புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

6 ஜூலை, 2016

இந்தியாவின் சானியா மிர்சா–சுவிட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி 3–வது சுற்றை எட்டியது.

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் சோங்கா, செரீனா 4–வது சுற்றுக்கு முன்னேறினர். இரட்டையரில் சானியா ஜோடியும் வெற்றி கண்டது.

சோங்காவின் போராட்டம்
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டன் நகரில் நடந்து வருகிறது.
இதில் நேற்று ஆண்கள் ஒற்றையர் 3–வது சுற்று ஆட்டம் ஒன்றில் பிரான்சின் வில்பிரட் சோங்கா, அமெரிக்காவின் ஜான் இஸ்னரை சந்தித்தார். ஜான் இஸ்னருக்கு எதிராக ஒரு யுத்தமே நடத்திய சோங்கா 4 மணி 24 நிமிடம் போராடி 6–7 (3), 3–6, 7–6 (5), 6–2, 19–17 என்ற செட் கணக்கில் இஸ்னரை வீழ்த்தி 4–வது சுற்றுக்கு முன்னேறினார். இதில் கடைசி செட் மட்டும் 2 மணி 8 நிமிடங்கள் நீடித்தது. ஒரு கட்டத்தில் இஸ்னருக்கும் ஆட்டத்தை வெல்லக்கூடிய ‘மேட்ச் பாய்ண்ட்’ வாய்ப்பு வந்தது. ஆனால் அந்த ஆபத்தில் இருந்து தன்னை தற்காத்துக்கொண்ட சோங்கா, ஒரு வழியாக இஸ்னரின் சவாலை முடிவுக்கு கொண்டு வந்தார்.
பெயஸ் ஜோடி தோல்வி
மற்றொரு ஆட்டத்தில் அர்ஜென்டினா வீரர் ஜூவான் மார்ட்டின் டெல் போட்ரோ 7–6 (4), 6–7 (6), 5–7, 1–6 என்ற செட் கணக்கில் பிரான்சின் லுகாஸ் பாவ்லேவிடம் தோல்வி அடைந்தார். ஆஸ்திரேலியாவின் நிக் கைர்ஜியோஸ், பிரான்சின் ரிச்சர்ட் கேஸ்கியூட் ஆகியோரும் 4–வது சுற்றை எட்டினர்.
இதன் இரட்டையர் 2–வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் லியாண்டர் பெயஸ்– போலந்தின் மார்சின் மாட்கவ்ஸ்கி இணை 3–6, 2–6 என்ற நேர் செட்டில் கோன்டினென் (பின்லாந்து)– ஜான் பீயர்ஸ் (ஆஸ்திரேலியா) ஜோடியிடம் வீழ்ந்தது.
செரீனா கலக்கல்
பெண்கள் ஒற்றையர் 3–வது சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனும், நம்பர் ஒன் வீராங்கனையுமான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் 6–3, 6–0 என்ற நேர் செட் கணக்கில் ஜெர்மனியின் அன்னிகா பெக்கை பந்தாடினார். 51 நிமிடங்கள் மட்டுமே இந்த ஆட்டம் நடந்தது. கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் செரீனாவின் 300–வது வெற்றியாகவும் இது அமைந்தது.
மற்ற ஆட்டங்களில் ரஷியாவின் குஸ்னெட்சோவா 6–7 (1–7), 6–2, 8–6 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் ஸ்டீபன்சையும், ரஷியாவின் பாவ்லிசென்கோவா 6–3, 6–2 என்ற நேர் செட்டில் சுவிட்சர்லாந்தின் பாக்சின்ஸ்கியையும் தோற்கடித்தனர். குஸ்னெட்சோவா 4–வது சுற்றில் செரீனாவை எதிர்கொள்கிறார்.
சானியா இணை
பெண்கள் இரட்டையர் 2–வது சுற்றில் நம்பர் ஒன் கூட்டணியான இந்தியாவின் சானியா மிர்சா–சுவிட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி 6–3, 6–1 என்ற நேர் செட் கணக்கில் ஜப்பானின் ஹோசுமி– மியூ கட்டா இணையை தோற்கடித்து 3–வது சுற்றை எட்டியது.