25 செப்., 2015

வேலணையில் அத்துமீறி வீடு புகுந்து பெண்ணைக் கடத்தியவர்கள்,அவரை வன்புணர்ந்த பின்னர் கிணற்றில் போட்டுக் கொலை செய்ய முற்பட்டுள்ளனர்

வேலணையில் அத்துமீறி வீடு புகுந்து பெண்ணைக் கடத்தியவர்கள்,அவரை வன்புணர்ந்த பின்னர் கிணற்றில் போட்டுக் கொலை செய்ய முற்பட்டுள்ளனர் என்று
குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.அந்தப் பெண் அவர்களது காலில் விழுந்து கதறியதோடு புத்திசாலித்தனமாகவும் நடந்து கொண்டதால் உயிர்தப்பியுள்ளதாகக் கூறப்படுகின்றது.
கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வேலணையிலுள்ள குடும்பஸ்தர் ஒருவரின் வீட்டுக்கு இரண்டு சந்தேக நபர்களும் சென்றுள்ளனர்.அவர் திருமணமாகி 7 மாதங்களாகின்றன.அங்கு சென்ற சந்தேக நபர்கள் கதவைத் தட்டியுள்ளனர். எனினும் குடும்பஸ்தர் கதவைத் திறக்காது என்ன, ஏது என்று கேட்டுள்ளார். பின்னர் மறுநாள் வருமாறு கூறியுள்ளார். ஆனால் அந்த இரண்டு பேரும் அதனைக் கேட்கவில்லை. வீட்டுக் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றுள்ளனர். பின்னர் தீப்பெட்டி எடுத்து வருமாறு சந்தேக நபர்கள் கூறியுள்ளனர். அதன் மூலம் அவர்கள் பீடியைப் பற்ற வைத்துள்ளனர். அவர்கள் ஏற்கனவே திட்டமிட்டு இந்தச் செயலில் இறங்கினரா என்று சந்தேகம் எழுப்பப்படுகிறது. 
ஏனெனில் அவர்கள் கையில் கோடரி ஒன்றுடனேயே நள்ளிரவு நேரம் அங்கு சென்றுள்ளனர். குடித்துவிட்டு போதை ஏறிய நிலையில் உள்ளே சென்று அடாவடியில் ஈடுபட்டுள்ளனர்.தாம் கொண்டு சென்ற கோடரிபிடியால் குறித்த குடும்பத் தலைவனைத் தலையில் தாக்கியுள்ளனர். வலி தாங்காமலும் காயம் ஏற்பட்ட நிலையிலும் அவர் அந்த இடத்திலிருந்து விலகியோடிய பின்னரே குறித்த பெண்ணை இருவரும் கடத்தி தூக்கிச் சென்றுள்ளனர். 
அவ்வாறு கடத்தி வேலணைக் காட்டுக்குக் கொண்டு சென்று அங்கு வைத்து வன்புணர்ந்துள்ளனர். இரண்டு பேருமே வன்புணர்ந்துள்ளனர் என்று ஆரம்ப விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அவ்வாறு வன்புணர்ந்த பின்னர் அந்தப் பெண்ணை அங்குள்ள கிணற்றில் போட்டுக் கொலை செய்ய முற்பட்டனர் என்றும்,  அவர்களது காலில் விழுந்து அழுது கெஞ்சியதோடு புத்திசாலித்தனமாக நடந்து கொண்டதாலேயே தன்னால் தப்ப முடிந்ததாக அந்தப் பெண் தெரிவித்துள்ளார். 
வீட்டில் நகை, பணம் இருக்கின்ற விடயம் சந்தேக நபர்களுக்குத் தெரிந்திருந்ததா என்பது தெரியாத போதும், அதனையும் கொள்ளையடிக்கும் நோக்கம் அவர்களுக்கு இருந்ததா என்பது தெரியவில்லை. நகை பற்றிய விடயம் பேசப்பட்டதால், பெண்ணைக் கிணற்றில் போட்டுக் கொல்வதனை அந்த நேரத்தில் தவிர்த்திருக்கலாம் என்றும் சந்தேகம் தெரிவிக்கப்படுகிறது.
அந்த நகைகளை எடுப்பதற்காகவே அந்தப் பெண்ணையும் இழுத்துக் கொண்டு காட்டுப் பகுதியிலிருந்து வீடு நோக்கிச் சென்று கொண்டிருக்கும் போது, ஏற்கனவே தேடுதலில் ஈடுபட்டிருந்த மக்கள் சந்தேக நபர்களைப் பிடித்துள்ளனர். பொலிஸாரும் தேடுதலில் ஈடுபட்டிருந்ததால் உடனடியாகச் சந்தேக நபர்கள் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்தேக நபர்கள் திருட்டிலும் ஈடுபடுபவர்கள் என்றும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பெண்ணைக் கடத்தியவர்களில் அக்பர் என்று அழைக்கப்படும் நபர், வேலணையில் அதே தினம் திருடப்பட்ட சைக்கிள் ஒன்றுடன் மண்டைதீவில் பயணித்துக் கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டிருந்தார். அவர் உரிய கவனிப்புக்குட்படுத்தப்பட்டதனால் மற்றையவரைக் காட்டிக் கொடுத்துள்ளார். அதன் மூலமாகக் காட்டில் தேடுதல் தீவிரப்படுத்தப்பட்டதாகவும் பின்னர் கைது செய்ய முடிந்ததாகவும் பொலிஸாரால் தெரிவிக்கப்படுகிறது.
தாக்கப்பட்ட கணவனும், பாதிக்கப்பட்ட பெண்ணும் நேற்று முன்தினம் வைத்தியாலையில் சேர்க்கப்பட்டனர். பின்னர் சந்தேக நபர்களும் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். பின்னர் அவர்கள் பொலிஸ் தடுப்பில் வைத்து விசாரணைக்குட்படுத்தப்பட்டனர். நேற்று அவர்கள் நீதிவானிடம் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.