புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 ஜன., 2016

இன்னுமா தீரவில்லை; இவர்களின் தீராத ஊழல் விளையாட்டு? : கலைஞர்



தி.மு.க. தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில் :

கேள்வி :- அ.தி.மு.க. பொதுக் குழுவில் பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா மின்சாரம் பற்றியெல்லாம் அவருடைய ஆட்சியில் நிறைவாகச் செய்து விட்டதைப் போலவும், மின்மிகை மாநிலமாக தமிழகத்தை ஆக்கி விட்டதைப் போலவும்  பேசியிருக்கிறாரே?

கலைஞர் :- முதலமைச்சர் ஜெயலலிதா பொதுக் குழுவில் பேசிய அதே 31-12-2015 அன்று காலையில் “தி இந்து” நாளிதழில் ஒரு செய்தி வெளிவந்ததை முதலமைச்சர் படித்திருப்பார்! அதன் தலைப்பைப் படித்திருந்தாலே, ஜெயலலிதாவுக்குப் புரிந்திருக்கும். “Tangedco continues to buy power at higher cost”  என்ற தலைப்பிலே அந்தச் செய்தி வந்துள்ளது.  அந்தச் செய்தியின் தமிழாக்கம் வருமாறு:- “தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் தனது நிதிச்சுமை குறித்து அதிகக் கவலை கொண்டதாகத் தெரியவில்லை.  ஆம்; குறைந்த விலைக்கு மின்சாரம் கிடைக்கும்போதும், அதிக விலை கொடுத்து அக்கழகம் மின்சாரத்தை வாங்குகிறது.  தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம், வெளியில் மின்சாரம் வாங்குவதற்காக சில வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது. வெளியில் கிடைக்கும் மின்சாரத்தை குறைந்த விலையில் கிடைப்பதை வாங்குவதற்கு அனைத்து நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு - மெயில் ஆர்டர் டெஸ்பாட்ச் - என்கிற நெறிமுறைகளை உருவாக்கியுள்ளது. அதைக் கடைப்பிடிக்காமல், அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்கப்படுகிறது.  உலக அளவில் “கச்சா” எண்ணெய் விலை குறைந்து கொண்டே இருக்கும் நிலையில்,  அதைப் பயன்படுத்தி மின் உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் ஒன்று; யூனிட் ஒன்றுக்கு ரூ. 4.27க்கு மின்சாரம் வழங்க முன்வந்துள்ளது. ஆனால், தமிழக மின் பகிர்மானக் கழகமோ, வேறு ஒரு நிறுவனத்திடமிருந்து யூனிட் ஒன்று ரூ. 5.05 என்கிற அளவில் மின்சாரத்தை வாங்குகிறது. குறைந்த விலையில் கிடைக்கும் மின்சாரத்தை வாங்காமல் - அதிக விலைக்கு தினசரி 2 கோடி யூனிட் மின்சாரம் சராசரியாக டிசம்பர் 17 முதல் டிசம்பர் 30 வரை வாங்கப்பட்டுள்ளது.    

இதுகுறித்து தமிழ்நாடு மின்வாரிய ஒழுங்கு முறை ஆணையத்தின், ஓய்வு பெற்ற உறுப்பினர் திரு.எஸ். நாகல்சாமி கூறுகையில், மின்சாரத்தைக் குறைந்த விலைக்கு வாங்க வேண்டும் என்கிற ஒழுங்கு முறை ஆணையத்தின் உத்தரவை முறையாகக் கடைப்பிடிப்பதில்லை என்று குற்றஞ்சாட்டியிருக்கிறார். இப்போதுள்ள தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், இவ்வாறு அதிக விலைக்கு மின்சாரம் வாங்கப்படுவது குறித்து ஏன் கண்டுகொள்ளாமல் வாய் மூடியிருக்கிறது என்றே தெரியவில்லை என்று தமிழ்நாடு எரிசக்தி பொறியாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த எஸ். காந்தி கேட்டிருக்கிறார்.
.  
இவ்வாறு “தி இந்து' ஆங்கில நாளேடு அ.தி.மு.க. பொதுக் குழு கூடிய அன்று காலையில் எழுதி வெளியிட்டது.  பொதுக் குழுவில் பேசிய ஜெயலலிதா இதற்கு ஏன் பதில் கூறவில்லை?  “தி. இந்து”  வெளியிட்டிருந்ததை ஜெயலலிதா படிக்கவில்லையா? அல்லது படித்தும், பதில் சொல்ல ஏதும் இல்லாததால், பாராமுகமாக இருந்து விட்டாரா? பதில் சொன்னாலும் சொல்லாவிட்டாலும், நெருப்பை பஞ்சு கொண்டு மூடி விட முடியாதல்லவா?

