புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 அக்., 2015

சினிமா பாணியில் பெண் கடத்தல்: 8 மணி நேரத்தில் மீட்டது பொலிஸ்

வடமராட்சி கம்பர்மலைப் பகுதியில் இளம் பெண்ணொருவர் சினிமாப் பாணியில் கடத்திச் செல்லப்பட்டு எட்டு மணி நேரத்தினுள், பொலிஸாரின்
அதிரடி முயற்சியால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். இந்தக் கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்ட சந்தேகத்தில் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர். கடத்தலுக்குப் பயன் படுத்தப்பட்ட வாகனமும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் வடமராட்சிப் பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வடமராட்சி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் என்று வடமராட்சிப் பகுதிக்குப் பொறுப்பான உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஜவ்பர் தெரிவித்துள்ளார். 
சம்பவம் தொடர்பில் தெரிய வருவது,
வடமராட்சி  வல்வெட்டித்துறை கம்பர் மலைப்பகுதியைச் சேர்ந்த இளம்பெண் நேற்று முன்தினம் புதன்கிழமை பருத்தித்துறை நீதிமன்றில் இடம்பெற்ற வழக்குக்குச் சென்றார். வழக்கு முடிவடைந்ததும், குறித்த பெண்ணும் தாயாரும் வீடு நோக்கிப் புறப்பட்டனர். நேரம் பி.ப. 4.30 மணியளவில், கம்பர்மலை சந்தியை அவர்கள் நெருங்கினர். இதன்போது அங்கு வானொன்று அவர்களை நெருங்கியது.
அந்த வானில் இருந்தவர்கள் கம்பர் மலைக்குச் செல்லும் பாதையை குறித்த பெண்ணிடம் கேட்டுள்ளனர். அதற்கு அவர்பதில் சொன்னதும் புறப்பட்டுச் சென்றதுவான். பின்னர் உடனடியாகவே அந்த வான் திரும்பி வந்து குறித்த பெண் அருகில் நின்றது. அதிலிருந்த 4 பேர் பெண்ணின் தாயாரைத் தள்ளி வீழ்த்திவிட்டு குறித்த பெண்ணை வலுக்கட்டாயமாக வானில் ஏற்றிக் கடத்தினர்.
கட்டளை வழங்கியவர் கணவர் 
கடத்திய பெண்ணுடன் வான் பறந்தது. புன்னாலைக் கட்டுவன் ஆலயம் ஒன்றுக்கு அருகில் வான் நிறுத்தப்பட்டது. அப்போது கடத்தல்காரர்களில் ஒருவர் கைத்தொலைபேசியில் ஒரு வருக்குத் தகவல் வழங்கியுள்ளார். சிறிது நேரத்தில் குறித்த பெண்ணின் கணவர் முச்சக்கர வண்டியில் அங்கு வந்து சேர்ந்துள்ளார்.
அவர் கடத்தல்காரர்களிடம் குறித்த பெண்ணை இடமாற்ற வேண்டும் என்று கட்டளை பிறப்பித்துள்ளார். அங்கிருந்து புத்தூரில் உள்ள சட்டத்தரணி ஒருவரின் வீட்டுக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு குறித்த பெண் அடைத்து வைக்கப்பட்டிருந்தார் என்று விசாரணையின் போது கடத்தப்பட்ட பெண் வாக்குமூலத்தில் தெரிவித்தார் என பொலிஸார் குறிப்பிட்டனர். 
பொலிஸ் அதிரடி 
குறித்த பெண் கடத்தப்பட்டார் என்று நேற்று முன்தினம் பிற்பகல் எமக்கு முறைப்பாடு கிடைத்தது. பெண் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இடம் தொடர்பில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜவ்பருக்கு இரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாகவே பொலிஸார் உசாராகினர். உதவி பொலிஸ் அத்தியட்சகரின் வழி நடத்தலில் பிரதான பொலிஸ் பரிசோதகர் ஒருவர் தலைமையிலான விசேட  பொலிஸ் குழு அதிகாலை குறித்த சட்டத்தரணியின் வீட்டைச் சுற்றி வளைத்தது.
 இந்த நடவடிக்கைக்கு பிரதி பொலிஸ்மா அதிபர் ஜி.கே.பெரேரோ மற்றும் கங்கேசன்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மாசிங்க ஆகியோரின் ஆலோசனையும் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
இதன் பின்னர் வீட்டினுள் நுழைந்த பொலிஸார் சோதனையிட்டனர். இதன் போது கடத்தப்பட்ட பெண் அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸார் அதிரடியாக மீட்டுள்ளனர். குறித்த பெண்ணின் கணவரும் அங்கு நின்றிருந்த நிலையில் அவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
மீட்கப்பட்டது வாகனம்  சிக்கினர் சந்தேகநபர்கள்
 கைது செய்யப்பட்ட கணவரிடம் பொலிஸார் முறைப்படியான' விசாரணைகளை மேற்கொண் டனர். விசாரணையின் பயனாக கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனம் கல்வியங்காடு பகுதியில் கைப்பற்றப்பட்டது. வல் வெட்டித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மீடின் தலைமையிலான பொலிஸ் குழுவே இந்த வாகனத்தைக் கைப்பற்றியது. 
தொடர் விசாரணைகளைத் தொடர்ந்து கடத்தலில் ஈடுபட்ட னர் என்று சந்தேகிக்கப்படும் எட்டு சந்தேகநபர்களும் குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வைத்துப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
பின்னணி 
ஏற்கனவே குறித்த பெண் அவரது கணவர் தொடர்பான விவாகரத்து வழக்கு ஒன்றும் நீதிமன்றில் நடந்து வருகின்றது என்று பொலிஸார் தெரிவித்தனர். அவர் ஏற்கனவே பல மோசடி வழக்குகளுடன் தொடர்புடைய சந்தேக நபர். ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன் ஒருவரை நிதி மோசடி செய்தார். அப்போது கணவர் என்ற ரீதியில் குறித்த பெண்பிணை எடுத்திருந்தார். அது சம்பந்தமான வழக்குக்கு சமூகம் அளித்து விட்டு வந்த நிலையிலேயே பெண் கடத்தப்பட்டுள்ளார். கடத்தப்பட்ட பெண் தமக்கு வழங்கிய வாக்கு மூலத்தில்  இவ்வாறு தெரிவித்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

ad

ad