புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 ஜூலை, 2016

கழுத்தை அறுத்த போலீஸ், கதையை திசை திருப்புகிறதா?' -சுவாதி கொலையின் 8 மர்மங்கள்

நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் படுகொலை செய்யப்பட்ட மென்பொறியாளர் சுவாதி வழக்கின்
, அடுத்தடுத்த நகர்வுகள் விசாரணையின் போக்கையே கேள்விக்குட்படுத்தும் விதமாக ஆகிக்கொண்டிருக்கின்றன. ' ராம்குமார் பேசிவிடக் கூடாது என்பதற்காக அவரது கழுத்தை அறுத்தது மட்டுமல்ல, ராம்குமாரின் வாக்குமூலமே சினிமா வசனத்தை மிஞ்சும் வகையில் உள்ளது' என அதிர்ச்சி கிளப்புகின்றனர் வழக்கறிஞர்கள். 

சுவாதி படுகொலை வழக்கில் செங்கோட்டையைச் சேர்ந்த ராம்குமார், கடந்த வெள்ளிக்கிழமை அன்று போலீஸாரால் கைது செய்யப்பட்டார். கைது செய்வதற்காக போலீஸ் வந்துவிட்ட சூழலை உணர்ந்து கொண்ட ராம்குமார், கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றதாக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு விண்ணப்பித்த ராம்குமார், 'சுவாதி கொலைக்கும் எனக்கும் தொடர்பில்லை. காவல்துறையினருடன் வந்த நபர்களே கழுத்தை அறுத்ததாக' தெரிவித்துள்ளதாக வெளியான தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
ஜாமீன் மனு மீதான விசாரணையில் ஆஜரான வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தியிடம் நாம் பேசியபோது, " சுவாதி கொலையைப் பொறுத்தவரையில், ஏராளமான சந்தேகங்கள் எழுகின்றன. ராம்குமார் கொடுத்ததாகச் சொல்லப்படும் வாக்குமூலம், பாரதிராஜாவின் சினிமா வசனத்தையே மிஞ்சுகிறது. போலீஸார் யாரோ ஒருவரைக் காப்பாற்ற முயற்சி செய்கின்றனர் என்பது தெளிவாகத் தெரிகிறது" என்றவர், வழக்கு தொடர்பாக எழும் சந்தேகங்களை நம்முன் பட்டியலிட்டார். 

1. நெல்லை மருத்துவமனையில் இருந்தபோது, மாஜிஸ்திரேட் முன்னிலையில் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். போலீஸார் எழுதிய தாள்களில் ராம்குமார் கையெழுத்துப் போட்டிருக்கிறார். அந்தப் பேப்பரின் இறுதியில், 'படித்துப் பார்த்தேன் சரி' என்ற வார்த்தை இருக்கிறது. அந்த இடத்தில் ராம்குமார் கையெழுத்துப் போட்டிருக்கிறார். அந்த வாக்குமூலத்தில் மூன்று மாதங்களுக்கு முன்பு வேலை தேடி சென்னை வந்ததாகவும், பிரபல ஜவுளிக்கடையில் வேலை பார்த்தாகவும் சொல்கிறார். அப்போது ஃபேஸ்புக் மூலம் சுவாதியின் தொடர்பு கிடைத்ததாகவும் சொல்கிறார்.  மூன்று மாதத்திற்குள் காதல் உருவாகி, கொலை வரைக்கும் செல்லுமா? 

2. அதில், இரண்டு முறை ரயில்வே ஸ்டேஷன் வாசலில் வைத்தே அடித்ததாகவும், தன்னை அவமானப்படுத்தியதால் வாயை வெட்ட வேண்டும் என நண்பர்கள் சொன்னதாகவும், அதன்பேரில் அரிவாளை அவர்கள் கொடுத்ததாகவும் சொல்கிறார். யார் அந்த நண்பர்கள் என எந்த இடத்திலும் தெரிவிக்கப்படவில்லை. இது ஏன்? 