“தி இந்து” மட்டுமா? இந்த வார “ஆனந்த விகடன்”,  தமிழ்நாடு மின் துறை பொறியாளர் சங்கத் தலைவர்  சா. காந்தி கூறியதை அப்படியே வெளியிட்டிருக்கிறது.  அதன் ஒரு பகுதியில், “தமிழகத்தை மின்மிகை மாநிலமாக மாற்றுவேன் என்று 2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் வீறு கொண்டு அறிவித்தார் ஜெயலலிதா. ஆனால், மின்வெட்டின் கொடுமை இந்த ஆண்டு முழுவதும் தொடர்ந்தது. மக்க ளுக்கு மின்வெட்டு மட்டுமே கண்ணுக்குத் தெரியும். இதற்குள் மிகப் பெரிய மின்சாரச் சூறையாடலே நிகழ்ந்து கொண்டிருக்கிறது.  தனியாரிடமிருந்து மின்சாரத்தை கூடுதல் விலை கொடுத்து வாங்கியதால்,  மின்சார வாரியத்தின் இழப்பு 94,400 கோடி ரூபாயை எட்டிவிட்டது.  வருடம் தோறும் பெரும் இழப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் ஒரே மின்சார வாரியம், இந்தியாவிலேயே தமிழக மின் வாரியம் மட்டும்தான். மின் உற்பத்திக்கான கட்டமைப்பை மேம்படுத்தாமல், கொள்முதல் செய்வதை மட்டுமே அரசு விரும்புகிறது.  கொள்முதல் என்றால், ஊழல் என்றே பொருள்.   மூன்றாண்டுகளுக்கு முன்பு 8,800 கோடி ரூபாய் செலவில் உடன்குடி மின் திட்டத்தை அறிவித்தார் ஜெயலலிதா.  இந்தத் திட்டம் 1,600 மெகாவாட் மின்சாரத்துக்கானது. இப்போது வரை இது தொடங்கப் படவில்லை.  உடன்குடி பற்றி அறிவித்த அந்த ஆண்டிலேயே, தமிழகத்தில் செயல்பாட்டில் இருந்த நான்கு எரிவாயு நிலையங்களில் மூன்று நிலையங்கள், படுமோசமாகப் பழுதடைந்து, ஓராண்டு காலமாக உற்பத்தியும் இல்லாமல் முடங்கின. வாங்க முடியாத எரிவாயுவுக்கு நாள்தோறும் மூன்று கோடி வீதம்  வீணடித்துக் கொண்டிருந்தது அரசு. வழுதூர் இரண்டாம் நிலை மின் திட்டம், கடந்த ஓராண்டுக்கு மேலாக பழுதடைந்த நிலையிலேயே கிடக்கிறது.   இத்தனைக்கும்  கடந்த டிசம்பரில்  100 கோடி ரூபாய் பராமரிப்புச் செலவும் செய்யப்பட்ட புதிய மின் நிலையம் இது.  இது தவிர, தொடங்கியிருக்க வேண்டிய காட்டுப்பள்ளி,  உடன்குடி திட்டங்களின் திறனை 3,200 மெகாவாட்டில் இருந்து, 2,640 மெகாவாட்டாகக் குறைத்து விட்டனர். அப்படிக் குறைக்கப்பட்ட மின் திட்டங்களும் தொடங்கப்படவில்லை. ஆலோசனைக் குழு, ஒப்பந்தப்புள்ளிகள் ரத்து,  நீதிமன்ற வழக்கு என்று இழுத்தடித்துக் கிடக்கிறது.  இன்று தொடங்கினாலும், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகே உற்பத்தியை எதிர்பார்க்க முடியும் என்ற நிலையில், இந்தத் திட்டங்கள் முடங்கிக் கிடக்கின்றன. இப்படி கட்டுமானத்தில் இருந்த அரசுத் திட்டங்களைக் கிடப்பில் போட்டுவிட்டு,  2012, 2013ஆம்  ஆண்டிலேயே  3,300 மெகாவாட்டை 15 ஆண்டு கால கொள்முதலுக்கு ஒப்பந்தம் போட்டுள்ளது, அதுவும் யூனிட் மின்சாரம் 4.91 ரூபாய் என்ற விலையில்! (இந்திய மின்சாரச் சந்தையில் அதிகபட்ச விலையே யூனிட் 3.60 ரூபாய்தான்)” என்று “ஆனந்த விகடனில்” விரிவாகக் கூறப்பட்டுள்ளது.  ஆனால் முதலமைச்சர் ஜெயலலிதா, இந்த உண்மைகளை மறைத்து விட்டுத்தான், அ.தி.மு.க. பொதுக் குழுவில் தமிழ்நாட்டை ஜெயலலிதா மின் மிகை மாநிலமாக மாற்றிவிட்டார் என்று கூறி அவருக்கு பாராட்டும் தெரிவித்து ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி யிருக்கிறார்கள்!  பொய்களுக்கு, போலிப் புகழாரம் என்பது இதுதானோ?

