புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 டிச., 2015

சாலையில் கிடந்த ரூ.5.23 லட்சம்... உரியவரிடம் கொடுத்து துயரத்தை துடைத்த ஆட்டோ டிரைவர்!

சாலையில் கிடந்த ரூ.5.23 லட்சத்தை உரியவரிடம் கொடுத்து துயரத்தை துடைத்துள்ளார் ராமநாதபுரத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஆனந்த்.
 
ராமநாதபுரம் தீயணைப்பு மற்றும்  மீட்பு பணிகள் நிலையத்தில் ஓட்டுநராக
பணியாற்றி வருபவர் நாகசுந்தரம். இவரது சகோதரர் முனியசாமி. இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் டிக்கெட் பரிசோதகராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். முனியசாமி நிலம் வாங்குவதற்காக,  கடந்த நவம்பர் 30-ம் தேதி ராமநாதபுரம் பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு நாகசுந்தரத்துடன் சென்றுள்ளார். நிலம் வாங்குவதற்கான தொகையான ரூ.5 லட்சத்து 23 ஆயிரத்தினை நாகசுந்தரத்திடம் கொடுத்து வைத்திருந்த நிலையில் மேலும் பணம் தேவைபட்டுள்ளது. இதனால் நாகசுந்தரம் தனது மனைவியின் கணக்கில் உள்ள பணத்தினை எடுப்பதற்காக,  சிகில்ராஜவீதியில் உள்ள ஏ.டி.எம் மையத்திற்கு சென்றுள்ளார். அப்போது நாகசுந்தரத்தின் இருசக்கர வாகனத்தில் இருந்த பெட்டியில் வைத்திருந்த பணப்பை கீழே விழுந்துள்ளது. இதனை நாகசுந்தரம் கவனிக்கவில்லை.

பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு சென்ற நாகசுந்தரம் இருசக்கர வாகன பெட்டியில் வைத்திருந்த பணத்தை எடுக்க பெட்டியினை திறந்த போது அதில் பணம் வைத்திருந்த பையை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த நாகசுந்தரம் காணாமல் போன பணத்தை தேடி அலைந்தும் பணம் கிடைக்கவில்லை. இது தொடர்பாக ராமநாதபுரம் பஜார் காவல் நிலையத்தில் புகார் செய்த நிலையில்,  போலீசார் காணாமல் போன பணம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். இது குறித்து நாளிதழ்களிலும் செய்தி வெளியாகி இருந்தது.

இந்நிலையில் ராமநாதபுரம் பஜார் காவல் நிலையத்திற்கு வந்த ஆட்டோ   டிரைவர் ஆனந்த், கீழே கிடந்த பணப்பையை ஆய்வாளர் விவேகானந்தனிடம் ஒப்படைத்துள்ளார். அந்த பையை திறந்த போது அதில் ரூ.5 லட்சத்து 23 ஆயிரம் இருந்துள்ளது. இதையடுத்து பணத்தை இழந்த நாகசுந்தரம்  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டார். அங்கு எஸ்.பி. மணிவண்ணன்,  பணத்தை தவறவிட்ட நாகசுந்தரம் மற்றும் கண்டெடுத்த ஆட்டோ டிரைவர் ஆனந்த் ஆகியோரிடம் விசாரணை செய்தார். கீழே கிடந்த பணத்தை போலீசாரிடம் ஒப்படைத்த ஆட்டோ டிரைவர் ஆனந்தின் நேர்மையினை பாராட்டி எஸ்.பி. மணிவண்ணன் பரிசளித்து கௌரவித்தார். அப்போது பணத்தை இழந்த நாகசுந்தரம் ஆனந்தின் கால்களை பிடித்து கண்ணீருடன் நன்றி தெரிவித்தார். இந்த நிகழ்வை கண்டவர்கள் அனைவரும் நெகிழ்ந்து போனது மட்டுமில்லாமல்,  நேர்மையான ஆனந்தனை பாராட்டி வாழ்த்தினர்.

லட்சக்கணக்கான பணத்தை கொண்ட பை தனது கையில் கிடைத்தது குறித்து ஆட்டோ டிரைவர் ஆனந்த் கூறும் போது, "சிகில் ராஜவீதியில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் எனது ஆட்டோவுடன் நின்று கொண்டிருந்தேன். அப்போது என்னை கடந்து சென்ற டூவீலர் அப்பகுதியில் இருந்த வேகத்தடை மீது ஏறிய போது அந்த டூவீலரின் பெட்டியில் இருந்து பை ஒன்று விழுந்தது. இதனை அப்பகுதியில் நடந்து சென்ற  பெண்கள் இருவர் எடுத்தனர். அந்த பையை திருப்பி கொடுப்பதற்காக அந்த பெண்களும், நானும் சத்தமிட்டோம். ஆனால் டூவீலரில் சென்றவர் அதனை கவனிக்கவில்லை. இதனால் அந்த பெண்கள் என்னிடம் அந்த பையை கொடுத்து ‘பையை தவற விட்டவர் வந்து கேட்டால் கொடுங்கள்’ என சொல்லி என்னிடம் கொடுத்து சென்றனர். நானும் அன்று முழுவதும் ஆட்டோவிலேயே அந்த பையை வைத்திருந்தேன். இரவில் வீட்டிற்கு சென்று பார்த்த போதுதான் அதில் பணம் இருப்பது தெரியவந்தது. மறுநாள் காலை பணத்தை இன்ஸ்பெக்டரிடம் ஒப்படைத்தேன். அவர் என்னை எஸ்.பி. ஆபிஸுக்கு அழைத்து சென்று பணத்தை தொலைத்தவரையும் வரவழைத்தார். எஸ்.பி. முன்னிலையில் என் காலில் விழ வந்த நாகசுந்தரத்தை தடுத்து அவருக்கு ஆறுதல் தெரிவித்தேன். இந்த பணத்தை இழந்தபோது அவரும் அவரது குடும்பத்தினரும் எவ்வளவு மன துயரம் அடைந்திருப்பார்களோ என நினைத்து பார்க்கவே கஷ்டமாக உள்ளது. நல்ல வேளையாக அந்த பணத்தினை உரியவர்களிடமே சேர்க்க எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்ததை எண்ணி மகிழ்ச்சியாக இருக்கிறேன்" என்றார்.

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்து தவிப்போரின் உடமைகளை கூட திருடி செல்ல நினைக்கும் ஈவு இரக்கமற்றவர்கள் மத்தியில், தனது கையில் கிடைத்த அடுத்தவரின் பணத்தை தனதாக்கி கொள்ளாமல் உரியவர்களிடம் ஒப்படைத்த ஆனந்த் போன்ற நல்மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

ad

ad