புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 டிச., 2015

குடிசை வீடுகளை இழந்தோருக்கு நிரந்தர வீடுகள் கட்டி தரப்படும் : ஜெயலலிதா நிவாரண அறிவிப்பு



முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,

’’தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் துவங்கி டிசம்பர் மாதம் முடிய நீடிக்கிறது. இவ்வாண்டு வடகிழக்கு பருவ மழை காலதாமதமாக 28.10.2015 அன்று துவங்கியது. பின்னர் ஒரு சில நாட்களில் மிக அதிக அளவு கன மழை பொழிந்ததன் காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் கடலூர் மாவட்டங்கள் மிக அதிக அளவு பாதிப்புக்கு  உள்ளாகியுள்ளன.  

திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள நீர் நிலைகள் நிரம்பி வழியும் நிலையில், உபரி நீர் திறந்து விடப்பட்டதையடுத்து, தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்ததோடு மட்டுமல்லாமல், பல பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ள நீர் புகுந்தது.

மழையின் பாதிப்பிலிருந்து மீண்டு, இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில் 1.12.2015 அன்று பெய்த கன மழையின் காரணமாக, மீண்டும், திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் சென்னை மாவட்டங்கள் பெரும் பாதிப்பை சந்திக்க நேர்ந்தது.  குறிப்பாக தாம்பரம் பகுதியில் அதிகப்படியாக 49.4 செ.மீ. மழை பெய்தது. 

பெரு மழையின் காரணமாக ஏரிகள் நிரம்பியதால் உபரி நீர் திறந்து விடப்பட்டது. செம்பரம்பாக்கம், பூண்டி, புழல்,சோழவரம்  ஆகிய ஏரிகளிலிருந்து 65,000 கன அடி வரை உபரி நீர் திறந்து விடப்பட்டது.  ஆந்திர மாநிலம் கிருஷ்ணாபுரம் அணையிலிருந்து திறந்து விடப்பட்ட  நீரினால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது.  இதன் காரணமாக அடையாறு, பக்கிங்காம் கால்வாய், கூவம், கொசஸ்தலை ஆறு ஆகியவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.  அதனால், சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் பல தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்து மக்கள் பாதிக்கப்பட்டனர்.

தமிழகத்தில் பெய்த கன மழையின் காரணமாக அதிக பாதிப்புக்குள்ளான மாவட்டங்களான கடலூர், திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் மீட்பு, நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளை துரிதப்படுத்த, அமைச்சர் பெருமக்கள் மூத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் கொண்ட குழுக்களை  அனுப்பி வைத்தேன்.  இதுவன்றி சென்னை மாநகரில், ஒவ்வொரு மண்டலத்திற்கும், ஒரு இந்திய ஆட்சிப் பணி அதிகாரி வீதம், 15 மண்டலங்களிலும் உயர் அதிகாரிகள் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை சென்னை மாநகராட்சி ஆணையருடன் இணைந்து மேற்கொண்டனர்.

கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத வகையில் பெருமழை பொழிந்ததன் காரணமாக வெள்ளத்தில் சிக்கும் மக்களை மீட்பதற்குத் தேவையான ராணுவம், கப்பற் படை மற்றும் விமானப் படை, தேசியப் பேரிடர் மீட்புக் குழு, கடலோரக் காவல் படை  ஆகியவற்றின் உதவி உரிய நேரத்தில் கோரி பெறப்பட்டது. 1,200 ராணுவ வீரர்கள், 600 கப்பற்படை மற்றும் விமானப் படை வீரர்கள், 1920 தேசிய பேரிடர் பாதுகாப்புப் படையினர், 30,000 காவல் துறையினர், 1,400  தீயணைப்பு மற்றும் மீட்புத் பணிகள் துறையினர், 45,000 இதரத்  துறையினர் என மொத்தம் 80,120 பேர் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.

மழை வெள்ளம் சூழ்ந்ததால் பாதிப்புக்கு உள்ளான 13,80,461 மக்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு 5554 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். அவ்வாறு நிவாரண முகாம்களில்  தங்க வைக்கப்பட்டுள்ள நபர்களுக்கு உணவு, குடிநீர் மற்றும் மருத்துவ வசதிகள் அளிக்கப்பட்டு வருகிறது.  இதுவன்றி, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு 72,64,353 உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன.