கேள்வி :- தமிழக அரசின் சார்பில் வழங்கப் படும் இலவச வேட்டி சேலையிலே கூட ஜெயலலிதாவின் ஸ்டிக்கர் ஒட்டி கொடுப்பதை, புகைப்படத்தோடு வெளியிட்டிருக் கிறார்களே?

கலைஞர் :  தப்பித் தவறி 2016ஆம் ஆண்டு தேர்தலில், அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால்,  சாலையில் போவோர், வருவோரையெல்லாம் பிடித்து நிறுத்தி, அவர்கள் முதுகிலே ஜெயலலிதாவின் ஸ்டிக்கரை ஒட்டி அனுப்பி விடுவார்கள்! மேலும் தமிழ்நாடு என்று  இப்போதுள்ள பெயரையும் மாற்றி “அம்மா நாடு” என்று வைத்து விடுவார்கள்!  “ஜெயலலிதா ஸ்டிக்கர்”  Made in  “அம்மா நாடு”  என்று உலகப் புகழும் பெற்று விடும்.

கேள்வி :- உளவுத் துறை ஐ.ஜி.,  டேவிட்சன்  தேர்தல் நேரத்தில் திடீரென்று மாற்றப்பட்டிருக்கிறாரே?

கலைஞர் :-  உண்மைகளை மறைத்துப் பேசத் தெரியாதவர் இவர்! தேர்தல் நேரத்தில் முக்கியமான உளவுத் துறை பதவியிலே அவர் இருப்பது சரியாக இருக்குமா?  ஒரு சில மாதங்களுக்கு முன்பு,  உளவுத் துறையின் தலைமைப் பொறுப்பிலே இருந்த அம்ரேஷ் பூஜாரி என்ற ஒரு அதிகாரி, சொத்துக் குவிப்பு வழக்கிலே என்ன தீர்ப்பு வரப்போகிறது என்பதை முன்கூட்டியே சொன்ன காரணத்தினால் மாற்றப்பட்டார் என்று சொல்லப்பட்டது. இப்போது இவர் என்ன சொன்னாரோ?   அ.தி.மு.க. ஆட்சியில், உண்மையைச் சொன்னாலே உபத்திரவம்தான்!

கேள்வி :- அ.தி.மு.க. பொதுக் குழுவிற்கு வருகை தந்த முதலமைச்சர் ஜெயலலிதாவைப் பாராட்டி சாலைகளிலே வைக்கப்பட்ட ஏராளமான விளம்பரப் பலகைகளைப் பற்றி ஏற்கனவே நீங்கள் குற்றஞ்சாட்டியிருந்தீர்கள். அது பற்றி வழக்கு ஒன்றும் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றிருக்கிறதே?

கலைஞர் :- ஆமாம், அந்த வழக்கில் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல்,  நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா ஆகியோர் அடங்கிய அமர்வு, நேற்றையதினம் விசாரணையின் போது,  “டிஜிட்டல் பேனர்கள் வைக்க அனுமதி கேட்டு கொடுக்கப்பட்ட மனுக்கள், அதே நாளில்  பரிசீலிக்கப்பட்டு, அதிகாரிகள் அனுமதி வழங்கியது எப்படி சாத்திய மாகும்?” என்று கேள்வி கேட்டிருக்கிறார். அந்தக் கட்சியின் கொள்கை பரப்பு துணைச் செயலாளராக இருந்தவர், “அத்திப் பூப்போல, ஆடிப் பிறை போல மக்களைச் சந்திப்பதற்கு வீதிக்கு எப்போதாவது வருகிற ஒரு முதல்வர் வந்தால், நாங்கள் ஆர்வம் காரணமாக இதைச் செய்தோம், யானை நடந்து போகும்போது, எறும்புகள் சாகத்தான் செய்யும். பொதுக் குழுங்கிறது கட்சியின் நிர்வாகிகளுக்கு ஒரு திருவிழா” என்றெல்லாம் தொலைக்காட்சிக்கு உண்மைகளையெல்லாம் கூறிவிட்டு, தற்போது அவருடைய பதவி உண்மை பேசிய காரணத்தால் பறிக்கப்பட்டுள்ளது. 110 விளம்பரப் பலகைகள் வைக்க அனுமதி கேட்ட ஒருவரின் மாவட்டச் செயலாளர் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது.  என்னென்னமோ நடக்குது? யாருக்கும் புரியலே?

