை பெற்றிடவும் உழைத்தவர். என்னுடைய அன்பிற்கும், மதிப்பிற்கும் உரியவராக என்றும் விளங்கியவர். இவர், தனது குடும்ப நலனை விட கழக நலனுக்கே தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டர்.

கழகப் பணிகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டு பணியாற்றி வந்த சுலோச்சனா சம்பத், கழக ஆட்சி மன்றக் குழு உறுப்பினர், கழக மகளிர் அணிச் செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளில் சிறப்பாகப் பணியாற்றியதோடு, சமூக நல வாரிய உறுப்பினர், தமிழ் நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியத் தலைவர், தமிழ் நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத் தலைவர் மற்றும் தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு அரசுப் பதவிகளிலும் திறம்பட பணியாற்றி அனைவரின் அன்பையும், பாராட்டையும் பெற்றவர்.

சுலோச்சனா சம்பத்தின் இழப்பு எனக்கும், அ.தி.மு.க. விற்கும் பேரிழப்பாகும்.

கழகத்தின் மூத்த முன்னோடி சுலோச்சனா சம்பத்தை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.