அடுத்த வருடம் ஜனவரி 9ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியல் அமைப்பு பேரவை ஒன்றை உருவாக்குவதற்கான பிரேரணையை
முன்வைக்கவுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நாட்டிற்கு எதிராக இருந்த பல்வேறு குற்றச்சாட்டுகளில் இருந்து மீளக்கூடிய வாய்ப்புகள் கிடைத்துள்ளதாகவும், இந்நிலையில் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணபது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மாகாண சபைத் தேர்தல் புதிய தேர்தல் முறைமைக்கு அமையவே நடைபெறவுள்ளதாகவும், இதனை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ச மற்றும் சந்திரிகா பண்டாரநாயக்க ஆகியோரை இணைத்துக்கொண்டு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மிகப் பலம்பொருந்திய அமைப்பாக களமிறங்கவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.