6 ஜூன், 2015

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: இறுதிப்போட்டியில் பார்சிலோனா- யுவன்டஸ் அணிகள் இன்று மோதல்

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் பெர்லினில் இன்று நடக்கும் இறுதிப்போட்டியில் பார்சிலோனா-யுவன்டஸ்
அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

சாம்பியன்ஸ் லீக்

இந்த சீசனுக்கான (2014-15) ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கிளப் கால்பந்து போட்டித் தொடர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கியது. இதில் ஐரோப்பா கண்டத்தை சேர்ந்த பிரபலமான 20 கிளப் அணிகள் பங்கேற்றன. லீக் மற்றும் நாக்-அவுட் சுற்று முடிவில் ஸ்பெயினை சேர்ந்த பார்சிலோனாவும், இத்தாலியை சேர்ந்த கிளப் அணியான யுவன்டசும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

எதிர்பார்க்கப்பட்ட 10 முறை சாம்பியனான ரியல் மாட்ரிட் கிளப்பும் (ஸ்பெயின்), பயர்ன் முனிச்சும் (ஜெர்மனி) அரைஇறுதியுடன் வெளியேற்றப்பட்டன.

இறுதி ஆட்டம்

இந்த நிலையில் கால்பந்து ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் பார்சிலோனா-யுவன்டஸ் இடையிலான இறுதிப்போட்டி ஜெர்மனி தலைநகர் பெர்லினில் உள்ள ஒலிம்பிக் ஸ்டேடியத்தில் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. போட்டியை 75 ஆயிரம் ரசிகர்கள் நேரில் பார்ப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

4 முறை சாம்பியனான பார்சிலோனா கிளப்பில் புகழ்பெற்ற வீரர்களான லயோனல் மெஸ்சி, நெய்மார், லூயிஸ் சுவாரஸ் ஆகியோர் இடம் பெற்றிருக்கிறார்கள். இவர்கள் மூன்று பேர் மட்டும் இந்த சீசனில் எல்லா வகையிலான போட்டியையும் சேர்த்து மொத்தம் 120 கோல்களை போட்டு பிரமாதப்படுத்தியுள்ளனர். இந்த தொடரில் மட்டும் மெஸ்சி 10 கோலும், நெய்மார் 9 கோலும் அடித்து அசத்தியுள்ளனர். இவர்களுடன் இனியஸ்டாவும் களத்தில் இருக்கிறார். இதனால் பார்சிலோனா அணி மீதே அனைவரின் பார்வையும் பதிந்துள்ளது.

யுவன்டசும் சாதாரண அணி கிடையாது. கேப்டனும், கோல் கீப்பருமான ஜியான்லுகி பப்போன், கார்லோஸ் டெவிஸ், ஆண்ட்ரியோ பிர்லோ, பால் போவா உள்ளிட்டோர் யுவன்டஸ் அணியின் நம்பிக்கை வீரர்களாக உள்ளனர். பலம் வாய்ந்த பார்சிலோனாவின் தாக்குதலை சமாளிக்க, தங்களது தடுப்பு அரணை வலுப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தியுள்ளனர்.