புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 டிச., 2015

சூளைமேடு சம்பவம்! உயர்நீதிமன்ற அழைப்பாணை பொய்யான செய்தி என்கிறார் டக்ளஸ்


தமிழகம் சூளைமேடு துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் எனக்கு சென்னை உயர்நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது.
வழக்கின் சாட்சிகளையே சாட்சியம் வழங்க வருமாறு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்திருக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினரும், ஈ.பி.டி.பி கட்சியின் தலைவருமான கே.என். டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
விடயம் தொடர்பாக மேலும் அவர் குறிப்பிடுகையில்,
எனக்கு சென்னை உயர்நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. ஆனால் இது தொடர்பாக எவரும் என்னிடம் கேட்டிருக்கவில்லை.
குறித்த சம்பவம் 1986ம் ஆண்டு நடைபெற்றிருந்த நிலையில், மேற்படி சம்பவம் தொடர்பான வழக்கில் சாட்சிகளாக உள்ளவர்களையே எதிர்வரும் தை மாதம் 18ம் திகதி நீதிமன்றுக்கு வந்து சாட்சியம் வழங்குமாறு கேட்கப்பட்டிருக்கின்றது.
குறித்த வழக்கில் எனக்கு பிணை வழங்கப்பட்டு இந்தியாவிலிருந்து வெளியேறலாம். என கூறப்பட்டதன் பின்னதாகவே நான் வெளியேறினேன்.
பின்னர் அந்த வழக்கு கிடப்பில் போடப்பட்ட நிலையில் 2011ம் ஆண்டு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் வழக்கு தவணைகளின்போது நான் வீடியோ வழியாக சாட்சியம் அளிக்கும் அனுமதியை பெற்றிருக்கிறேன்.
எனவே எனக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டதாக வெளியான செய்தி முற்றிலும் உண்மைக்கு மாறானது.
ஈ.பி.டி.பிக்கு எதிரான சாட்சியங்கள் தொடர்பாக குறிப்பிடுகையில்,
காணாமல்போனவர்களை கண்டறிவதற்கான  ஜனாதிபதி ஆணைக்குழு யாழ்.மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சாட்சியங்களை பதிவு செய்திருக்கின்றது.
இந்நிலையில் இதில் எமது கட்சிக்கு எதிரான சாட்சியங்கள் பதியப்பட்டுள்ளமை தொடர்பாக நான் குறித்த ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிப்பேன்.
மேலும் எங்கள் கட்சியின் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்கள் போலியானவை, அவை ஒரு தரப்பினரின் தூண்டுதலின் அடிப்படையில் அவ்வாறான சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
அதற்கான சாட்சியங்களும் எங்களிடம் இருக்கின்றன. மேலும் நாங்கள் ஜனாதிபதியிடமும் கேட்டிருக்கின்றோம். ஆணைக்குழு வெறுமனே மக்களிடம் சாட்சியங்களை பெறுவதுடன் நிற்காமல், அதற்கும் அப்பால் சென்று வழங்கப்படும் சாட்சியங்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்.
அவ்வாறு செய்தால் மட்டுமே பல சிக்கல்களுக்கு தீர்வினை காணமுடியும். என்பதுடன் மக்கள் மத்தியிலும் ஆணைக்குழு மீது நம்பிக்கை உருவாகும்.
இந்நிலையில் எங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தெளிவுபடுத்தல்களை செய்ய வேண்டும்.
இதற்காக நான் ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகி சாட்சியமளிக்க தீர்மானித்துள்ளேன். தற்போது அதற்கான ஒழுங்குகளை நான் செய்து கொண்டிருக்கின்றேன்.
இதேவேளை எம்மீதான குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை என்பதுடன், அது திட்டமிட்டு எங்கள் மீது வழக்கம்போன்றே சேறுபூசும் ஒரு செயற்பாடாகவே அமைந்திருக்கின்றது.
கடந்தகாலங்களில் அமைச்சர் மகேஸ்வரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் கொலைகள் கூட எங்கள் மீது சுமத்தப்பட்டது.
விடுதலைப் புலிகள் யாழ்ப்பாணத்தில் இல்லாத காலத்தில் புலிகளுக்காக இங்கே ஆட்களை கடத்தினார்கள். அது நடந்தது.
மேலும் ஆயுதப் போராட்ட வழியில் இருந்து வந்தவன் என்ற வகையில் பாதிக்கப்பட்டுள்ள எங்கள் மக்களுக்கு ஒரு ஆறுதலை கொடுக்கலாம் என நான் நினைக்கிறேன் என்றார்.

ad

ad