புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

6 ஜூன், 2015

சர்வதேசத்தின் நேரடி கண்காணிப்பில் சமஷ்டி அடிப்படையிலான தீர்வே தேவை


தமிழ் மக்கள் அரைகுறை தீர்வை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்
தமிழ் மக்களுக்கு சமஷ்டி அடிப்படையிலான சர்வதேச மத்தியஸ்தத்தின் நேரடி கண்காணிப்பில் தீர்வினை தர வேண்டுமென வட மாகாண சபை உறுப்பினர் கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், இனப்பிரச்சினைக்கான தீர்வு இன்னும் கிடைக்கவில்லை. எமது பிரச்சினை சர்வதேசம் வரைக்கும் சென்றுள்ளது.ஐ. நா. மனித உரிமை பேரவையின் அறிக்கை வெளிவர இருக்கும் சூழ்நிலையில் மாறி மாறி வரும் அரசாங்கம் எமது தமிழ் தலைவர்களுடன் செய்துகொண்ட ஒப்பந்தங்களை தன்னிச்சையாக உதறி எறிந்து மதிக்க தவறியதன் விளைவு தான் கோர யுத்தம் வரை சென்றது.
இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் கொண்டு வரப்பட்ட 13வது திருத்தம் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு தீர்வாக அமையாது என்பதனை திட்டவட்டமாக கூறியுள்ளோம்.
தமிழ் மக்கள் அரைகுறை தீர்வினை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். நாம் சமஷ்டி அடிப்படையிலான தீர்வினை எதிர்பார்த்து இருக்கின்றோம்.
இந்திய அரசாங்கத்தினால் தரப்பட்ட அதிகாரங்களை பயன்படுத்த விடாத அளவிற்கு தற்போதைய நிலமை இருக்கின்றது.
எனவே சர்வதேச மத்தியஸ்தத்தின் ஊடாக சமஷ்டி முறையிலான தீர்வினைப் பெற்றுக் கொள்ள தமிழ் இனம் எதிர்பார்த்திருக்கின்றது.
எமக்கு அரசியல் தீர்வு தேவை என்பதுடன் எமது மக்களின் புனர்வாழ்வு மற்றும் வாழ்வாதாரம் கட்டி எழுப்பப்பட வேண்டும். இதற்கு பின்னர் பாவமன்னிப்பு கொடுக்க வேண்டுமா இல்லையா என்பதனைப் பற்றி தமிழ் மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.
இடையில் உள்ள தரகர்கள் ஓடித்திருந்து செய்யும் வேலைகளை உடனடியாக நிறுத்த வேண்டும். இது தமிழ் மக்களுகு கேடு விளைவிக்கும்.
இவ்வாறான விடயம் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருக்கின்ற ஒரு சில தரகர்களின் வேலை. தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருக்கின்ற ஏனையவர் களின் ஒப்புதல் பெறப்படாமல் செய்யப்படுகின்றது. எமது தமிழ் மக்களின் தலைவிதியுடன் விளையாட வேண்டாமென்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.