மழை வெள்ளத்தால் பாடப் புத்தகங்கள் மற்றும் சீருடைகளை இழந்த பள்ளி மாணாக்கரது நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு புதிய பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள் மற்றும் ஒரு ஜோடி சீருடை வழங்க நான் ஆணையிட்டிருந்தேன்.  இதனடிப்படையில் இதுவரை 37707 பள்ளி மாணக்கர்களுக்கு பாடப் புத்தகங்களும், 26865 மாணாக்கர்களுக்கு நோட்டுப் புத்தகங்களும், 9306 மாணாக்கர்களுக்கு பள்ளிச் சீருடைகள் வழங்கப்பட்டுள்ளன.  மேலும், மழை வெள்ளத்தால் குடும்ப அட்டைகளை இழந்த மக்களுக்கு, நகல் குடும்ப அட்டைகள் வழங்கவும் என்னால் ஆணையிடப்பட்டு, நகல் குடும்ப அட்டைகள் துரிதமாக வழங்கப்பட்டு வருகின்றன.

நிவாரண முகாம்களில் தங்கியுள்ள நபர்களுக்கு பால் மற்றும் பால் பவுடர் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 453 டன் பால் பவுடர் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.  சென்னையில் 130 டன், திருவள்ளூர் மாவட்டத்தில்  112 டன், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 108.5 டன், கடலூர் மாவட்டத்தில் 102.5 டன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
 
இதுவன்றி, என்னுடைய ஆணையின் பேரில் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொது மக்களுக்கு பாய் மற்றும் போர்வைகள் வழங்கப்பட்டுள்ளன.

வெளிச் சந்தையில் காய்கறிகளின் விலை அதிகமாகியுள்ளதால், உடனடியாக பண்ணை பசுமை நுகர்வோர் அங்காடிகள் மூலமாக  குறைந்த விலையில் காய்கறிகளை பொது மக்களுக்கு அளிக்க வேண்டும் என்று நான் ஆணை பிறப்பித்ததன் அடிப்படையில், தற்போது சென்னை மாநகரத்தில் 90 பண்ணை பசுமை நுகர்வோர் அங்காடிகளில்  குறைந்த விலையில் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  அத்துடன் 13 நகரும் அங்காடிகள் மூலமாக விற்பனை நடைபெற்று வருகிறது. சென்னையில் உள்ள பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை நிலையங்களுள், 85 விழுக்காடு நிலையங்கள் போதிய அளவு இருப்புடன் செயல்பட்டு வருகின்றன.  பொது மக்களுக்கு எரிவாயு எவ்வித தடையின்றி கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. 

மேலும், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மகளிர்  சுகாதாரம் பேணும் வகையில் ‘சேனிட்டரி  நேப்கின்கள்’ வழங்க வேண்டும் நான் உத்தரவிட்டதன் பேரில், தற்போது நிவாரண முகாம்களில் ‘சேனிட்டரி நேப்கின்கள்’ வழங்கப்பட்டு வருகின்றன.  அத்துடன் முகாம்களில் தங்கியுள்ள குழந்தைகளுக்கு ‘டையாபரும்’ எனது ஆணையின் பேரில் வழங்கப்பட்டு வருகிறது.

மின் விநியோகத்தைப் பொறுத்தமட்டில், சென்னையில் 95 விழுக்காடு இடங்களில் மின் விநியோகம் தற்போது  வழங்கப்பட்டு வருகிறது.  வெள்ள நீர் சூழ்ந்துள்ள ஒரு சில இடங்களில் மட்டும், இன்னமும் மின் விநியோகம் சீர் செய்யப்பட்டவில்லை. வெள்ள நீர் வடிந்த பின்னர் இந்த இடங்களில் மின்  விநியோகம் சீர் செய்யப்படும். 

