புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 நவ., 2015

ஜெயலலிதா தோழிக்கு ரூ.1000 கோடி எப்படி வந்தது? ஈ.வி.கே.எஸ் கேள்வி!

: சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்ற ஜெயலலிதாவின் தோழிக்கு ரூ.1000 கோடி எப்படி வந்தது என தமிழக காங்கிரஸ் தலைவர்
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் 3வது கொங்கு மண்டல மாநாடு, திருப்பூரில் இன்று (5-ம் தேதி) காலை தனியார் திருமண மண்டபத்தியில் தொடங்கியது. முன்னதாக கட்சிக்கொடியை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமநாதன் ஏற்றி வைத்தார். திருப்பூர் மாநகர மாவட்ட தலைவர் கிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.

 மாநாட்டிற்கு தலைமை வகித்துப் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், "நான் யாரைப்பற்றியும் யாரிடமும் குறை சொல்ல வேண்டியது இல்லை. கடந்த ஓராண்டு காலம் செய்த பணிகளை தொடர்ந்து செய்வேன். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் மரண அடி வாங்கியது. அதையும் மீறி கட்சியில் இன்று மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது. மோடி ஆட்சியின் அநீதிகள், அட்டூழியங்களை பார்க்கும்போது காங்கிரஸ் அரசு பரவாயில்லை எனவும், மக்களை காங்கிரஸ் கட்சிதான் காக்கும் என்றும் மக்கள் நினைக்க தொடங்கி உள்ளனர்.

வேலை செய்யாத மாவட்ட தலைவர்களை கொலு பொம்மைகளாக வைத்து அழகு பார்க்க முடியாது. வேலை செய்யாதவர்களை வைத்திருக்க மாட்டேன். வேலை செய்பவர்களுக்கு வாய்ப்பு அளிப்பேன்.

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்ற ஜெயலலிதாவின் தோழிக்கு 1000 கோடி ருபாய் எப்படி வந்தது? மக்களிடம் கொள்ளையடிக்கப்பட்டது. இதை சட்டமும், நீதியும் வேடிக்கை பார்க்கிறது. இதை காங்கிரஸ்காரர்கள் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.

கோவனின் மீது தேசத் துரோக சட்டம் பாய்கிறது.  ஆனால், மது அரக்கனிடம் இருந்து மீட்க வேண்டும் என்பது நல்ல விஷயம். நலத்திட்ட உதவிகளை காண்பிப்பதை போல், டாஸ்மாக் கடை நடத்தும் ஜெயலலிதாவை சுட்டிக் காட்டுவதில் என்ன தவறு?  எழுத்து, பேச்சு சுதந்திரம் தமிழகத்தில் என்னாவது என யோசிக்க வேண்டும். அதேபோல் நாம் சாப்பிடுவதை யார் தீர்மானிப்பது? மாட்டுக்கறி சாப்பிடக் கூடாது என சொல்வது என்ன நியாயம்? தாழ்த்தப்பட்ட மக்களை கொளுத்துவது என்ன நியாயம்?

என்னுடைய ஓராண்டு உழைப்பு வீண்போகாது. அதற்கான பயனாக 2016-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெறுவோம். தமிழகத்தில் இந்த ஓராண்டில் காங்கிரஸ் கட்சி வளர்ச்சி அடைந்திருக்கிறது. காங்கிரஸ் மீது மீண்டும் மக்கள் மத்தியில் நம்பிக்கை வந்திருக்கிறது. அதை நாம் அதிகப்படுத்த வேண்டும்.

மோடி அரசு 5 ஆண்டுகள் வரை தாக்குப்பிடிக்காது. இன்னும் 6 மாத காலத்தில் ராகுல் காந்தி செங்கோட்டையில் கொடி ஏற்றுவார்." என்றார்.

ச.ஜெ.ரவி

ad

ad