3. சுவாதி உயிரோடு இருக்கக் கூடாது என நினைத்த நபர்கள்தான், ராம்குமாரை ஒரு கருவியாகப் பயன்படுத்தியுள்ளனர். செங்கோட்டை பகுதியில் மிகுந்த சாதுவான பையனாகத்தான் ராம்குமார் இருந்திருக்கிறார். இவரை சிலர் பயன்படுத்தியிருக்க வாய்ப்பு உள்ளது. அவர்களைக் காப்பாற்றும் முயற்சியில் காவல்துறை இறங்கியுள்ளதா? 

4. மூன்று மாதங்களுக்கு முன்பு, சுவாதியைக் கொலை செய்ய வேண்டும் என்பதற்காகவே ராம்குமார் சென்னை வந்திருக்க வாய்ப்பு அதிகம். இவருக்குப் பின்னால் இருக்கும் மர்ம நபர்கள் யார்? 

5. நள்ளிரவில் கைது செய்யச் சென்றபோது, பிளேடால் ராம்குமார் அறுத்துக் கொள்ளும் காட்சி என ஒரு படம் வெளியானது. கழுத்தில் அறுபட்டிருக்கும் பகுதியில் இன்னும் கொஞ்சம் ஆழமாக வெட்டுப்பட்டிருந்தால், ராம்குமாரால் பேசியிருக்கவே முடியாது. மிகத் துல்லியமாக கழுத்துப் பகுதியில் வெட்டியிருக்கிறார்கள். அவர் பேசவே கூடாது என போலீஸார் முடிவு செய்தார்களா? அந்த நள்ளிரவில் இந்தக் காட்சியை கேமராவில் படம் பிடித்தது யார்? 

6. 'ராம்குமார்தான் குற்றவாளி, வேறு யாருமில்லை' என கமிஷனர் ராஜேந்திரன் உடனே வெளியிட வேண்டிய கட்டாயம் என்ன? சுவாதியின் பெற்றோரை பேச விடாமல் தடுப்பது யார்? 

7. வீடியோ பதிவில், 'கொலையாளி எனச் சொல்லப்படும் நபரும் ராம்குமாரும் ஒருவர்தான்' என தடய அறிவியல் துறை ஆய்வு செய்து அறிக்கை கொடுக்காதபோது, இருவரும் ஒருவர்தான் என்ற முடிவுக்குக் காவல்துறை எப்படி வந்தது? 

8. தனியார் மென்பொருள் நிறுவனத்தில், முதன்முதலாக மைசூருவில் வேலை பார்த்திருக்கிறார் சுவாதி. கொலைக்கான பின்னணி அங்கிருந்தே தொடங்குகிறதா? மூன்று மாதங்களாக ஒருவர் பின் தொடர்கிறார் என்பது தெரிந்தும் அவரது பெற்றோரின் கவனத்திற்கு இந்த விவகாரம் வரவில்லையா? காவல்துறையில் சுவாதி புகார் தெரிவிக்காதது ஏன்? பி.ஈ படிப்பை பாதியில் நிறுத்திய ராம்குமாரை, இந்தக் கொலைத் திட்டத்திற்காகத் தயார்படுத்தியிருக்கிறார்கள் என வலுவான சந்தேகம் எழுகிறது. சுவாதி உயிரோடு இருக்கக் கூடாது எனத் திட்டமிட்டவர்கள் யார்? 

-என வழக்கின் குளறுபடிகளை நம்மிடம் வரிசைப்படுத்திய வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி, இறுதியாக, " நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் காலை நேரம் இந்தப் படுகொலை அரங்கேறியிருக்கிறது. இந்த வழக்கில் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. அவை அனைத்திற்குமான விடை வெளியில் வர வேண்டும். இனியும் இதுபோன்ற கொலைகள் நடந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில், அரசுக்கு உதவி செய்யவே இந்த வழக்கில் ஆஜராகியுள்ளேன். சுவாதி கொலைக்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்" என்றார் உறுதியாக. 

ad

ad