கேள்வி : மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத் தீர்வை அமைச்சர் நத்தம் விஸ்வநாதனின் உதவியாளர் “டிஸ்மிஸ்” செய்யப்பட்ட விவகாரம் என்ன ஆயிற்று?

கலைஞர் : அவர் யாருக்காக வசூலில் ஈடுபட்டார் என்பதை வெளியே சொல்லி விடாமல் இருப்பதற்காக,  தற்போது பெருந்தொகை கேட்டுக் கொண்டிருக்கிறாராம்! அண்மையில் ஈரோடு அருகே கள்ளத்தனமாக நடந்து வந்த சாராய ஆலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட போதிலும், காவல் துறை அந்த ஆலையை நடத்தியவர்கள் மீது வழக்கு எதுவும் பதிவு செய்ய வில்லை.  காரணம் தற்போது அரசினால் நடவடிக்கை எடுக்கப்பட்ட இந்த உதவியாளர், அந்த ஆலையின் பங்குதாரர்களில் ஒருவராம்.

கேள்வி :-  “அம்மா சிமெண்ட்' என்ற பெயரில் விமரிசையாகத் தொடங்கப்பட்ட திட்டத்தின் மூலமாக  வழங்கப்பட்டு வந்த சிமெண்ட் நிறுத்தப்பட்டு விட்டதாமே?

கலைஞர் : அ.தி.மு.க. ஆட்சியில் அறிவிக்கப்படும் திட்டங்களில் பெரும்பாலானவை  அறிவிப்போடு நின்று விடும்! ஒரு சில திட்டங்கள் பெரும் விளம்பரத்தோடு ஆரம்பமாகும். அதன் ஆயுள், ஒரு சில வாரங்கள் அல்லது ஒரு சில மாதங்கள்தான்! அந்த வரிசையில் “அம்மா சிமெண்ட்”  விநியோகமும் ஆகிவிட்டது போலும்!

கேள்வி :- சென்னை மாநகரில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் சொத்து வரி வசூலில்  சென்னை மாநகராட்சி மக்களைப் பெரிதும் தொந்தரவு செய்வதாக “இந்து” நாளிதழ் பெரிதாகச் செய்தி வெளியிட்டிருக்கிறதே?

கலைஞர் : உண்மைதான்; வெள்ளம் பாதித்த பகுதிகளில், மக்கள் மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருக்கின்ற நிலையில் அவர்களிடம் இவ்வாறு கட்டாயப்படுத்தி, வரிகளை வசூலிப்பதில் அரசு தீவிரம் காட்டக் கூடாது என்று நானும், மற்ற கட்சிகளின் தலைவர்களும் அறிக்கையே கொடுத்துள்ளோம்.  ஆனால் சென்னை மாநகராட்சியில் உள்ள அதிகாரிகள், சென்னையில் குறிப்பாக ஜாபர்கான்பேட்டை, அடையார், சைதாப்பேட்டை, மேற்கு மாம்பலம், நெசப்பாக்கம், தியாகராய நகர், வில்லிவாக்கம், சாலிகிராமம், பெரம்பூர் மற்றும் வளசரவாக்கம் பகுதிகளில் வரி வசூலிக்கும் அதிகாரிகள் பெரிதும் துன்புறுத்துவதாகச் சொல்லியிருக்கிறார்கள்.  அதைத்தான் “இந்து” நாளிதழ் பெரிதாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளது.

கேள்வி :- கடலூர்  மாவட்டம் முழுவதும் மழையினால் பாதிக்கப்பட்டு மக்கள் துன்பத்திற்கு ஆளாகியுள்ள நிலையில், ஆளுங்கட்சியினருக்கு மட்டுமே நிவாரண உதவி வழங்கப்படுவதாகச் செய்திகள் வருகிறதே?