சென்னை மாநகராட்சியில் வெள்ளம் வடிந்த இடங்களில் சுகாதாரத்தைப் பேணுவதற்காக மாநகராட்சி துப்புரவுப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது.  வெளிமாவட்டங்களிலிருந்து 2,000 துப்புரவுப் பணியாளர்கள் சென்னைக்கு வரவழைக் கப்பட்டுள்ளனர்.  சென்னை மாநகராட்சிப் பகுதியில் தற்பொழுது 25,000 துப்புரவுப் பணியாளர்கள் துப்புரவுப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.  சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள குப்பைகளை விரைந்து அகற்றும் பொருட்டு மேலும் 5,000 துப்புரவுப் பணியாளர்கள் பிற மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு வரவழைக்கப்படுவர். மேலும், தேவைக்கேற்ப சென்னை மாநகரத்தில் துப்புரவுப் பணியாளர்கள் தினக்கூலி அடிப்படையில் பணி அமர்த்தப்படுவர்.  அவர்களுக்கு நாளொன்றுக்கு 300 ரூபாய் வழங்கப்படும். இந்த அடிப்படையில்  துப்புரவுப் பணியாளராக பணியாற்ற விரும்புவோர் சென்னை மாநகராட்சியின் மண்டல அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம். 

சென்னை மாநகர துப்புரவுப் பணியாளர்கள் கடந்த பல நாட்களாக குப்பைகளை அகற்றும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இரவு, பகல் என்று பாராமல் கடுமையாக உழைக்கும் அவர்களை ஊக்குவிக்கும் வகையில், இந்த துப்புரவுப் பணியாளர்களுக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக 2,000 ரூபாய் வழங்கப்படும்.  

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு அரசு உணவு, குடிநீர் என நிவாரணங்கள் வழங்கி வருகிறது.  இந்திய கப்பற்படையினைச் சேர்ந்த மூன்று கப்பல்கள் விசாகப்பட்டி னத்திலிருந்து நிவாரணப் பொருட்களை கொண்டு வந்துள்ளன.  அவை அனைத்தும் பெறப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன.  மேலும், பல தொண்டு நிறுவனங்ளும், தனியார் பலரும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்கி உள்ளனர்.  பல தன்னார்வ அமைப்புகள் நிவாரணப் பொருட்கள் வழங்க விருப்பம் தெரிவித்துள்ளன.  அவ்வாறு நிவாரணப் பொருட்களை வழங்க விரும்புவோர், ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில், இதற்கென ஏற்பட்டுத்தப்பட்டுள்ள மையத்தில் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், பல தனியார் நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் வெள்ள நிவாரணத்துக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.  அவ்வாறு நிதி உதவி செய்ய விரும்புவோர்  காசோலை/ வரைவோலை (னு.னு) மூலம் நிதித்துறை இணைச் செயலாளருக்கு அனுப்பி வைக்கலாம்.  அல்லது நிதித் துறை இணைச் செயலாளரை நேரில் சந்தித்தும் வழங்கலாம். 

தற்போது வெள்ள பாதிப்பு நிலைமை சீரடைந்து வருகிறது.  இன்னும் ஒரிரு தினங்களில் நிலைமை முற்றிலும் சீரடைந்து  விடும்.

வெள்ளத்தின் காரணமாக பொதுமக்கள் தங்களது நிலம் மற்றும் வீட்டு மனைப் பட்டா, கல்வி சான்றிதழ், எரி வாயு இணைப்பு அட்டை, ஆதார் அடையாள அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, வங்கி கணக்குப் புத்தகம், நிலம் / வீட்டு கிரையப் பத்திரம் உள்ளிட்ட ஆவணங்களை இழந்துள்ளனர் என தகவல் கிடைக்க பெற்றுள்ளதைத் தொடர்ந்து, மேற்சொன்ன ஆவணங்களை இழந்துள்ள பொது மக்களுக்கு அவற்றின் நகல்களை உடனடியாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். 

இதற்காக சிறப்பு முகாம்கள் வருவாய் வட்டங்களிலும், கல்வி சான்றிதழ்களுக்கு, பள்ளி மற்றும் கல்லூரிகளிலும்  வருகின்ற 14.12.2015 முதல் இரண்டு வாரங்களுக்கு நடத்த நான் உத்தரவிட்டுள்ளேன். இம்முகாம்களில், தமிழ்நாடு அரசின் பல்வேறு துறை அதிகாரிகளும், மத்திய அரசின் தொடர்புடைய நிறுவனங்களின் அதிகாரிகளும் கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து விண்ணப்பங்களை பெற்று ஒரு வாரத்திற்குள்ளாக நகல் ஆவணங்களை கட்டணமின்றி வழங்குவர். சிறப்பு முகாம்களில் மட்டுமன்றி, பொதுமக்கள் விண்ணப்பங்களை பொது சேவை மையங்கள் மூலமாகவும் கொடுத்து நகல் ஆவணங்களைப் பெறலாம்.  

