25 செப்., 2015

தமிழ் மக்கள் சர்வதேச விசாரணையை விரும்புகின்றார்கள் : சம்பந்தன் நாடாளுமன்றத்தில் அறிவிக்க வேண்டும்

ஜெனீவா மனித உரிமைச் சபை ஆணையாளரின் அறிக்கையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் நிராகரித்துள்ள நிலையில்
சம்பந்தன் அதற்கு பதிலளிக்க வேண்டும் என்றும் வடக்கு கிழக்கில் உள்ள சிவில் அமைப்புகள் வலியுறுத்தவுள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும் இது தொடர்பாக யாழ் ஆயர் இல்லத்தைச் சேர்ந்த அருட்தந்தை ஒருவர் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பிரதித் தலைவர் மாவை சேனாதிராஜாவிடம் நேற்று புதன்கிழமை தொடர்பு கொண்டு பேசினார் என்றும் ஆனால் அதற்கு சாதகமான பதில் கூறப்படவில்லை எனவும் கூட்டமைப்பு தகவல்கள் குறிப்பிட்டன.
சர்வதேச விசாரணையை வலியுறுத்தி வடக்கு கிழக்கு மாகாணங்களில் கையெழுத்து பெறும் போராட்டங்கள் நடைபெற்ற நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் உள்ளக விசாரணைதான் நடத்தப்படும் என நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை கூறியுள்ளார்.
ஆனால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இது தொடர்பாக எதுவும் கூறவில்லை- அத்துடன் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையிலும் சம்பந்தன் கருத்துக்கள் எதனையும் முன்வைக்கவில்லை.
ஆகவே இது தொடர்பாக தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு அழுத்தம் கொடுக்க சிவில் அமைப்புகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இதேவேளை இந்தியப் பயணத்தின்போது புதுடில்லியில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் விளக்கமளித்தபோது எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் ஆசனத்தில் இருக்கவில்லை எனவும் கூறப்படுகின்றது.