கலைஞர் :- “ப்ரண்ட் லைன்” இதழிலேயே  இந்தச் செய்தி வந்துள்ளது. . “Unequal Relief” அதாவது  “நிவாரணத்தில் பெரும் பாகுபாடு” என்ற தலைப்பில் தொடங்கும் செய்தியில் -  a number of villages  have received none at all  -  Many villages that were equally affected have been left in the lurch -  The residents of Kadampuliyur erected a big banner saying “Thevai Nivaranam” -  In Puliyur. Kattuchavadi and Vasanankuppam villages  under Kurinchipadi  panchayat union most residents whose huts were destroyed said they received no compensation - அதாவது பல கிராமங்களுக்கு நிவாரணம் எதுவும் கிடைக்கவில்லை - பாதிக்கப்பட்ட மேலும் பல கிராமங்கள் தொங்கலிலே விடப்பட்டுள்ளன - காடம்புலியூர் கிராம மக்கள் “தேவை நிவாரணம்” என்ற பெரிய பதாகையையே கிராமத்தில் பெரிதாக வைத்திருக்கிறார்கள் - குறிஞ்சிப்பாடி ஒன்றியத்தில் உள்ள புலியூர், காட்டுச்சாவடி மற்றும் வாசனாங்குப்பம் ஆகிய கிராமங்களில் சேதமடைந்த குடிசைவாசிகளுக்கு இதுவரை எவ்வித நிவாரணமும் கிடைக்கவில்லை என்றெல்லாம் “ப்ரண்ட் லைன்” இதழில் கட்டுரை ஆசிரியர் டி.எஸ். சுப்ரமணியம்  விரிவாக எழுதியிருக்கிறார்.     

கேள்வி :- எண்ணூர் அனல் மின் நிலைய ஒப்பந்த வழக்கு என்ன ஆயிற்று?  அதன் விவரம் என்ன?

கலைஞர் :- 29-3-2012 அன்று முதலமைச்சர் ஜெயலலிதா விதி 110இன் கீழ் சட்டப்பேரவையில்  படித்த அறிக்கையில், “660 மெகாவாட் திறன் கொண்ட எண்ணூர் அனல் மின் விரிவாக்கத் திட்டம் என்னும் ஒரு புதிய திட்டத்தைச் செயல்படுத்த எனது தலைமையிலான அரசு தற்போது முடிவு செய்துள்ளது என்பதை இந்தப் பேரவைக்குத் தெரிவிப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். சுமார் 3,960 கோடி ரூபாய் மதிப்பீட்டில் துவக்கப்படும் இந்த அனல் மின் திட்டம், 2015ஆம் ஆண்டு இறுதிக்குள் தனது உற்பத்தியைத் தொடங்கும்” என்று அறிவித்தார். 2015ஆம் ஆண்டும் முடிந்து விட்டது! என்ன  ஆயிற்று இந்தத் திட்டம்? ஏன் உற்பத்தியைத் தொடங்க வில்லை? என்பதுதான் அ.தி.மு.க. ஆட்சிக்கே உரிய பெருமை. சென்னை எண்ணூர் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் தலா 660 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 யூனிட்டுகளுடன் கூடிய புதிய அனல் மின் நிலையம் அமைக்க தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் ஒப்பந்தப்புள்ளி கோரியது.  இதில் திருச்சியில் உள்ள பாய்லர் ஆலை மற்றும் சீனாவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் ஆகிய இரண்டும் பங்கேற்றன.  இறுதியாக ரூ. 7,788 கோடியில் பாய்லர் ஆலைக்கு ஒப்பந்தம் வழங்கப் பட்டது.  இந்த ஒப்பந்தத்தை எதிர்த்து சீன நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.   ஐகோர்ட் அந்த மனுவினைத் தள்ளுபடி செய்து.  இதை எதிர்த்து சீன நிறுவனம் சென்னை ஐகோர்ட் டிவிஷன் பெஞ்சில் மேல்முறையீடு செய்து, அந்த அமர்வு இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்து உத்தர விட்டது. அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் மேல் முறையீடு செய்து, அந்த வழக்கில்தான் உச்ச நீதிமன்றம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் 3 வல்லுனர்களின் பெயர்களை நீதிமன்றத்துக்குப் பரிந்துரைக்க வேண்டுமென்று தெரிவித்திருக்கிறது.இவ்வாறு கூறியுள்ளார்.

ad

ad