தமிழ்நாடு பத்திரப் பதிவுச் சட்டம் 1908 பிரிவு 57(5)-ன்படி, இச்சிறப்பு முகாம்களில் விண்ணப்பித்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் நிலம்/வீட்டுமனை சொத்து தொடர்பான பத்திர நகல்கள் யாவும் மூல ஆவணங்களாகக் கருதப்படும்.

ஆட்டோ ஒட்டுநர்கள் பலர் ஒட்டுநர் உரிமச் சான்று மற்றும் வாகனப் பதிவுச் சான்று ஆகியவற்றை இந்த மழை வெள்ளத்தால் இழந்துள்ளனர். இந்த ஆவணங்களும் இதே நடைமுறைப்படி வழங்கப்படும். மழை வெள்ளத்தால் சேதமடைந்த குடிசைகளுக்கு ரூ.5000/-ம், குடும்பத்திற்கு 10 கிலோ அரிசியும் வழங்க நான் ஏற்கெனவே ஆணையிட்டதன் அடிப்படையில் இந்த  நிவாரண உதவிகள் துரிதமாக வழங்கப்பட்டு வருகின்றன.  

மழை வெள்ளம் காரணமாக, வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததன் காரணமாக, பல பகுதிகளில் பொது மக்கள் தங்களது உடைமைகளை இழந்துள்ளனர். தெருக்களிலும், தரைத் தளத்திலும் வெள்ளநீர் பெருக்கெடுத்ததால் மேல்தளத்தில் உள்ள மக்களும் மழையால் பாதிக்கப்பட்டனர். 

இவ்வாறு  மழை வெள்ளத்தால் பாதித்த மக்களின் துயர் துடைக்கும் வகையில் அவ்வாறு பாதிக்கப்பட்ட குடும்பம் ஒன்றுக்கு 5,000 ரூபாயும், ஒரு வேட்டி, ஒரு சேலை மற்றும் 10 கிலோ அரிசி ஆகியவற்றை சிறப்பு வெள்ள நிவாரணத் தொகுப்பாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். மேற்காணும் தொகையானது, பாதிக்கப்பட்ட மக்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். வேட்டி, சேலை மற்றும் அரிசி ஆகியவை சம்மந்தப்பட்ட நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்படும். 

அதாவது, வெள்ள பாதிப்பால் குடிசைகளை இழந்த குடும்பங்கள் குடிசை ஒன்றுக்கு 5,000 ரூபாய் மற்றும் சிறப்பு நிவாரணத் தொகையாக 5,000 ரூபாய் என மொத்தம் 10,000 ரூபாய் மற்றும் 10 கிலோ அரிசி, ஒரு வேட்டி மற்றும் ஒரு சேலை ஆகியவற்றை பெறுவர். நிரந்தர வீடுகளில் வசித்து வெள்ள பாதிப்புக்கு உள்ளானோர் 5,000 ரூபாய், 10 கிலோ அரிசி, ஒரு வேட்டி மற்றும் ஒரு சேலை ஆகியவற்றை நிவாரணமாக பெறுவர்.

பாதிக்கப்பட்ட குடும்பங்களை கணக்கெடுக்கும் பணிகளை உடனடியாக துவங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.  இந்த கணக்கெடுப்புகள் முடிந்தவுடன் இவை இன்னும் ஒரு சில தினங்களில் வழங்கப்படும். குடிசைகளை இழந்து வாடும் மக்களுக்குத் தேவையான வீடுகள் கட்டித் தர நான் உத்தரவிட்டுள்ளேன். 

இதன்படி, இந்த மழையின் காரணமாக குடிசை வீடுகளை இழந்த அனைவருக்கும் பாதுகாப்பான வீடுகள் கட்டித் தரப்படும்.  சென்னை மாநகரில் அடையாறு, கூவம், பக்கிங்காம் கால்வாய் ஆகியவற்றின் கரையோரங்களில் குடிசை வீடுகளில் தங்கி இருந்தவர்கள் தங்கள் வீடுகளை இழந்து விட்டனர். ஒக்கியம் துரைப்பாக்கம் மற்றும் பெரும்பாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தால் கட்டப்பட்டுள்ள 10,000 குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகள் இவர்களுக்கு உடனடியாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்’’என்று கூறியுள்ளார். 

ad

ad